மௌனியுடன்…

 
சிதம்பரம் 
1969-1971(பிறகும் விட்டு விட்டு)
சில ஆண்டுகளுக்கு முன் நண்பர் அழகிய சிங்கர் அவர்களை 
சென்னை புத்தகக் கண்காட்சி ஒன்றில் பார்த்தேன் . நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் சென்னைக்கு வருகிறேன். என் தம்பி சேகருடன் ஸ்டால் ஸ்டாலாகச் செல்கையில் பார்த்தேன். வங்கிப் பெயரைச்சொல்லி அழைத்தேன். என்னைத்தெரிகிறதா என்றேன். 
தியாகராஜன் தானே – ஏன் ஞாபகமில்லாமல் என்றார் ? 
 
எப்படி என்றேன். 
 
இந்தியன் வங்கியைச் சொல்லட்டுமா ? இல்லை தொழில் கவிதையைச் சொல்லட்டுமா என்றார்.
 
தூக்கிவாரிப் போட்டது.
 
எனக்கு ஒரு கவிதை. 
 
ஆனால் தொகுப்பாசிரியரான அவருக்கு – அந்தத் தொகுப்பில் குறைந்தது ஐநூறு கவிதைகளாவது இருந்திருக்கும் என நினைக்கிறேன். என்னுடையதோ ஒன்றே ஒன்று. கணையாழியில் வெளியானது என்று நினைப்பு. 
சிறிது அரட்டை – வங்கி, டிரான்ஸ்பர் பாலிசி பற்றி, இரண்டாண்டு ரூரல் கட்டாயம் பற்றி, புத்தகங்கள், அவரது இதழ் பற்றி..
நானும் அழகியசிங்கரும் இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் வெகு அரிதாகவே அதுவும் சில மணித்துளிகளே சந்தித்துப் பேசியிருப்போம்- அவரது வேலை அப்படி; என்னுடையது பர்சனல் அசிஸ்டன்ட் என்ற உத்தியோகம். அந்த சில மணித்துளிகளில் பேசிய வற்றை கிட்ட தட்ட இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் கழித்து… 
கொக்குக்கு ஒண்னே மதி … 
 
ஆரியக் கூத்து ஆடினாலும், கண்ணே காரியத்திலே கண்ணாயிரு ..
 
அழகியசிங்கர் என்னுடைய மௌனி நாட்களைப் பற்றி மீண்டும் நினைவு படுத்தி அதைப் பற்றி எழுதினால்  என்ன என்று கேட்டார். 
இது நடந்தே பல வருஷங்கள் ஆகின்றன . நான் மௌனியுடன் கழித்த நாட்களோ 69-70 களில்.
அழகியசிங்கர் கேட்டபோது நான் சரி என்று சொல்லவில்லை; இருந்தாலும் அது உள்ளுக்குள்ளே நமநம என்று பற்றிக்கொண்டிருந்தது என்றே தோன்றுகிறது.
1969 என்பது நான் கடலூரில் டிக்ரீ முடித்து சிதம்பரத்திற்கு எம் ஏ படிக்க என்று வந்த வருஷம். ஆங்கில இலக்கியம். 
ஜெயகாந்தனின் தீவிர ரசிகன்- அப்போதெல்லாம் எல்லோரும் தான். தவிரவும் அப்படிச் சொல்லுவது அப்போது பாஷனில் இருந்தது. தற்போதைய ஷா ருக் கான் போல. ஜெயகாந்தன் ரசிகர்களோ ஷாருக்கின் ரசிகர்களோ கோபிக்க வேண்டாம். பாபுலாரிடிக்காகச் சொன்னேன். 
மௌனி சார் – அப்படித்தான் அவரை அப்போது அழைப்பது வழக்கம். ஏன் என்று தெரியாது. ஒருவேளை காலேஜில் அழைத்த பழக்க தோஷமோ என்னவோ. 
அப்படி சார் போடுவதில் மௌனிக்குப் பெரிய ஆட்சேபனை – சத்தமான ஆட்சேபனை- இருந்தது என்னவோ வாஸ்தவம் தான். ஆனால் இருவது வயது சிறுவனின் (என்னுடைய) ரிபீடட் இன்னொசென்ட் சாரை அவரால் கடைசி வரை நிறுத்தவே முடியாமல் போயிற்று.
மௌனிசாரை நான் வெகுநாட்கள் அறியவே இல்லை. அவர் எதித்த வீட்டிலேயே இருந்தபோதிலும். யாரோ ஒரு பெரியவர் – பட்டை பட்டையாக வீபூதியுடன், மேலே ஒரு அங்கவஸ்திரம் போட்டுக்கொண்டு அந்த வீட்டிற்குள் வந்து போவதைப் பார்த்திருக்கிறேன்- மௌனி என்று அறியாமல்.
முதல் அறிமுகம் ஒரு ” get out ” லே முடிந்தது. சுர்ரென்று முகம் சிவந்து ஆள் காட்டி விரல் நீட்டி, நல்ல வேளையாக வெளியே போடா கழுதை என்று தமிழில் சொல்லாமல் ( என்ன கொறைஞ்சா போயுடும் ? அப்போ என்னவோ அது பெரிய கன்செஷன் என்றே இருந்தது), ஆங்கிலத்தில் get out என்று கொஞ்சம் உரத்த குரலில் சொன்னார். பயந்து கொண்டு வெளியே ஓடி ரோடைக் க்ராஸ் செய்து என் விட்டிற்குள் நுழைந்து விட்டேன். .
ஆங்கிலத்தில் சொல்லுவார்களே அது போல – பதுங்கிக்கொண்டேன். (I went to the rear most part of the house which used to touch the temple wall in that “car street” in that “temple city”).
நிஜமாகச் சொல்லப்போனால் என்னுடைய கெட் அவுட்-க்கு ஜெயகாந்தனே காரணம். ஆனால் ஜெயகாந்தனுக்கு இது தெரிய வாய்ப்பில்லை – அப்போதும், எப்போதுமே. 

“மௌனியுடன்…” இல் ஒரு கருத்து உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன