மூன்று கவிதைகள்

கவிதை (1)

கடவுளின்
கனவுகளில் ஒன்றை திருடி என் அலமாரிக்குள் ஒளித்து வைக்கிறேன்
காணாது தவிக்கும் கடவுள் மூளைக்குள் விஷமேறி துடிக்கிறார்
ஜோதிமயமான கடவுள் காற்றுவெளியில் சில்லிட்டுப்போய் கருத்துப்போனார்
ஒளித்து வைத்த கடவுளின் கனவை எடுத்துப்பார்க்கிறேன்
கடவுளின் கடைவாயில் பற்கள் முளைத்து கோரக்குருதி வழிகிறது
மீண்டும் அலமாரிக்குள் வைத்து பூட்டிவிடுகிறேன்

கவிதை (2)
பத்து வருடங்களுக்குப் பிறகு கடிதம் வந்தது உன்னிடம் இருந்து
நிறைய எழுதியிருந்தாய்…
நீயும் நானும் விளையாடிய, கதை பேசிய, கனவு விதைத்த பொழுதுகளை…
நாம் தொடர்பற்று இருந்த நாட்களின் சிறு குறிப்பும் இல்லை உன் கடிதத்தில்
மடித்து வைக்கிறேன் உனக்கு பதிலாய் நம் பழங்கதைகள் பேச…
கவிதை (3)
சொந்தமாய் வீடு வாங்கி குடிபுகுந்தேன் ஒரு நகர அடுக்ககத்தில்..!
அப்பா வந்திருந்தார் வீட்டுக்கு…
என் மகனிடம் உங்க அப்பா சின்ன குழந்தையாய் இருந்த போது சூரிய, சந்திர, நட்சத்திரங்களுடன் வானம் இருந்தது…
புழுதி அப்பிய மண்ணும் இருந்தது… மழை நனைக்கும் தாழ்வாரம் இருந்தது…
ஆனால் சொந்த வீடு இல்லை
உன் அப்பாவிற்கு சொந்த வீடு இருக்கிறது….
பொய்யாய் பழங்கதையாய்….

பேசும் மௌனங்கள்…


எப்போதும்
பேசிக்கொண்டே
இருக்கின்றன
உன் மௌனங்கள்
எப்போதும்
பேசிக்கொண்டே
இருக்கிறேன்
உன் மௌனங்களோடு
எப்போதாவது
பேசிக்கொள்ளும்
நம் மௌனங்கள்
நம் இருவரையும்
புறம் தள்ளி.
0

இலக்கியக் கூட்ட அறிவிப்பு

27.09.2009 ஞாயிறு மாலை 6 மணி முதல் 9 மணிவரை கருத்தரங்கு அறை, தேவநேய பாவணர் மைய நூலகம், அண்ணா சாலை, சென்னை 2 கவிதை வாசிப்பும், கவிதைக் குறித்து உரையாடலும் நடைபெற உள்ளது. எழுத்தாளர் சா கந்தசாமி, மெல்ல நகர்ந்த நூற்றாண்டு என்ற தலைப்பில் மெளனியைக் குறித்துப் பேசுகிறார். கவிஞர் யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் குறித்து உரையாடுகிறார். கலந்து கொள்பவர்கள் கவிதைகள் வாசிக்கலாம். வரவும்.

