நான் நான்காம் வகுப்பு முடிய திருச்சி ஜில்லாவில் லால்குடி தாலுகா ஆங்கரை என்னும் சிற்றூரில் படித்தேன். நான் படித்த பள்ளிக்கூடத்தில் ஐந்து வகுப்பு வரையே உண்டு. கிட்டத்தட்ட 200 மாணவர்கள் படித்தார்கள். அருள் புரிவாய் கருணைக் கடலே என்ற சுத்தானந்த பாரதியின் பாடல்தான் பிரார்த்தனைக்குரிய பாட்டு.ஊரில் 100 வீடுகள் போல உண்டு. நாங்கள் தெற்கு கோடியில் வசித்து வந்தோம். கர்ணம் மாமா (கணக்குப் பிள்ளை) வீட்டில்தான் தினமணி நாளிதழ் வாங்குவார்கள். அவர் யாருக்கும் வீட்டுக்கு எடுத்துப் போய்ப் படிக்க பேப்பர் தர மாட்டார். படிக்க ஆர்வமுள்ள பெரியவர்கள் அவர் வீட்டு கூடத்தில் கூடுவார்கள். ஒருவர் உரத்த குரலெடுத்து செய்திகளைப் படிப்பார். அப்பொழுது ஆளவந்தார் கொலை வழக்கு விசாரணையில் இருந்தது. தினமணி இரண்டாம் பக்கத்தில் வழக்கு விசாரணை விலாவரியாக அச்சிடப்பட்டிருக்கும். நான் அதைக் கேட்ட ஞாபகம் இன்னும் இருக்கிறது. இதுதான் பத்திரிகை உலகத்துடன் எனக்கு ஏற்பட்ட முதல் தொடர்பு.
எங்கள் குடும்பம் வசதி குறைந்தது. ஆனால் சிறுதையூர் டூரிங் கொட்டகையில் சக்ரதாரி பார்த்தது, லால்குடி சினிமா தியேட்டரில் அந்தமான் கைதி (எம் ஜீ ஆர் நடித்தது), ஜெமினியின் வள்ளியின் செல்வன், ஏழை படும் பாடு பார்த்த ஞாபகம் இன்னும் இருக்கிறது.
பிற்பாடு என் மேல் படிப்புக்காக (சும்மா ஜோக்) பொருளாதார மேம்பாட்டுக்கு சென்னை வந்துவிட்டோ ம். நான் என் சித்தி வீட்டில் விடப்பட்டேன். சித்தி என்றால் அம்மாவின் தங்கை. சூளை மேட்டில் அவர்கள் வீடு இருந்தது. பக்கத்திலேயே மாநாகராட்சிப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் சேர்ந்தேன். பகல் இரண்டு மணியிலிருந்து ஐந்துமணிவரைதான் எனக்கு வகுப்புகள். காலைநேரம் வீட்டு வேலையில் ஒத்தாசையாக இருப்பேன். அப்பொழுது நுங்கம்பாக்கம் ஸ்டேஷன் கிடையாது. கோடம்பாக்கம் விட்டால் சேத்துப்பட்டுதான். வெள்ளிக்கிழமை காலை என் கையில் இரண்டனாவோ நான்கனாவோ கொடுத்து என் சித்தி விகடன் வாங்கி வர பணிப்பாள். கோடம்பாக்கத்திலிருந்து சூளை மேடு என் சித்தி வீடுவரை பொடி நடைதான். அரை மணி நேரம் பிடிக்கும். நான் வரும் வழியில் விகடன் முழுவதும் படித்து விடுவேன்.
விகடன் படித்ததில் எனக்கு இன்னும் நினைவில் இருப்பது அதில் வந்த தொடர்கதைகள்தான். லட்சுமி தேவன் த நா குமாரஸ்வாமி போன்றோரின் தொடர்கதைகள் அப்பொழுது வெளியாகிருந்தன. லட்சுமி, தேவன், கதைகளில் சுவாரஸ்யமான கதை சொல்லல் இருக்கும். த.நா குமாரசுவாமியிடம் நயம், நாசுக்கு இருக்கும். அவருடைய ஒட்டுச்செடி, அன்பின் எல்லை, வீட்டுப் புறா போன்றவை மேன்மையான எழுத்து என்று எனக்குப் படி ஆரம்பித்தது. தேவனின் லட்சுமி கடாட்சம் என்ற தொடர்கதையை சமீபத்தில் படித்தேன். நெடுந்தொடருக்கு ஏற்ற சரக்கு. அக் கதைகளைத்தான் உல்டா செய்கிறார்களோ என்னவோ மெகா தொடர் கதாசிரியர்கள்?
