ஒரு பக்கமாய் சாய்ந்து எரியும் விளக்கு … !

 
1
ள்ளூர இருக்கிறது அந்த வலி
தாய்வீடு பற்றி –
பெண்களைப்போல ஆண்களுக்கும்;
என்னதான் உயிரோடு ஒன்றினாலும்
தேனில் கலக்கும் கசப்புபோல்
கலந்துதான் போகிறது அந்த விஷம்,
என் அப்பா என் அம்மா
என் வீடென – என்னதான் பார்த்தாலும்
தன் வீட்டின் அக்கறை எப்படியோ அவளுக்கு
முன்னதாகியே விடுகிறது;
அதுசரி, அக்கறைதானே என்றுதான்
விட்டுவிட்டேன் நானும், அதனாலோ என்னவோ
என் வீட்டு உறவுகளின்னும்
பிரிந்தேக் கிடக்கின்றன!!
————————————————————————————–
2
நீ
செருப்பு வாங்கிக் கொண்டாய்
உன் தங்கைக்கும்
சேர்த்து நான் வாங்கினேன்,
உனக்கென ஒரு
புடவை எடுத்துக் கொண்டாய்
உன் அம்மாவிற்கும் ஒரு புடவை எடுத்தேன்,
அப்பாவிற்கு வேட்டியும் சட்டையும்
வேண்டுமென்றார், உன் அப்பாவிற்கும் ஒன்றைச்
சேர்த்தே வாங்கினேன்,
எதிலும் எனக்குப் பாகுபாடில்லை – உனக்கு
எல்லாவற்றிலும் இருக்கிறதென்பதை – நீ அந்த
சட்டையை பிரித்து
திருப்பி திருப்பிப் பார்க்கையில்
புரிந்துக் கொண்டேன்!
————————————————————————————–
3
ப்பாவிற்கு நீயென்றால்
கொல்லைப் பாசம்,
ஆனால் ஒரு குரல்போட்டு அழைத்ததும்
நீ ஓடிச்சென்று நின்ற இடம்; உன்
அப்பா அழைத்த
இடமாகவே இருந்தது!
————————————————————————————–
4
ருக்குப் போகையில்
எல்லோருக்கும் என்னென்னவோ
வாங்கத் தோணும்,
எனக்குப் போலவே உனக்கும்
கனவுகள் கூடும்..,
ஆனாலும்,
அதிலும் அடிப்பட்டுப் போயிருக்கும்
என் கனவுகள்..
————————————————————————————–
5
ன் பொண்ணு
என் பொண்ணுன்னு சொல்ற
என் அம்மாவைவிட –
உனைப் பெற்றவளாக உன்
முன்வந்து நிற்கும் நம் அம்மாவிடம்
எனக்கெந்த வேறுபாடுமில்லை,
ஆனாலும்,
என்னம்மா பாவம் என்பதான ஒரு
வருத்தமெனக்கு!!
————————————————————————————–
6
வே
ளைவேளைக்கு
சோறு போட்டாய்,
தண்ணீர் சுடவைத்து காலாற
ஊற்றினாய்,
உடம்பு வலித்தால் தைலம் தடவி
சுலுக்கெடுத்துவிட்டாய்,
வீடுவாசல் பெருக்கி கோலமிட்டு
அழகுபடுத்தினாய் –
ஆனாலும்
உன் வியர்வையால் நனைந்த நம் வீடு
பாசத்தால் அத்தனை
நிறையவேயில்லை..
————————————————————————————–
7
நீ
மூச்சுக்கு முன்னூறுமுறை காட்டினாய் – நீ
வீட்டிலிருந்து கொண்டுவந்தப்
பொருட்களை,
நான் ஒருமுறையேனும்
கேட்டுவிட நினைக்கிறேன் – அம்மா
வாங்கித் தந்த அந்த புடவைப் பற்றி,
உனக்குப் பிடித்த நிறம்தான் என்றாலும்
உனக்குப் பிடித்த புடவைதான் என்றாலும்
அதில் வேறு ஏதோ ஒன்று உனக்கு
ஒட்டவேயில்லை,
உண்மையில்,
நீ உடுத்தாத அந்த புடவையிலிருந்துதான்
கிழிகிறது –
அந்த அம்மாவின் பிள்ளைக்கான மனசு!!
————————————————————————————–
8
ன்னதான் சிரித்து சிரித்துப்
பேசினாலும்
பழகினாலும்
உன் அன்பின் உயிர்ப்பு நிறைந்த அந்த
ஒரு சொட்டுக் கண்ணீர் –
அவர்களின் காலடியிலேயேச் சொட்டியது,
நான் –
அதையும் இயல்பென்று கடந்துசெல்கிறேன்..
————————————————————————————–
9
போதும் போதும்மா
பொழுதுபோயி தலையில தண்ணி ஊத்தாதன்னு
எத்தனை முறைம்மா உனக்குச் சொல்றது’ன்னு வருந்தி
துண்டெடுத்து உன் தலை துவட்டிவிட்ட என்
அம்மாவின் வார்த்தைகள் உன்
தூக்கத்தைக் கெடுத்தன;
‘என்னடி மணியிப்போ…., வா வா
உடம்பொன்னும் ஊசிப் போகாது
நாளைக்குக் குளி’ என்று சொல்லி
அதட்டிக் கதவடைத்துவிட்டுப் போன
உன் அம்மாவின் வார்த்தைகள் உனக்கு
அக்கறை யாயின’ எனும்
மனப்போக்கில்தான் –
ஒரு காலபெருவெள்ளம் பிளவு பட்டிருக்கவேண்டும்!
————————————————————————————–
10
ண்டவாளத்தின் இரு தடம்போல
சேர்ந்தே பிரிந்தும்
பிரிந்தே சேர்ந்தும் தானிருக்கிறது – நம்மிரு
குடும்பத்திற்கான மனசு;
என் வீட்டுத் தோட்டத்தைக்
காட்டிலும், அழகான பூக்கள் உனக்கு
உன் வீட்டு வாசலிலில் மட்டுமேப்
பூத்துக்கிடந்தன;
என் வீட்டு மாடியில் தெரியும்
சூரியனை விட – உனக்கு
உன் வீட்டு ஜன்னல் வழியேத் தெரியும் வெளிச்சம்
மிக பிரகாசமாக இருந்தது;
இங்கே தேனில் அரிசி வேகவைத்து
சமைத்தாலும், அதைவிட
உன் வீட்டுச் சமையலிலிருந்து சிந்தும்
சோற்றுப் பருக்கைகூட உனக்கு இனிப்பாகவே பட்டன;
எதற்குத் தான் இப்படி இழுத்து
ஒரு பக்கமாக கட்டப்பட்டதோ – இக்
குடும்பத்தின் மூலச் சங்கிலி…’ என்று அழாமல்
உடையும் மனசை விதியென்று
தேற்றிக்கொள்ள முடியவில்லை என்னால்
எங்கேனும் அறுபட்டு
எங்கேனும் போய்த்தொலையட்டும் அதற்கான
அதன் புள்ளியில்’ என விட்டேவிட்டேன்;
அது சாய்ந்து
அதன் விளக்கு சாய்ந்து
ஒரு பக்கமாகவே எரிகிறது திரி
எங்கோ ஒரு பக்கம் இருட்டாகவே
மூடியும் திறந்தும் கிடக்கிறது வீடுகள்..

வித்யாசாகர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன