ஹோர்ஹெ லூயி போர்ஹெஸ்
சம்பவங்கள் நிகழ்வது அந்த மற்றொரு போர்ஹெஸ்க்கு. நான் போனஸ் அயர்ஸின் ஊடாக நடக்கிறேன். ஒரு நுழைவாயிலின் வளைவையும் அதன் உட்கதவையும் உற்றுப்பார்க்கத் தாற்காலிகமாக – ஒருவேளை இப்போது இயந்திரத்தனமாக இருக்கலாம்-நிற்கிறேன். போர்ஹெஸ் தொடர்பான செய்தி அஞ்சலில் என்னை வந்தடைகிறது, அல்லது அவன் பெயரைக் கல்வியளார்களின் பட்டியலொன்றிலோ ஏதாவதொரு வாழ்க்கை வரலாற்று அகராதியிலோ பார்க்கிறேன். மணற்கடிகைகள், நிலப்படங்கள், பதினெட்டாம் நூற்றாண்டு எழுத்துருவங்கள், அடிச்சொல் வரலாறு, காபியின் சுவை, அதோடு ராபர்ட் லூயி ஸ்டிவன்சனின் உரைநடை என என் விருப்பம் பரவுகிறது. இந்த முன்னுரிமைகளைப் போர்ஹேஸூம் பகிர்ந்து கொள்கிறான். ஆனால் அவைகளை ஒரு நடிகனின் போர்க்கோலங்களாக மாற்றும் வீண் வழியில். எங்கள் உறவு பகைமை உணர்வு கொண்டுள்ளது எனச் சொல்வது மிகைப்படுத்தலாக இருக்கும்-நான் வாழ்கிறேன், என்னை நானே வாழ அனுமதிக்கிறேன். அதனால் போர்ஹெஸ் தன் இலக்கியத்தை நான் நியாயப்படுத்துகிறேன். அவன் மதிப்பு வாய்ந்த பல பக்கங்களை எழுதியிருக்கிறான் என்பதை நான் ஆசையோடு ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அந்தப் பக்கங்கள் என்னைக் காப்பாற்றமாட்டா. ஒருவேளை அவற்றிலுள்ள நல்லது இனி எந்தத் தனி நபருக்கும் அந்த வேறொருவனுக்குக்கூட உரிமையானதல்ல என்பதால் இருக்கலாம், ஆனால் அது மொழிக்குமட்டுமே உரியது அல்லது மரபுக்கு. அதற்கும் அப்பால், நான்-முழுமையாகவும் தவிர்க்க முடியாமலும் – மறதிக்கு விதிக்கப்பட்டிருக்கிறேன். அதோடு விரைகின்ற எல்லாக் கணங்களும் அந்த வேறொருவனுக்குள் வாழும் என்னுடையவை. எல்லாற்றையும் சிதைத்தும் மிகைப்படுத்தவும் அவனிடமுள்ள ஏறுமாறான வழிகளை நான் அறிந்திருந்திருந்தாலும், சிறிது சிறிதாக எல்லாவற்றையும் அவனுக்குத் தள்ளிக் கொண்டிருந்திருக்கிறேன். எல்லாமே அவை என்னாவா யிருக்கின்றனவோ அவையாகவே தொடர்ந்து இருக்க விரும்புகின்றன என்பதை ஸ்பினோஜா நம்பினார் – கல் எக்காலத்துக்கும் கல்லாகவும் புலி புலியாகவும் இருக்க விரும்புகின்றன. நான் போர்ஹெஸில் நீடித்திருக்க வேண்டும், என்னில் அல்ல (உள்ளபடிக்கே, நான் யாராகவேனும் இருந்தால்), ஆனால் வேறு பலருடைய புத்தகங்களைவிடவோ கிடாரின் சலிப்பூட்டும் மீட்டலைவிடவோ அவனுடையவற்றில் நான் என்னைக் குறைவாகவே அடையாளம் காண்கிறேன். வருடங்களுக்கு முன்னால் நான் அவனிடமிருந்து என்னை விடுவித்துக்கொள்ள முயற்சித்தேன். அதோடு சேரிகள். நகரத்தின் புறப்பகுதிகளின் புராணங்களிலிருந்து காலம், முடிவிலி இவைகளுடனான விளையாட்டிற்கு மாறினேன். ஆனல், அந்த விளையாட்டுகள் தற்போது போர்ஹெஸீக்கு உரிமையானவை. நான் வேறு விஷயங்களைப் பற்றி யோசிக்க வேண்டும். எனவே என் வாழ்க்கை, ஒன்று – அதற்கு எதிரான ஒன்று, ஒரு வகையான நிலையற்றது, வீழ்ந்துகொண்டிருக்கிற ஒன்று. அதோடு ஒவ்வொன்றும் எனக்குக் கிடைக்காமல் சுருண்டுகொண்டிருக்கிறது அல்லது அந்த மற்றொருவனின் கையில் விழுகிறது. எங்களில் யார் இந்தப் பக்கம் எழுதிக்கொண்டிருப்பது என்பது எனக்கு நிச்சயமில்லை.