நான் உயர்நிலைப் பள்ளி படிக்கும்போது தியாகராயநகருக்கு வந்துவிட்டேன். அப்பொழுது ஆக்கூர் அனந்தாச்சாரியன் என்ற தேசபக்தர் வருடம் தோறும் பாரதிவிழா வாணிமகாலில் கொண்டாடுவார். ம.பொ.சிதான் நட்சத்திரப் பேச்சாளர். மற்ற அறிஞர்களும் பேசுவார்கள். அந்தக் கூட்டத்தில் கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன் கூறிய கருத்து என் மனதில் ஆழப்பதிந்தது. ‘தமிழ்நாட்டில் எழுத்தாளராக மட்டும் விளங்கி பெயர் வாங்க முடியாது, மேடைப் பேச்சாளராகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சுலபமாக மக்களை சென்றடைய முடியும்.’
இப்படிப் பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் பெயர் பெற்ற நபர்களில் நா பார்த்தசாரதி அவர்களும், கலைமகள் ஆசிரியர் கி வா ஜகந்நாதனும் முக்கியமானவர்கள். இருவரும் முறையாக தமிழ் பயின்றவர்கள். நா.பார்த்தசாரதி பொன் விலங்கு, குறிஞ்சி மலர் முதலிய நாவல்களை எழுதி மக்கள் மனதில் இடம் பெற்றவர். கி வா ஜவும் சிறுகதைகள், கவிதைகள் எழுதியுள்ளார். நா.பா பேச்சில் விறுவிறுப்பு இருக்கும். கி வா ஜ பேச்சில் நகைச்சுவை இருக்கும். இன்னும் மு வரதராசன், அ.சீனிவாச ராகவன், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், அ சா ஞானசம்பந்தம், மே வீ வேணுகோபால பிள்ளை இவர்கள் பேச்சுக்களை கேட்கவும் தென் சென்னை பூராவும் வட்டமிட்டிருக்கிறேன் என் பள்ளி நாட்களிலேயே. அரசியல், மருத்துவம், கர்நாடக இசை போன்ற துறை விற்பன்னர்கள் தங்கள் பெண்கள், பிள்ளைகளை தங்கள் தொழிலேயே ஈடுபடுத்த துடிதுடிப்பதை பார்க்கிறோம். ஆனால் நான் மேற் குறிப்பிட்ட தமிழ் ஆசான்கள் யாரும் தங்கள் மக்களை தங்கள் துறைகளில் ஈடுபடுத்த இயன்றதாக தெரியவில்லை.
நான் மயிலை கல்லூரி ஒன்றில் பி காம் சேர்ந்தபோதுதான் கிட்டத்தட்ட முப்பதாயிரம் நூல்கள் கொண்ட நூலகத்தை முதலில் பார்த்தேன். அந்த நூலகத்தில் நீங்கள் உள்ளே நுழைந்து நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்க முடியாது. வாயிற் காப்போனாக நூலகர் அமர்ந்திருப்பார். நூலகப் பட்டியலைத் துழாவி நீங்கள் விரும்பும் நூல்களின் பெயரை எழுதி அவரிடம் தர வேண்டும். அவர் உள்ளே சென்று நூல்களை எடுத்து வந்து உங்கள் கையில் கொடுப்பார். வாரம் இருமுறை நூல் எடுக்க அங்கு செல்வேன் நான். நான் தேர்ந்தெடுத்த நூல்கள் பெரும்பாலும் ஆங்கில நாவல்கள், கவிதைகள், தத்துவம் சார்ந்தவை. நூலகர் தன் வேலைப் பளு அதிகமாய்விட்டதாய் உணர்ந்து ஒருநாள் என்னிடமும் சத்தம் போட்டார்.
