ழ 5வது இதழ்
டிசம்பர் 1978 ஜனவரி 1979
யாரோ காலமானார் என்ற செய்தி
என் எதிரில்
நட்சத்திரமாகத் தொங்குகிறது
காலமென முதலில் உணர்ந்தவன்
கபாலச் சூடு பொரியும்
ஆன்மை நிறைந்தவனாக இருந்திருப்பான்
சில சமயத்தில் தோன்றுகிறது
காலம் நிர்ணயிக்கப் பட்டிருப்பது போல
ஆனால் பற்ற முடியாமல்
நழுவிப் போகிறது.
எங்கேயோ காத்திருக்கிறது?
காதலுடன் மெளனம் சாதிக்கிறது
காலம் காலமாகக்
கடல் ஒலிக்கிறது வெற்று
வெளியில் மேகம் சஞ்சரிக்கிறது கனத்த
காலப் பிரக்ஞையை எனக்குள் விதைத்து
விட்டார்கள். எவ்வளவோ காலம்
கடந்தும் அறிந்து கொள்ள என்னவென்று
அது-முளைக்கவே இல்லை. ஆனால்
விலகாத கிரஹணமாக என்
எதிரில்
தொங்கிக் கொண்டேதானிருக்கிறது
யாரோ காலமான செய்தி.
நானும் ஒரு காலத்தில்
காலமாகி விடுவேனோ என்பதில்
மட்டும் முளைத்து விடுகிற
பயம்
சொட்டுச் சொட்டாய் உதிரக்
காத்திருக்கிறது – காலம் வராமல்…….
இந்தக் கவிதையின் காலமும் 40 ஆகி விட்டது. ஆனால் கவிதையான அது ஒவ்வொருவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது… நீடித்த ஆயுளுடன்
காலத்தின் வெவ்வேறு பரிமாணங்களும் ஒவ்வொரு மனித உணர்ச்சிகளோடு பின்னப்பட்டு நெளிந்தோடுகிறது சரடு என..
யாரோ காலமானார் என்பது காலத்தை ஒரு நட்சத்திரமென தொங்கச் செய்யும் விசித்திரம் கவிஞனுக்கே உரிய பிரபஞ்சத்தில் சாத்தியமாகி விடுகிறது..
வாழ்த்தும் வணக்கமும்..