பழம் புத்தகக் கடை

புதிய புத்தகங்களை விற்பனை செய்யும் கடைகளைவிட பழைய புத்தகங்களை விலைக்கு வாங்கும் – வாங்கி விற்கும் கடைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. என்னடைய போக்குவரத்து அங்கு அதிகமிருக்கும். அந்தக் கடைகளில் பொக்கிஷங்கள் பல தேடத் தேடக் கிடைத்திருக்கின்றன. பழைய புத்தகக் கடைகளில் ரகம் பலவுண்டு. மிக மிக மலிவான மட்டமான புத்தகங்கள், பத்திரிகைகள் இவற்றோடு பழைய பிளாஸ்டிக் பொருட்கள்இ பாட்டில்கள் ஆகியவற்றையும் வைத்து வியாபாரம் செய்யும் வகை ஒன்று. மிக உயர்ந்த அரிதான நூல்களையும் பத்திரிகைகளையும் வைத்து வியாபாரம் செய்யும் கடைகள் ஒரு பக்கம். இரண்டுக்கும் இடைப்பட்ட தரத்தில் ஒரு ரகம். இந்தக் கடைகளில் வாடகை நூல் நிலைய வசதியை வைத்திருப்பார்கள். ஆனால் அந்த வகையில் வாடகைக்குக் கிடைக்கும் நூல்கள் மலிவும், சாதாரண ஜனரஞ்சமானவையுமானதாக இருக்கும். நம்மில் ஒவ்வொருவனும் வாழ்ந்து கடந்த வந்த நாட்களை நினைவூட்டும் பல புத்தகங்களை – எழுத்தை வாசிக்கும்போது தன் பழைய காலத்தில் மீண்டும் மனத்தளவில் வாழ்ந்து பார்ப்பது ஓர் அற்புத அனுபவச் சிலிர்ப்பு. அதை நமக்கு வழங்கும் வகையில் புத்தகங்களைக் கொண்டிருப்பது பழைய புத்தகக் கடைகளே. ஒருமுறை வருகை தந்து எதையாவது வாங்குபவர்கள் தொடர்ந்து வருகைத் தருவதும், தம்மிடமுள்ள பழைய நூல்களை தள்ளிவிட்டு வேறு பழையதை வாங்குவதுமான வியாபர உறவை ஏற்படுத்தும். எனக்கான வாசிப்பு தளத்தைப் பெருக்கி விஸ்தாரப் படுத்திய பழைய புத்தகக் கடைகள் அவற்றில் நான் கண்டெடுத்த அரிதான – வினோதமான சிறந்த புத்தகங்கள், பத்திரிகைகள் ஆகியவை குறித்து இந்தப் பக்கங்களில் எழுதி என் அனுபவத்தை பிறருடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பழைய புத்தகக் கடை – புத்தகங்களோடான உறவும் சுகானுபமும் சேலத்தில் ஆரம்பமானது. சேலத்தில் முதல் அக்ரகாரப் பகுதியில் என் கவனத்தைக் கவர்ந்தது அந்தக் கடை. அந்நாளில் முக்கியமான இடமாயிருந்த சேலம் பாங்கு (இன்று இந்தியன் வங்கி) மற்றும் ஹென்றி அண்டு உல்சி ரொட்டி – கேக் கடை, சினிமா தியேட்டர்களில் போட்டுக் காண்பிக்கும் விளம்பர ஸ்லைடுகள் தயாரிக்கும் நாஷனல் ஸ்டூடியோ ஆகியவை இடம் பெற்றிருந்த கட்டிடத்தின் அறை ஒன்றில் அந்தக் புத்தகக் கடையுமிருந்தது. ஆனால் அது பழைய புத்தகக் கடையல்ல. அங்கிருந்தவை எல்லாமே புதிய புத்தகங்கள். வெளிநாடுகளிலிருந்த இறக்குமதியான ஆங்கில புத்தகங்கள். நஷ்டமேற்பட்டுவிட்டதால், கடையை மூடிவிட்டுப் போகும் முடிவில் கையிருப்புப் புத்தகங்களை அடிமாட்டு விலைக்கு விற்றுக் கொண்டிருந்தார் அதன் உரிமையாளர் வாசுமுராரி. வாசுமுராரி ஒரு எம் ஏ ஆங்கிலப் பட்டதாரி. வியாபாரத்தில் நஷ்டம் காரணமாக, புதிய புத்தகங்களை விற்பனை செய்து வந்த கடை ஒன்று திடீரென்று பழைய புத்தகக் கடையாக மாறியது.