”நீ படிப்பதோ பி.காம். உனக்கு எதற்கு ஆங்கில நாவல்கள்..உங்கள் இலாகா பேராசிரியரிடம் உன்னைப் பற்றி புகார் செய்யப்போகிறேன்.” எனக்குப் படபடவென்று வந்தது. என்னுடன் வந்த நண்பர் என்னை சமாதானப்படுத்தி, ‘நண்பா நீ வருத்தப்படாதே. இந்த மாதிரி நூல்களை நீ படிக்க விரும்புகிறாய். நான் உனக்கு வேறு நூலகங்களை அறிமுகப்படுத்துகிறேன்..’ என்று சொல்லி என்னை அமெரிக்க நூலகத்திற்கும், பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்திற்கும் அழைத்துச் சென்று அங்கத்தினர் ஆக்கினார். அமெரிக்க நூலகம் நுழைவுக் கட்டணம் கூட வாங்கவில்லை. ஒரு சமயம் நாலு புத்தகங்கள் எடுத்து வரலாம். கல்லூரியில் படிப்பதற்கான அத்தாட்சி கடிதத்தைக் காட்டியதும் உறுப்பினராகி விட்டார்கள். பிரிட்டிஷ் கவுன்ஸிலில் ஐந்து ரூபாய் நுழைவுக் கட்டணம் என்ற நினைவு. அதன்பிறகு எங்கள் கல்லூரி நூலகத்திற்குள் நான் நுழையவே இல்லை.
எங்கள் சித்தப்பா அப்பொழுது தண்டையார் பேட்டையில் குடியிருந்தார். அவர் வீட்டிற்கு நான் விடுமுறை நாட்களில் போவேன். அவர் தம்பி முப்பது வயதான நபர் அகால மரணமடைந்து விட்டார். அவர் ஒரு வெள்ளைக்கார கம்பெனியில் ஸ்டெனோவாக இருந்தார். அவர் நினைவாக அவர் சேர்த்து வைத்திருந்த கிட்டத்தட்ட நூறு புத்தகங்களை சித்தப்பா தன் வீட்டிற்குக் கொண்டு வந்து விட்டார்.
எல்லாமே ஆங்கில நூல்கள். ஆல்டஸ் ஹக்ஸ்லி, சாமர்செட் மாம், முதலிய ஆங்கில ஆசிரியர்களின் அத்தனை நாவல்களையும் அங்குதான் நான் படித்தேன்.
பி.காம் முடித்ததும் மவுண்ட்ரோட் ஒட்டிய ஒரு கம்பனியில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்பொழுதுதான் மத்திய நூலகம் மவுண்ட்ரோடில் திறந்திருந்தார்கள். அங்கு உறுப்பினர் ஆகி தமிழ் நூல்கள் படிக்கத் துவங்கினேன். கன்னிமாரா நூலகத்திலும் உறுப்பினரானேன். ஞாயிற்றுக்கிழமைகளில் கன்னிமாரா நூலகத்தில் நேரத்தைக் கழிப்பேன். க.நா.சு எழுதிய அசுரகணம் அங்குதான் படிக்கக் கிடைத்தது. அது என்னை உலுக்கியது. பழைய கன்னிமாரா நூலகத்தில் பழைய பத்திரிகைகளை பைண்ட் செய்து கீழ் தளத்தில் வைத்திருப்பார்கள். கும்பகோணத்திலிருந்து ஐம்பதுகளில் வந்த காவேரி, க.நா.சு வின் இலக்கிய வட்டம் ஆகிய பத்திரிகைகளைப் படித்தேன். தீவிர இலக்கியத்தின் மீது ஆறாக் காதல் உண்டாகியது.
மத்திய நூலகத்தில் இலக்கியச் சங்கம் என்ற பெயரில் சில இளைஞர்கள் ஒன்று கூடி மாதந்தோறும் கூட்டம் நடத்துவார்கள். அந்தக் கூட்டங்கள் என்னை வெகுவாக ஈர்த்தன. ஆரோக்கியமான விவாத மேடையாக அந்தச் சங்கம் செயல்பட்டது. அந்தச் சங்கம் நடத்திய நால்வரில் ஒருவர் தரமான நூல்களை வெளியிடும் கெளரவமான பதிப்பாளராகிவிட்டார். மற்றொருவர் சாகித்திய அகாடமி பரிசு வாங்கிவிட்டு ஞானபீட பரிசுக்கு காத்துக்கொண்டிருக்கிறார். (தஞ்சை பல்கலை வழங்கும் ராஜ ராஜ சோழன் பரிசு இன்னும் இருக்கிறதா? இருந்தால் அதையும் வாங்கிவிடுவார் இவர்). மற்ற இருவா இலக்கிய உலகிலிருந்து தொலைந்து போய்விட்டார்கள்.
