ராமலக்ஷ்மி
வாழ்க்கை ஏட்டின்
வாசித்த முடித்த பக்கங்கள்
காற்றில் படபடக்கையில்
கண்ணில் மாட்டுகிற
பரம பத ஏற்ற இறக்கங்கள்
தாய உருட்டல்களில்
வாங்கிய வெட்டுக்களாகச்
சில வருத்தங்கள்
இலகுவாய் தாவிக் கடந்த
பாண்டிக் கட்டங்களாகச்
சில சந்தோஷங்கள்
பல்லாங்குழியில்
வெற்றிடம் துடைத்தோ
‘பசு’வெனக் கூவியோ
வெள்ளைச் சோழிகளை
அள்ளிய குதூகலங்கள்
நேர்மைத் திறமற்ற
கண்ணாமூச்சித் துரோகங்கள்
பம்பரத் தலைக்குள்
நுழைகிற ஆணிகளாக
நெஞ்சைத் துளைத்த பிரிவுகள்
விண்ணைத் தொட்ட ஆனந்தமாக
விரல்நுனியில் பிடி இருக்க
உலவ விட்டப் பட்டங்கள்
கணநேரக் களிப்பைத் தந்த
வெற்றிக்காகக்
கட்டம் கட்டமாகக்
காய்நகர்த்திய உறுத்தல்கள்
கல்லா மண்ணா..
வாழ்க்கை பொறிக்கப்படுமா
மண்ணோடு மறையுமா
கேள்வியில் தொடங்கிய வேள்விகள்
காலம் வர்ணனையுடன்
வரைந்து வைத்த குறிப்புகளில்
அடிக்கோடிட்டுப் போற்றியும்
அறவே மறக்க விரும்பியுமாய்
வாழ்க்கை வரிகள்…
எவற்றாலும் எவருக்கும்
வற்றுவதாகத் தெரியவில்லை
ஆட்டத்தைத் தொடரும் ஆர்வமும்
அடுத்த நாளை வாசிக்கும் ஆவலும்
சிறப்பான
அல்லது
இன்னும் சிறப்பான
ஏதோ ஒன்று காத்திருக்கிறது
என்கிறதான எதிர்பார்ப்பில்.
*** ***
அருமை.
சிறு திருத்தம். முதல் பாராவில் " பக்கள்" என்று இருக்கிறது. அது பக்கங்கள் என இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
நன்றி மோகன் குமார்.
தவறு என்னுடையதே. கவனிக்காமல் அனுப்பி விட்டிருக்கிறேன். திருத்தத்திற்கும் நன்றி.
வாழ்க்கையின் வெற்றியிலும் தோல்வியிலும் ஒவ்வொரு கிராமீய விளையாட்டைச் சொல்லி வாழ்க்கையின் தத்துவத்தைச் சொல்லுகிற அருமையானக் கவிதை.. மகிழ்ச்சிகள்.. வாழ்த்துக்கள்.பம்பரத் தலைக்குள்
நுழைகிற ஆணிகளாக….
வரிகள் ஆழமாய் அழுத்தமாய் இருக்கின்றன.
நன்றி நீலகண்டன்.
excellent Ramalakshmi.
நன்றி வல்லிம்மா.