அந்த வயதில் என்னைக் கவர்ந்ததும், எனக்குத் தேவையுமான சாகசச் செயல்களை உள்ளடக்கிய கதைப் புத்தகங்களை நானே தேடினேன். கூடவே, நிறைய வண்ணப்படங்களும் இருந்தாக வேண்டும். காமிக்ஸ் வகை புத்தகங்கள் என்னை வசீகரித்தன. அதில் “க்ளாசிக்கல்” எனும் தலைப்பில் நிறைய வெளியீடுகள் யு.எஸ் லிருந்து இறக்குமதியாகும். க்ளாசிக்ஸ் காமிக் வெளியீடுகள் அழகிய வண்ணப்படங்கள் மூலம் மிகப் பிரபலமான ஆங்கில, அமெரிக்க, பிரைஞ்சு நாவல்களை மிகச் சிறிய அளவில் தயாரித்துத் தள்ளின. பெரியவர்களின் கையிலும் இவை இருக்கும். இந்த வகையில் வாசுமுராரியின் கடையில் நான் முதல் முதலாக என் அப்பாவின் பரிந்துரையோடு வாங்கியவை. ஆர.எல்.ஸ்டீவன்ஸன், ரைடர் ஹாக்கார்டு இருவரின் கதைகள். மயிர்கூச்செரிய வைத்தன. ஆனால் வாசு முராரி எனக்கு மிகவும் ஆசையோடு சிபாரிசு செய்து படிக்கச் சொன்னது, அமெரிக்க எழுத்தாளர் ஹெர்மன் மெல்வெல் எழுதிய “மோபிக் டிக்” கதையை.
மோபிடிக் எனும் வெள்ளைத் திமிங்கலம். ஒரு சமயம் மரணத்தின் குறியீடாகவும், விடாமுயற்சியுடன் துரத்தும் பழிவாங்கலின் குறியீடாகவும் திமிங்கலத்தையும், அதை வேட்டையாடும் சமயம் அதன் வாயிக்கு தன் காலொன்றைப் பறிகொடுத்துவிட்டு கொலை வெறியோடு பழிவாங்க அதைத் தேடி கடலில் அலையும் காப்டன் அஹாப்பையும் கதையில் பார்க்கிறோம். இம்மாபெரும் நாவல் நாற்பது பக்கங்களுக்குச் சருக்கி படக்கதை வடிவில் காமிக்ஸôய் தயாரிக்கப்பட்டிருந்தது. இவற்றையெல்லாம் வாசு முராரி தூக்கி எறியும் விலைக்கு எனக்குத் தந்தார்.
இரண்டொரு வருடம் போனதும் தியேட்டரில் வெளியான மோபிடிக் ஹாலிவுட் படத்தை அப்பாவிடம் அடம் பிடித்து காசு வாங்கிப் போய்ப் பார்த்தேன். கிரிகிரிபெக் காப்டனாக ஒரு காலில் நடித்திருந்தார். ஜான் ஹ÷ஸ்டனின் டைரக்ஷன். அறுபதுகளில் இந்தக் கதையை நாடகமாக்கி அமெரிக்க நகரங்களில் பெரும் வெற்றியோடு நாடகம் போட்ட ஹாலிவுட் நடிகர் ராட் ஸ்டீகர் (தர்க் நற்ங்ண்ஞ்ங்ழ்) காப்டன் அஹாப் பாத்திரத்தில் நடித்திருந்தார.
மோபிடிக் நாவலை முழுசாக அதன் அசல் பிரதியில் படிக்கத் தேடினேன். இதை சேலம் தேர்முட்டி (தேரடி)யில் தரையில் பழைய புத்தகங்களைப் பரப்பி வைத்து விற்று வந்த நடேச ஆச்சாரியிடம் கிடைக்கப் பெற்றேன். நடேச ஆச்சாரி பற்றியும் அவரது பழைய புத்தகக் கடை பற்றியும் சொல்லுமுன் வாசுமுராரி குறித்து மேலும் கொஞ்சம் சொல்லலாமென்று தோன்றுகிறது.
கடைசியாக அவர் கடை மூடப்பட்டது. நடைப் பாதையில் அவரது கடையில் கடைசியிலிருந்த புத்தகங்கள் “எது எடுத்தாலும் எட்டணா, ஒரு ரூபாய்,” என்று இரு கூறுகளாய்ப் பிரித்துக் கட்டி விற்கப்பட்டன. வாசு முராரியைக் காணோம். பக்கத்திலிருந்த நாஷனல் ஸ்லைடு ஸடூடியோ உரிமையாளர் தியாகி கந்தசாமியை அணுகி விஜாரித்தேன். இவர் எப்போதும் கதர் ஜிப்பா கதர் வேட்டி. உண்மையில் அவர் தியாகியே இல்லை. ஒரு பிரமுகரின் பலமான சிபாரிசில் தியாகிப் பட்டியலில் சேர்க்கப்பட்டு தியாகியானவர். தியாகிகளுக்கு தர்காஸ் பூமி என்று இலவசமாய் இரண்டு முதல் நான்கு ஏக்கர் வரை நிலம் தருவார்கள். அதைக் குறி வைத்து தியாகிப் பட்டியலில் பெயர் நுழைத்து தியாகியாகி நிலமும் பெற்று ஊரில் தியாகியாய் அறியப்பட்டு நிலைத்தவர்கள் நிறையவே உண்டு. கந்தசாமி அப்படியானவர். கூடவே ரகசியமான ஹோமோ செக்ஸவலிஸ்ட். இருந்தும் சொத்துக்கு வாரிசு வேண்டி கல்யாணம் பண்ணிக்கொண்டு ஒரு பையனையும் பெற்றெடுத்தவர். இவரிடம் வாசு முராரி பற்றி விசாரித்தபோது அவரைப் பழிச் சொற்களால் ஏசினார். புத்தகக் கடை இருந்தபோது இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும். பிறகு போகப் போகத் தெரிய வந்தது என்னவென்றால், தகராறு வியாபார ரீதியால் அல்ல என்றும் கந்தசாமி உபயோகப் படுத்தி வந்த பையன்களை வாசுமுராரி தன் கடையிலுள்ள வண்ணப்படங்கள் நிறைந்த காமிக்ஸ் புத்தகங்களைக் கொடுத்து தன் வசம் இழுத்துக் கொண்டதால் ஏற்பட்டதென்றும் கூறுவார்கள். வாசு முராரி கல்யாணமாகாத ஹோமோ செக்சுவாலிஸ்டு.