சேலத்திலிருந்து நடை என்றொரு பத்திரிகை வெளி வந்தது. கட்டம் போட்ட சட்டை போட்ட சாமியார் என்ற தலைப்பிட்டு ஒரு சிறுகதையை அவர்களுக்கு அனுப்பினேன். ‘ஒரு வேளை’ என்ற தலைப்பில் அந்தக் கதை அந்தப் பத்திரிகையில் வெளிவந்தது. சிறுகதை ஆசிரியரும் பிற்பாடு நாடக ஆசிரியராகவும் அறியப்பட்ட ந. முத்துசாமி அந்தக் கதையை பாராட்டி சில சிறிய குறைகளையும் சுட்டிக்காட்டி எனக்கு ஒரு போஸ்ட் கார்ட் போட்டார். தொடர்ந்து சிறுகதைகளை எழுதுகிற உத்வேகத்தை எனக்கு அந்தக் கடிதம் உண்டாக்கியது.
நடை சில இதழ்களுடன் நின்று போயிற்று. அதைத் தொடர்ந்து இலக்கியச் சங்க நண்பர்கள். கசடதபற என்று ஒரு பத்திரிகையை துவங்கினார்கள். இதில் நான் பங்கேற்று புதுக் கவிதைகள், விமர்சனக் கட்டுரைகள், நூல் மதிப்புரைகள், நிலம், நீர், ஆகாயம் என்ற குறிப்பிடப்பட்ட சிறுகதை இவற்றை அச்சில் கொணர முடிந்தது.
டெல்லியிருந்து இதே கால கட்டத்தில் கணையாழி என்ற பத்திரிகை வெளிவந்தது. இந்தப் பத்திரிகைக்கு மூன்று ஆசிரியர்கள். முதலாளி ஆசிரியர் டெல்லிவாசி. சிறுகதை தேர்ந்தெடுக்க ஒரு டெல்லி பேராசிரியர். சென்னையில் ஒரு பொறுப்பாசிரியர். கடைசி நேரத்தில் பக்கங்களை இட்டு நிரப்புவது இவர் பணி. இதில் நான் வெகுஜன சினிமா, சபா நாடகங்கள், இலக்கியக் கூட்டங்கள் பற்றி விமர்சித்து எழுதிய கண்ணோட்டத்தை அந்தப் பத்திரிகையின் த்வனியுடன் ஒத்துப் போனது. என்னுடைய சில நல்ல சிறுகதைகளையும் இந்தப் பத்திரிகை வெளியிட்டது.
அறுபதுகளின் மத்தியில் நா பார்த்தசாரதியின் தீபம் சென்னையிலிருந்து வந்தது. இதற்கு ஆரம்பத்தில் சில சிறுகதைகளை தபாலில் அனுப்பி வைத்தேன். அவர்களும் வெளியிட்டார்கள். இந்த மண்ணும் இன்னொரு மண்ணும் என்ற தலைப்பில் உள்ளூர் புத்திசாலிகள் என்று வெளி நாடுகளில் வேலைக்குப் போவதை கட்சி கட்டாமல் சிறுகதையாக எழுதி தீபத்திற்கு அனுப்பினேன். பிறகு நா.பாவை ஒரு பொதுக்கூட்டத்தில் அறிமுகம் செய்துகொண்டு பேசினபோது, அவர் சொன்னார். ‘நீங்கள் இந்தக் கதையை இன்னும் விரிவாக எழுதியிருக்கலாம்,’ என்று. ‘போன அவள் நின்ற அவள்’ என்ற என் சிறுகதையை வெளியிட்ட அவர் அதை விவாதத்திற்கு உரியதாக அறிவித்திருந்தார். பத்திரிகை வெளியாகி பத்திருபது நாட்களுக்குப் பின்னர் என்னை அவர் அலுவலகத்திற்கு வரவழைத்து என் கதையை விவாதித்து வந்திருந்த ஐம்பது அறுபது கடிதங்களைப் படிக்கச் சொல்லி என்னிடம் கொடுத்தார். உண்மையில் மன நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது அந்த நிகழ்ச்சி. ஆஜானுபாகுவான அவர் தோற்றமும், மிடுக்கான நடையும், தலை நிமிர்ந்த பார்வையும் அவருடன் பழகுவது கடினம் என்ற நினைப்பை என்னுள் உண்டாக்கியிருந்தேன். அவர் எவ்வளவு மென்மையான மனம் படைத்தவர். தான் ஒரு படைப்பாளியாக இருந்த போதிலும் சக எழுத்தாளர்களை பாராட்டுகிற பண்பு கொண்ட உத்தமமான மனிதர் என்பது அன்றுதான் எனக்குப் புலனாகியது.
