இப்பொழுது
கற்சிலையின் பாரம் உருகிக் கரைந்ததில்
புதியதொரு ஜனனம்
காற்றைப்போல் மென்மை
அச்சிசுவின் காலெட்டில்.
நேற்று விழுந்த சருகுகள் நீருக்கு
நிறம் தரும்.
சுவை மாற
அலைகளும் உறங்காது
உடனே புதிய ஊற்றுக்களின்
கதவைத் தட்டு.
சற்றுமுன் சிறுவிரல்களில் தந்த
மலர்
இப்பொழுது வாடும்
மாற்று புதியதொன்றை மணத்துடன்
நாளைக்கென்று நீளாத
தெருக்களில் நடக்கவிடு
பார்வை விரிய பாதை வளரட்டும்
முன்பே ஒன்றிருந்தால் –
உடைத்த கைகள், உளி,
கல்துகள், கண்ணீர்,
இடது முலையில் இதழ்கள்
சக்கரம், நெரிசல்,
மரங்கள்,
கார்கள், கார்பன் மோனாக்சைட்,
விடியலில் பறவைகளின் குரல்,
எல்லாமே
பளிச்சென்று ஜ்வலிக்க
கண்முன்
எப்பொழுதும் தா.
(டிசம்பர் 1978 ஜனவரி 1979)