ஒருநாள் சிறிய சிற்றுண்டிக் கடையொன்றில் எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது,
“ரெண்டு பட்டை சாதம்,” என்ற பழக்கமான குரல் கேட்டு நிமிர்ந்தேன். எதிர் வரிசையில் சாயம்போன சட்டை வேட்டியில் இளைத்துக் காணப்பட்ட வாசுமுராரியைப் பார்த்தேன். அவரும் என்னைப் பார்த்துவிட்டு புன்னகைத்தார். தான் ஒரு அச்சாபீசில் பணிபுரிவதாகச் சொல்லிவிட்டு,
“தேர் முட்டியில நடேசாச்சாரினு ஒருத்தர் பழைய புஸ்தகங்களைப் போட்டு விற்கறார். போய்ப்பார். நம்ம கடை மாதிரி இருக்காது. பழைய புஸ்தகம்னா பக்கா பழைய புஸ்தகம்,” என்றார்.
அன்று மாலையே தேரடிக்குச் சென்றேன்.
கதம்பப் பூவுக்கு, தஞ்சாவூர் கதம்பம், மதுரைக் கதம்பம் திருச்சி கதம்பம் என்று பெருமை பேசுவார்கள். சேலம் கதம்பம் இந்தக் கதம்பப் பூச்சரம் ஊருக்கு ஊர் வேறுபடுவதும் அந்தந்த ஊருக்கு பெருமை சேர்ப்பதுமாய் அமைவதில் ஒரு சில சரக்குச் சேர்க்கைகள் காரணமாகின்றன. தாழம்பு மடல், மருதாணி, தவனம், மருக்கொழுந்து மற்றும் திருநீற்றுப் பத்திரி என்பன கதம்பத்தில் இடம் பெறுவது அத்தகைய காரணங்களில் ஒன்று. இக்கதம்பச் சரம் சாலையின் திருப்பத்தில் எதிரெதிரே நிற்கும் மாரியம்மன் தேர்களின் அடிவாரத்தில் வரிசையாய் கடை விரித்து விற்கப்படும். இக் கடைகளின் கோடியில் தேர் சக்கரத்தை அணைத்தாற்போல அந்தப் பழைய புத்தகக் கடை விரிக்கப்பட்டிருந்தது. ஓர் ஈச்சம்பாய் மீது அடுக்கி வைக்கப்பட்ட நிலையில் ஒரு நூறு புத்தகங்கள். மற்றபடி வரிசை வரிசையாக விரித்துப் பர்ப்பி வைக்கப்பட்ட புத்தகங்கள், அனேகமாய் எல்லாமே வெளிநாட்டில் – குறிப்பாக இங்கிலாந்தில் பதிக்கப்பட்ட புத்தகங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலப் பகுதியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் பதிப்பிக்கப் பட்டவையாவும் அடுக்கி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தவை. 1940 – களிலிருந்து வெளிவந்தவை பரப்பி வைக்கப்பட்டிருக்கும். இவற்றையெல்லாம் எடைக்குத்தான் வாங்கியிருக்க வேண்டும் என்றாலும் இதையெல்லாம் படித்திருக்கக் கூடிய மனிதர்கள் இந்த ஊரில் யார் யார் என்றுகூட யோசித்து வியந்ததுண்டு.
அப்போதைய என் ஆங்கில அறிவுக்கும் வாசிப்பு முதிர்ச்சிக்கும் நடேச ஆச்சாரியின் பழம் புத்தகக் கடை என்னை சிறிதும் கவரவேயில்லை. வாரம் ஒருமுறை தேரடியிலுள்ள ராஜ கணபதியைத் தரிசித்துவிட்டு வரும் சமயம் மட்டும் அந்தக் கடையை நின்று கவனிப்பேன். நடேச ஆச்சாரி பகலெல்லாம் தச்சு வேலை செய்பவர். கருத்த பருத்த தோள்கள் கொண்ட நெடிதுயர்ந்த உடல். வெள்ளை வெளேரென்ற வேட்டி தாடியும். எட்டு வயதில் அவர் ஜாடையில் ஒரு பையன். மனைவி இறந்து விட்டதாய்க் கேள்வி. அப்பாவுக்கும் இந்தப் புத்தகக் கடைக்காரருக்கும் புத்தகத்தைக் கலைத்த விஷயமாய் ஏற்பட்ட சண்டை நெருக்கமான நட்பில் கொண்டுவிட்டது வேறு கதை. டேவிட்கூப்பர் போன்ற ஆங்கிலக் கவிகளின் கவிதைகள் கொண்ட புத்தகத்தை அப்பா கொண்டு