ஒரு திடமான கட்டுப்பாடு, ஒரு எட்டாத தன்மை என்ற சிறுகதையை மட்டும் நா.பா பிரசுரிக்க மறுத்தார். அப்பொழுது அக் கதையைத் திருப்பி அனுப்பியபோது என்ன சொன்னார் தெரியுமா? இந்தக் கதையை கணையாழியில் பிரசுரிப்பார்கள். அதன்படியே கணையாழியில் அனுப்பியதும் அடுத்த இதழிலேயே பிரசுரித்தார்கள்.
தீபத்தில் நான் மொத்தம் இருபது முப்பது கதைகள் எழுதியிருப்பேன். அந்த ஆபிஸில் வைத்துதான் நான் டெல்லி எழுத்தாளர் ஆதவனைச் சந்தித்தேன். அவர் எழுத்தை நான் அமெரிக்க எழுத்தாளர் ஸ்காட் ஃபிட்ஸ் ஜெரால்ட் எழுத்துடன் ஒப்பிட்டுப் பேசினேன். அவர் என் மீது பிரியம் கொண்டார். டெல்லியிலிருந்து சென்னை வரும்போதெல்லாம் என்னை சந்திக்க தவற மாட்டார். அவர் சொன்ன ஒரு கருத்து இன்னும் எனக்கு நினைவில் இருக்கிறது. ‘நீங்கள் அதிகம் படிக்கிறீர்கள். குறைவாக எழுதுகிறீர்கள். படிப்பதை அடியோடு நிறுத்தி விடுங்கள். தினமும் ஒரு மணி நேரம் எழுத நேரம் ஒதுக்குங்கள்.’
இன்னொரு டெல்லி எழுத்தாளரான சம்பத் இதற்கு மாறுபட்ட கருத்தை சொல்வார். நாம் எழுத்துலகில் பிரகாசிக்க வேண்டுமென்றால் அங்கு என்ன நடக்கிறது என்பதை எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழில் புதிதாக வெளிவரும் படைப்புகளை காசு கொடுத்து வாங்கி நம்மை upto date ஆக வைத்துக்கொள்ள வேண்டும்.
அமுதசுரபி ஆசிரியர் விக்கிரமன் ஒரு அற்புதமான மனிதர். கிரியா ஊக்கி. என்னை எழுதத் தூண்டி அமுதசுரபி தீபாவளி மலர் இரண்டொன்றில் என் சிறுகதைகளை வெளியிட்டிருக்கிறார்.
சுதேசமித்திரன் தீபாவளி மலர் நான்கு வருடங்கள் என்னுடைய சிறுகதைகளை வெளியிட்டு என்னை உற்சாகப்படுத்தியிருக்கிறார் அதன் பொறுப்பாசிரியா ஸ்ரீனிவாசன். கண்ணதாசன் பத்திரிகை நிர்வாக ஆசிரியர் இராம கண்ணப்பன் என் எழுத்தினை ரசிப்பவர். அவர் எனக்கு தந்த ஆலோசனை. ‘ஏன் இவ்வளவு இறுக்கப் பிடிக்கிறீர்கள்? தளர்வாக எழுதுங்கள். விஸ்தாரமாக விவரமாக எழுதுங்கள்.’
