மிகக் கவனமாக
கீழிருந்து ஆரம்பித்து
மெல்லத் தோள் வரைக்கும்
தோழமையாய் தொடர்ந்து
தலை தடவி
சாதுரியமாய் மூளை புகுந்து
அரவணைத்தது சாட்டை
புதுப் பம்பரத்தை
இறுக்கமாக..
அணைப்பின் கதகதப்பில்
கிடைத்த பாதுகாப்பு உணர்வில்
சிலிர்த்துப் பரவசமாகிய
பச்சிளம் பம்பரம்
களத்தில் இறங்கத் தயாரானது
துடிப்பாக..
இலாவகமாய் இழுத்துவிட்ட கயிறு
விலகி நின்று வேடிக்கை பார்க்க
வீரியமாய் சுழலாயிற்று
தன் வசீகரத்தில் தானே மயங்கி
பார்ப்பவர் வியக்கும் வண்ணமாக..
விசை குறைந்து சாயும்முன்
உடனுக்குடன் தூக்கி
உச்சிமுகர்ந்து பாராட்டி
ஒவ்வொரு ஆட்டத்துக்கும்
’அழகியவீரன் நீ’யென ஆர்ப்பரித்து
அனுப்புகின்ற சாட்டையைத்
துதிக்கின்ற விசுவாசியாக..
காலமுள் சிரித்தபடி நகர
கயிற்றின் கணக்குகள்
புரியாமல் ஆடியோடியதில்
கூர்முனை மழுங்கி
வண்ணங்கள் சோபை இழக்க
வனப்பைத் தொலைத்துத்
தோற்கத் தொடங்கியது பம்பரம்
சபையிலே தள்ளாடி..
மழுங்கிய முனைக்கு
மருத்துவம் செய்யும் முனைப்போ
அதுவரையிலும் பெற்ற உழைப்புக்கு
இரங்கும் மனமோ
எப்போதும் கொண்டிராத சாட்டை
வேறு பளபளத்த பம்பரங்கள் தேடி..
இக்கணத்திலும்
வட்டமிடும் பருந்துகளாய்
வான்வெளியை நிறைத்து
பசியோடு கருநாகச் சாட்டைகள்..
மாட்டுவதற்கென்றே
முட்டை ஓடு விட்டு வரும்
அறியாக் குஞ்சுகளாய்
பூமியெங்கும் அழகிய வீரர்கள்..!
***
மிக அருமையான கவிதை… பம்பரம் சுற்றுகிற அழகு கவிதையிலும் நேர்த்தியாய்
பட்டமும் பம்பரமும் கயிற்றில் ஆடுகிறது
ஒன்று விடுபட்டால் ,ஆபத்து .
மற்றது விடுபட்டால்தான். ஆட்டம் .
அருமையான பம்பரம்……சுழன்று ஆடி எல்லோர் கவனத்தையும் ஈர்க்கிறது
அருமையான கவிதை.. எழுத்தில் நல்ல மாற்றம். வாழ்த்துகள்
சாட்டை இல்லாத பம்பரங்கள்.
ஆசிரியருக்கும், கருத்தளித்த அனைவருக்கும் என் நன்றி.