வருவார். தான் இண்டர் மீடியட்டில் படித்து ரசித்ததை இந்த நூலிலிருந்து படித்து எனக்கு விளக்கிப் படிக்கவும் வற்புறுத்துவார். மர்டாக் ரீடர், கிங் ரீடர் போன்ற ஆங்கில வாசகங்களை நடேசாச்சாரியின் பழம் புத்தகக் கடையிலிருந்து கொண்டு வந்து பாடஞ்சொல்லித் தருவார். இவை அவர் காலத்தில் பள்ளிகளில் பாடப் புத்தகங்களாயிருந்தவை என்பார். இங்கிலாந்தில் அச்சிடப்பட்டவை. ஒரு மாதிரி புத்தியை ஆங்கிலத்தனமாய் வளர்த்து வைத்தார். கொஞ்சம் கொஞ்சமாய் நடேசாச்சாரியின் பழம் புத்தகக் கடை என்னையும் கவர்ந்தது. வண்ண ஓவியங்கள் நிறைந்த கிரேட் பிரிட்டனில் பதிப்பிக்கப்பட்ட ஷேக்ஸ்பியர் கதைகள், நாடகங்கள், சர்வாண்டிஸ்ஸின் “டான்க்வையோட்டே” முதலியவற்றை வாங்கினேன். இந்த சமயம் அமெரிக்க பதிப்பில் சுருக்கப்படாத அசல் மோபிடிக் கிடைத்தது. கடலும் திமிங்கல வேட்டையும் பாய் மரக் கப்பலும் என்னைக் கவர்ந்தன.
எழுத்தாளனாய் வளர்ந்த காலத்தில் தீபம் இதழில் வெளியான எனது பல சிறுகதைகளில் “பேர் கொண்டான்” ஒன்று. இது நடேச ஆச்சாரியையும், என் அப்பாவையும் அவர்கள் உறவையும், பழம் புத்தகக் கடையையும் வைத்து எழுதியது. இதில் நானம் ஒரு பாத்திரம். விசேஷ நாட்கள் பண்டிகையின்போது வீட்டில் செய்யும் தின்பண்டங்கள், பாயசம் ஆகியவற்றை எடுத்துப்போய் அப்பா நடேசாச்சாரிக்கும் அவர் பையனுக்கும் தருவார். பிறகு விலைக்கு வாங்காமல் அங்கிருந்து நிறைய புத்தகங்களை எடுத்து வந்து படித்துவிட்டுக் கொண்டு போய் வைப்பார். தான் ரசித்த வரிகளை, இடங்களை அப்பா பேனாவால் அடிக்கோடிட்டு வைப்பார். ஆச்சாரி தமிழைக்கூட எழுத்து கூட்டித்தான் படிப்பார்.
“இப்படி எம் புஸ்தகத்தில படிச்சிட்டு கோடு கோடா போட்டு வைக்கிறியே, அப்படி என்ன அற்பும் அதிலயிருக்கு?” என்று அப்பாவிடம் கேட்டபோது, அப்பா அதை விளக்கிவிட்டு படித்துக் காட்டுவார். இருவரும் சில நாட்களில் அருகிலிருந்த வில்வாத்ரி பவனில் காபி சாப்பிடுவார்கள்.
அப்பா இறந்தபோது நடேச அச்சாரி தன் பையனோடு வீட்டுக்கு வந்திருந்து அப்பாவின் உடலுக்கு வணங்கி இறுதி மரியாதை செலுத்தினார். பல ஆண்டுகள் போய், சென்னையிலிருந்து சேலம் சென்ற சமயம் நரைத்த முடியுடன் கண்ணாடியணிந்து கண்மூடி தேரடியில் அமர்ந்திருந்த நடேசாச்சாரியைப் பார்த்தேன். கடையில் மலிவான தமிழ் செக்ஸ் புத்தகங்கள், மாத நாவல்கள், பாட்டில்கள், பிளாஸ்டிக் சாமன்கள் ஆகியவை நிறைந்திருந்தன. சிறு மர அலமாரி ஒன்றில் ஒன்றரை நூற்றாண்டுக்கு முன் இங்கிலாந்தில் பதிப்பிக்கப்பட்ட ஆங்கில நூல்கள் கொஞ்சம் இருந்தன. எடுக்கும்போதே பிஸ்கெட் உடைவதுபோல் அவற்றி தடித்த தாள்கள் உடைந்தன. அவற்றின் பல பக்கங்களில் பல பத்திகள், வரிகள் பேனாவால் அடிக்கோடிடப் பட்டிருந்தன. என் கண்கள் பனித்தன.
“அதையெல்லாம் எடுக்காதீங்க வைங்க,” என்று அதட்டலாகச் சொன்னார் அவர்.
“இதெல்லாம் வேணும். என்ன விலை?”
“அதெல்லாம் விற்கிறதுக்கு இல்லே. வச்சிடுங்க.”
“ஏன்?”
“இல்லேன்னா போக வேண்டியதுதானே?”
நான் யார் என்பதை சொன்னபோது ஆச்சரியத்தோடு பார்த்துவிட்டு,”ஒங்கப்பாவும் நானும் பழகினத்துக்க அது சாட்சி. அதை எடுத்து அப்பப்ப பார்த்துக்கிட்டிருப்பேன். அவரு இருக்கிறமாதிரியே இருக்கு. அவரை மறுபடியும் எங்கிட்டேயிருந்து பிரிச்சிடாதே தம்பி” என்றார் நடேசாச்சாரி.