எழுபதுகளின் மத்தியில் பிரக்ஞை என்ற ஒரு பத்திரிகை தியாகராய நகரிலிருந்து வந்தது. அதை நடத்தி வந்த இளைஞர்கள் என்னை விட ஐந்து, பத்து வயது குறைந்தவர்கள். அவர்கள் என்னை ஞானகுருவாக ஏற்றுக்கொண்டார்கள். அது எனக்கு ஒரு மிதப்பை தந்தது. பாம்புகள் பற்றிய பயம் என்ற ஒரு செக் மொழிக் கதையை அதில்தான் வெளியிட்டேன். நிறைய புது கவிதைகள், மொழிபெயர்ப்பும் அவர்களுக்காக செய்து தந்தேன்.
சித்ராலயா பத்திரிகையில் நண்பர் கோபாலி தூண்டுதலின் பேரில் உலக சினிமா வரலாறு பதினைந்து வாரம் எழுதினேன். ஐம்பது வாரம் எழுத உத்தேசித்திருந்தேன். அலுவலக நெருக்கடியால் தொடர முடியாமல் போயிற்று.
நா.பா அவர்கள் தினமணி கதிரில் பொறுப்பாசிரியராக இருந்தபோதும் அவருடன் என் பிணைப்பு தொடர்ந்தது. என்னுடைய நல்ல பல சிறுகதைகளை அவர் தினமணி கதிரில் பிரசுரித்திருக்கிறார். அவர் கதைக் கதிர் என்ற மாத நாவலுக்கும் பொறுப்பாசிரியர். மாத நாவல் எழுதிக் கொடுத்திருந்தாலும் அவர் வெளியிட்டிருப்பார். நான் ஏன் இயல்பான சோம்பேறித்தனத்தால் எழுதித் தரவில்லை. தவறு என்னுடையதுதான்.
கல்கி பத்திரிகையில் என் சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன. வெவ்வேறு புனைபெயர்களில். சாவி பத்திரிகையில் சிறுகதை வந்திருக்கிறது. சாவி அவர்கள் தினமணிகதிரில் பணியாற்றியபோது துணை ஆசிரியர் ஜெயபாரதி தூண்டுதலில் பேரில் இரண்டொரு கதைகள் எழுதியிருக்கிறேன்.
சுபமங்களாவில் கோமல் சுவாமிநாதன் அவர்கள் ஆசிரியராக இருந்தபோது ஒரு சிறுகதை வந்திருக்கிறது. ஞானரதம் பத்திரிகையில் தேவ சித்ர பாரதி வற்புறுத்தலின் பேரில் ஒரு இலக்கியப் பத்தி எழுதி வந்தேன். அவர் ஒரு உத்தமமான பத்திரிகை ஆசிரியர்.
மணியன் அவர்கள சிறுகதைக்கென்றே ஆரம்பித்த இதழில் என் சிறுகதை கேட்டு வாங்கிப் போட்டார்கள். இந்த முயற்சி சில இதழ்கள் வெளியீட்டுடன் நின்று போனது தமிழின் துரதிருஷ்டம்.
பாவைச்சந்திரன் அவர்கள் ஆசிரிய பொறுப்பு வகித்தபோது குங்குமத்தில் ஒரு கதை எழுதினேன். பிறகு அவர்கள் புதிய பார்வையில் ஆசிரியப் பதவி வகித்தபோது சில மொழிபெயர்ப்பு கதைகளும், சுயமான கதைகளும் பிரசுரம் செய்தார்.
தொண்ணுறுகளின் ஆரம்பத்தில் நான் மாஜி எழுத்தாளனாக ஆக வேண்டியது. நவீன விருட்சம் ஆசிரியர் என்னை தூசித்தட்டி தொடர்ந்து என் இலக்கிய முயற்சிகளை வெளியிட்டு வருகிறார். இன்றைக்கும் உயிருள்ள எழுத்தாளனாக நான் இருப்பதற்கு அவருக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்.