பார்டர் அனுபவங்கள்..


நான் இப்பொழுது ஒரு
பள்ளத்தாக்கிற்கு முன்புள்ளேன் ..

பனிக்கட்டிகள் என்னை சுற்றி
படர்ந்துள்ளது ..

வாடைக்காற்று இதயத்தை
தொட்டு செல்கிறது ..

பெயர் தெறியா பறவையொன்று
“க்கி க்கி” என சப்தமிட்டுக்கொண்டே
வானில் பறந்து கொண்டுள்ளது ..

கவிதை புத்தகம்
கையில் வைத்துள்ளேன்

கம்பனி கமாண்டரின்
விசில் சுப்தம் கேட்கிறது ..

சாய்த்து வைத்திரிந்த
இன்சாஸ் துப்பாக்கியை
எடுத்துகொண்டேன் ..

இப்போது

கடமையையும்
கவிதையையும்
சுமந்துகொண்டு செல்கிறேன் ..

நான்,பிரமிள்,விசிறி சாமியார்…….10

பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது சிலசமயம் பிரமிளிடம் கேட்பேன். கவிதை எப்படி இருக்க வேண்டும்? என்று. பிரமிள் எளிதில் பதில் சொல்லமாட்டார். கேட்காததுபோல் இருப்பார். பின் சொல்வார், ‘உயிருள்ளதாக இருக்கவேண்டும்,’ என்று. பின் அதைப் பற்றி தொடர்ந்து விளக்கமாக எதுவும் சொல்லமாட்டார். எனக்கு அவர் சொன்னதைக் கேட்டு இன்னும் சில கேள்விகள் எழும். உயிருள்ளதாக இருக்க வேண்டுமென்பது சரி, எப்படி அதைக் கண்டு பிடிப்பது. பிரமிளின் இன்னொரு பழக்கம். அவர் யாரையும் மதிப்பதில்லை. சிலர் பெயர்களைக் கேட்டால் கடுமையாக தாக்க ஆரம்பித்துவிடுவார். ஒரு சிறு பத்திரிகை என்றால் குறைந்த பட்சம் 1000 பேர்களுக்குள்தான் வாசிப்பார்கள். பிரமிள், ‘படிப்பவர் எண்ணிக்கை அதிகமானால் அது சிறு பத்திரிகை இல்லை,’ என்பார்.

பிரமிளும் நானும் ஒருநாள் நடந்துபோய்க் கொண்டிருந்தோம். தியோசிபிகல் சொசைட்டி முழுவதும் சுற்றி வந்தோம். அங்குள்ள விதவிதமான மரங்களைப் பற்றி பிரமிள் பலவிதமாக சொல்லிக்கொண்டே வந்தார். அவர் மரங்களைக் காட்ட காட்ட நான் அப்போதுதான் அதை புதிய விதமாக அறிந்து கொண்டதுபோல் தோன்றியது. ஒவ்வொரு மரத்தின் விசேஷத்தைப் பற்றி விவரமாகச் சொல்வார். பலமுறை அவர் அங்கு வந்து போனவராகத் தோன்றியது.

ஒரு இடத்தில் நின்றார். அங்கு ஒரு பெரிய மரம் இருந்தது. அந்த மரத்தைப் பற்றி விவரித்து வந்தவர், அங்குள்ள ஒரு பெரிய பாறாங்கல்லை எடுத்துப் புரட்டினார். பாறாங்கல்லின் அடியில் ஒரு கருத்தத் தேள் இருந்தது. பார்த்தவுடன் நான் திகைத்துவிட்டேன். தேள் என்றார் பிரமிள். என்னடா இது வம்பாப் போச்சு என்று தோன்றியது. இவரோடு சுற்றினால் தேள் எல்லாம் தட்டுப் படுகிறது. பின் ஒரு வற்றிய குளத்தை நோக்கி நாங்கள் நகர்ந்தோம். பிரமிள் ஒரு காகிதத்தில் அவர் பெயரை எழுதி சுருட்டி அந்தக் குளத்தில் வீசி எறிந்தார். பின் என் பெயரையும் எண் கணிதப்படி எழுதி வீசி எறிந்தார். எண் கணிதப்படி பிரமிளிடம் யாராவது அறிவுரைக் கேட்டால் தொலைந்தோம். தமிழ் எழுத்தாளர்களின் பலருடைய பெயர்களை அவர் அப்படித்தான் மாற்றியிருக்கிறார். என் ஜெயராமன் என்ற பெயரை நாராணோ ஜெயராமன் என்று மாற்றியிருக்கிறார். சங்கர் என்ற பெயரை சுப்பரபூ சங்கர் என்று மாற்றியிருக்கிறார். இப்படிப் பெயரை மாற்றி எழுத ஆரம்பித்தவர்கள் எல்லாம் பின்னால் எதுவும் பெரிதாக எழுதாமல் போய்விட்டார்கள் என்று தோன்றுகிறது. என் பெயரையும் விஸ்வ ரூப கிரி என்று வைத்துக்கொள்ள சொன்னார். அவர் என்னை கிண்டலடிப்பதுபோல் தோன்றியது.

ஒருநாள் வீட்டிற்கு வந்தார். ‘இன்னிக்கு முக்கியமான நாள்,’ என்றார். ‘என்ன?’ என்று கேட்டேன். ‘என் பிறந்தநாள்,’. ஏனோ அவர் எத்தனாவது பிறந்தநாள் என்பதைக் குறிப்பிடவில்லை. நான் சரவணா ஓட்டலுக்கு அழைத்துப்போய் டிபன் வாங்கித் தந்தேன். பொதுவாக பிறந்தநாள்கள் ஞாபகத்தில் இருப்பதில்லை. இன்று என் பிறந்தநாள் என்று கூட நினைக்காமல் பல ஆண்டுகளைக் கடத்தியிருக்கிறேன்.

நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, பிரமிள் ஒருமுறை குறிப்பிட்டார். அவர் தலை முடியை அவர்தான் திருத்தம் செய்து கொள்வாராம். எனக்கு கேட்க ஆச்சரியம். ‘இன்னொருவர் என் தலையைப் பிடிப்பது எனக்குப் பிடிக்காது.’ பிரமிளுக்குக் கோபம் வந்தால் கண்டபடி திட்டிவிடுவார். ஒரு திறமையான கலைஞன் வசிப்பதற்கு உகந்த இடம் இல்லை. பொது கழிப்பறை உள்ள இடத்திற்குப் பக்கத்தில் அவர் ஒரு அறையில் குடியிருந்தார். யாரும் அவரை அந்த இடத்திற்கு வந்து பார்க்க மாட்டார்கள். மழைக் காலத்தில் அங்கு வசிக்கவே முடியாது. அப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த பிரமிளை ஒரு இலக்கிய நண்பர் அமெரிக்காவில் உள்ள நிலையை ஒப்பிட்டு ஏதோ சொன்னார். அதைக் கேட்டவுடன், பிரமிளுக்கு படு பயங்கரமாக கோபம் வந்து அந்த இலக்கிய நண்பரை ஒரு வழி பண்ணிவிட்டார். திட்டோ திட்டு என்று திட்டி விட்டார்.

(இன்னும் வரும்)

பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்……18

பூனையாய்…

புதுவை சீனு. தமிழ்மணி

வீடில்லை
பல்லாண்டுகளாக
கட்டச்சொல்லி
அலுத்துப் போனாள் –
இல்லாள்
8 x 10 அளவுள்ள வீட்டில்
இல்லாள், இருமகள்கள், வீடு முழுக்கப் புத்தகங்கள்
எனப் படுக்கவும் முடியாத
வீட்டில்
பூனையொன்று வந்தது –
மூன்று குட்டிகளோடு
வாடகை வீட்டில்
வாடகை இல்லாமல்

பிசாசுகள் ஒளிந்து கொள்ளும் கவிதைகள்

பிசாசுகள் கவிதைக்குள்
ஒளிந்து கொள்வதில்லை
கவிதையின் சூடு தாங்காமல்
பிசாசுகள் செத்துவிடக்கூடும்

பிசாசுகள் மனித உடலில்
எவ்வாறு குடியேறுகின்றன
எப்படி வாழ்கின்றனென்பதை
கவிதைகள் அறியும்.

பிசாசுகள் விரட்டிய கவிதைகள்
மண்ணில் நெடுங்காலம்
வாழ்ந்திருக்கின்றன

பிசாசுகளின் புகைபடங்கள்
யாரிடமுமில்லை.
அவை எங்கிருந்து பயிராகின்றன.
எப்படி இரவுகளை கடக்கின்றனென்பதை
கண்டுபிடிக்கின்றன கவிதைகள்.

பெண் உதட்டின் வாசனை பிடித்து
நுழையும் பிசாசுகளை
கவிதைகள் காட்சிப் படுத்துகின்றன

இந்தக் கவிதைக்குள்
கொதிக்கும் நீரை செலுத்துகிறேன்.

ஒளிந்திருக்கும் பிசாசுகள்
அலறியடித்துச் செல்லக்கூடுமென்று
பிசாசுகளுக்கு செல்லமாக
நீங்கள் பெயர் வைத்திருக்கலாம்

அடிமைத்தனமென்றோ
அவமானமென்றோ
அச்சமென்றோ ஏதாவது ஒன்று.

பிசாசுகளை
அடையாளம் காணுங்கள்
அதைத் துரத்தும் வழிகளை
சொல்லித் தரக்கூடும் ஏதோவொரு கவிதை.

சிறுமழை ———–


முன்னிருக்கையில்
அமர்ந்திருக்கும் சிறுமி
ஓய்ந்து முடிந்த
மழை முத்துக்கள் சொட்டும்
பேருந்தின் ஜன்னல் கம்பிகளை
விரலால் தொட்டு தொட்டு
வெளியே சுண்டுகிறாள்.
சிறுமழையொன்று பெய்கிறது.


விருட்சம் இலக்கியச் சந்திப்பு

அன்புள்ள நண்பர்களே,

வணக்கம்.

உங்களுடன் நவீன விருட்சம் ஏற்பாடு செய்த கூட்டத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்று நினைத்தபோது, 2 வாரங்கள் கணினியின் மூளை மழுங்கிவிட்டது. கூட்டம் பற்றியும் அதில் கலந்துகொண்டவர்களைப் பற்றியும் கருத்தும், அவர்களுடைய புகைபடங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 16.08.2009 அன்று நடந்த கூட்டம் நவீன விருட்சம் நடத்தும் 51வது கூட்டம். நவீன விருட்சத்தின் கடைசிக் கூட்டம் 2003ல் நடந்தது.