என்னுடைய நாலைந்து சிறுகதைகளை என்னுடைய அலுவலக நண்பர் சிரஞ்சிவி அவர்கள் மொழிபெயர்த்து தெலுங்குப் பத்திரிகைகளில் அவற்றை வெளியிட்டுள்ளார். காலஞ்சென்ற திருமதி சரஸ்வதி ராம்நாத் அவர்கள் என்னுடைய ‘போன அவள் நின்ற அவள்’ என்ற சிறுகதையை ஹிந்தியில் மொழிபெயர்த்து ஹிந்தி பத்திரிகை ஒன்றில் பிரசுரித்துள்ளார்.
என்னுடைய சிறுகதை ஒன்றை காலஞ்சென்ற எம் எஸ் ராமஸ்வாமி அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஸ்வராஜ்யா ஆங்கில இதழில் வெளியிட்டுள்ளார். தற்கால தமிழ்ச் சிறுகதைகள் என்ற Writer’s Workshop (கல்கத்தா பிரசுரகர்த்தார்கள்) வெளியிட்டுள்ள தொகுப்பு நூலிலும் இந்த சிறுகதை இடம் பெற்றுள்ளது.
கிரேக்க தத்துவ ஞானி ஒருவன் சொன்னான். உலகம் ஒரு கண்காட்சி மைதானம். பத்து சதவிதம் பேர் இதில் வித்தைக் காட்ட, வேடிக்கைகள் செய்ய, வியாபாரம் பண்ண முயற்சிக்கிறார்கள். தொன்னூறு சதவிகிதம் பேர் பார்வையாளர்கள். அந்தப் பார்வையாளர்களில் ஒருவனாக இருக்கவே நான் விரும்புகிறேன்.
நான் ஒரு dabblar in literature. ஆங்கில இலக்கியத்தில் Max Beerbohm என்று ஒரு எழுத்தாளர் பெயரைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். தமிழ் இலக்கியத்தில் Max Beerbohm ஆக அறியப்படுவதையே நான் விரும்புகிறேன்.
பின் குறிப்பு :
ஐராவதம் கதைகளைத் தொகுத்து ஒரு சிறிய கதைத் தொகுதி ‘கெட்டவன் கேட்டது’ என்ற பெயரில் விருட்சம் வெளியிடாக வர உள்ளது. ஞானக்கூத்தன் ஆசிரியராக இருந்த ‘கவனம்’ என்ற பத்திரிகையில் இக் கதை பிரசுரமானது. ஐராவத்திடம் எனக்குப் பிடித்த விஷயம் அவரது நகைச்சுவை உணர்வு. கெட்டவன் கேட்டது என்ற பெயரில் புத்தகம் கொண்டு வர வேண்டும் என்று சொன்னபோது, ஐராவதம் வேறு தலைப்பில் கொண்டு வரச் சொல்கிறார். தமிழைப் பொறுத்தவரை எந்தக் கதைப்புத்தகமாக இருந்தாலும் 100 பிரதிகள் விற்பது சிரமம். லைப்ரரி ஆர்டரை நம்பித்தான் புத்தகம் போட வேண்டும். அதுவும் கட்டாயம் கிடைக்குமென்று சொல்ல முடியாது. தலைப்பு எதுவாக இருந்தால் என்ன என்று எனக்குத் தோன்றியது.
– அழகியசிங்கர் 23.06.2010 at 9.51pm
நீண்ட நாட்களுக்குப் பிறகு திரு ஐராவதத்தின் நினைவுகூறலைப் படித்தது நிறைவாக இருந்தது.
அவருடைய “மாறுதல்” சிறுகதைத் தொகுப்பு தமிழ் இலக்கியத்தில் ஒரு மைல்கல் என்றுதான் சொல்லவேண்டும். ‘நிலம் நீர் ஆகாயம்’ கதை காலத்தை வென்ற படைப்பாக நிலைத்துவிட்டது. ‘அஸ்கா’, ‘அச்சு வெல்லம்’ போன்ற கதைகளின் அங்கதச் சுவை மறக்கவியலாதது.
’கெட்டவன் கேட்டது’ தொகுப்புக்கு ஏற்ற தலைப்பு. அக்கதையின் முடிவு நினைத்தாலே நகையூட்டும் தன்மை படைத்தது. (ஆனால் லும்பினியில் என்ன எழுதுவார்களோ?)