ஒரு கூட்டத்தைப் பற்றி உடனே எழுதாவிட்டால், கூட்டத்தில் என்ன பேசினோம் என்பது மறந்தே போய்விடுகிறது. என் விஷயத்தில் இது இன்னும் மோசம். முக்கிய பேச்சாளர்களாக சிவக்குமாரும், ஞானக்கூத்தனும் கலந்து கொண்டார்கள். ஆள் சேகரிக்கும் கூட்டம் இல்லாததால் வருபவர்கள் வரட்டுமென்று விட்டுவிட்டேன். 25 பேர்கள் கலந்து கொண்டார்கள். இந்த 25 பேர்களும் முக்கியமானவர்கள். எல்லோரும் படைப்பாளிகள். பார்வையாளர்கள் என்பது படைப்பாளிகளாகவும், பார்வையாளர்களாகவும் மாறி மாறி தோற்றம் தந்தார்கள்.

இக் கூட்டம் தேவநேய பாவணர் மைய நூலகத்தில் 16.08.2009ல் மாலை 6மணிக்குமேல் நடைபெற்றது. முன்பு இக் கருந்தரங்கு அறையின் வாடகை ரூ.50. இப்போது ரூ.250. ஆனால் முன்பை விட புதிய பொலிவுடன் அறை காட்சி தந்தது. முக்கியமாக இக் கூட்டம் நடைபெற வேண்டிய இடம் அண்ணாசாலை. இங்கிருந்து எல்லா இடங்களுக்கும் போய்ச் சேர வசதியாக இருந்தது.

இக் கூட்டம் நடைபெறும் இடத்தைப் பதிவு செய்ய நான் பட்டப்பாடைப் பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும். கூட்டம் நடத்துவதற்கு இந்த தேதியில் இடம் உள்ளதா என்று கேட்க வேண்டும். பின் இந்த நேரத்தில் இந்தத் தேதியில் இடம் கிடைத்தால் உடனே பணம் கட்ட வேண்டும். பின் ஒரு கடிதம் எழுதி அக் கடிதத்தை ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்திற்குச் சென்று அனுமதி பெற வேண்டும். கொஞ்ச நாட்களாய் பிரச்சினையாக இருப்பதால் போலீஸ் அனுமதி இன்றி கூட்டம் நடத்த முடியாது.

நான் என்னைப் பற்றியும் கொஞ்சம் விளக்க வேண்டும். 31 ஆண்டுகளாக ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரிகிறவன். அலுவலகத்திற்குக் காலை 7.30 மணிக்குக் கிளம்பினால், இரவு சுமார் 7.30 க்கு வீட்டிற்கு வந்துவிடுவேன். அலுவலகத்திற்கு வந்தால் துணியைப் பிழிவதுபோல் பிழிந்துவிடுவார்கள். எளிதில் தப்பித்து வரமுடியாது. கூட்டத்தை எப்படி நடத்துவது? தேவநேய பாவணர் மைய நூலகத்திற்கு 5.30 மணிக்குள் சென்று எப்படி பணம் கட்டுவது. நான் பணிபுரியும் இடம் அஸ்தினாபுரம். கிட்டத்தட்ட குறைந்தபட்சம் 20 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பவன். அங்கிருந்து வருவது என்பது அசாத்தியமான திறமை வேண்டும்.

யாராவது நமக்காக இந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டு உதவி செய்வார்களா என்று எதிர்பார்த்தால், இந்தக் கூட்டத்திற்கு வந்த 25 பேர்களும் வர மாட்டார்கள். லாவண்யா என்ற இலக்கிய நண்பர் எனக்காக போய் பணம் கட்டிவிட்டு வந்தார். பின் நான் ஏதோ காரணத்திற்காக விடுமுறை எடுத்துக்கொண்டு அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்று பல மணிநேரம் காத்திருந்தேன். அப்போதுதான் தோன்றியது ஏன் இதுமாதிரி கூட்டம் நடத்த வேண்டுமென்று.

போலீஸ்காரரிடம் நான் நடத்துவது இலக்கியக் கூட்டமென்றும், 50 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய புதுக்கவிதைக்காக இக்கூட்டம் என்று கூறினேன். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. யார் முக்கிய புள்ளி கூட்டத்திற்கு வருகிறார்கள் என்று கேட்டார். நாங்கள் எல்லோரும் முக்கியப் புள்ளிகள் என்றேன் சிரித்துக்கொண்டே.

இப்படியெல்லாம் ஏற்பாடு செய்தபிறகு நான் கூட்டத்திற்கு யார் வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. விரும்புவர்கள் வரட்டுமென்று இருந்துவிட்டேன். அல்லது கூட்டத்தில் பேசுபவர்கள், பின் நான் நிச்சயமாக வருவோம் என்று எண்ணியிருந்தேன். பின் கூட்டத்திற்கு 25 பேர்கள் வரை வந்துவிட்டார்கள். ‘எழுத்து’ பத்திரிகை தொடங்கி இன்றைய சிறு பத்திரிகைகள் பற்றி சிவக்குமார் உரை நிகழ்த்தினார். புதுக்கவிதையின் தோற்றம் பற்றி ஞானக்கூத்தன் பேசினார். பின் பலர் கவிதைகள் வாசித்தார்கள். எல்லாவற்றையும் காசெட்டில் பதிவு செய்திருப்பதால், என்ன பேசினார் என்பதை முடிந்தவரை எழுத முயற்சி செய்கிறேன்.
(இன்னும் வளரும்)