கவிதையும் ரசனையும் (பகுதி 2)

கவிதையும் ரசனையும் – 6

(பகுதி 2)

அழகியசிங்கர்

‘லாங்ஸ்டன் ஹியூஸ்’ கவிதையைப் பார்ப்போம்.

            ‘கலப்பு’ என்பது அக் கவிதையின் தலைப்பு.

            என் தந்தை ஒரு வெள்ளையன்

            என் தாய் ஒரு கறுப்பி

            என் வெள்ளை தந்தையைச் சபித்தால்

            என் சாபம் எனக்கே திரும்பும்

            என் கறுப்புத் தாயைச் சபித்தால்

            அவள் நரகத்தில் இருக்க விரும்பினால்

            அந்த கெட்ட விருப்புக்கு வருத்தம்

            அவள் நன்றாக இருக்கட்டும் அதுவே

            என் இப்போதைய விருப்பம்

            என் தந்தை இறந்தது அழகிய பங்களாவில்

            என் தாய் செத்தது ஒரு குடிகையில்

            நான் சாகப் போவது எங்கேயோ

            நான் வெளுப்பும் இல்லை கருப்பும் இல்லையே 

            பெரும்பாலும் மொழிபெயர்ப்புக் கவிதைகளுக்கு சிறுபத்திரிகைகள்தான் தான் அடைக்கலம் கொடுக்கின்றன.  ஆனால் இன்னும் கூட வணிக ரீதியாக இயங்கும் பத்திரிகைகள் மொழிபெயர்ப்புக் கவிதைகளைப் பிரசுரம் செய்வதில்லை.  ஏன் என்று தெரியவில்லை?

            ஆனால் ஒருவர் விதம்விதமாக கவிதைகள் எழுத வேண்டுமென்று நினைத்தால் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் வாசிக்க வாசிக்கப் பலவிதங்களில் எழுத உதவும்.  இதை சி சு செல்லப்பா புரிந்து வைத்திருந்தார்.

            மேலே குறிப்பிடப்பட்ட லாங்ஸ்டன் ஹியூஸ் கவிதையைப் பார்ப்போம்.  தந்தை வெள்ளையனுக்கும் தாய் கறுப்பிக்கும் பிறந்திருக்கும் பையன் வழியாக இந்தக் கவிதை சொல்லப்பட்டிருக்கிறது.  பையனுக்குச் சந்தேகம் வந்துவிடுகிறது. அவன் சாகப் போவது எங்கே?  அவன் கருப்புமில்லை வெளுப்புமில்லை. அவன் தந்தை ஒரு வெள்ளையன் என்பதால் அவன் அழகிய பங்களாவில் இறந்து போகிறான். அவன் தாய் செத்தது ஒரு குடிசையில்.  அவன் வெள்ளைத் தந்தையைச் சபித்தால் என் சாபம் எனக்கே திரும்பும் என்று கவிகுரலோன் கூறுகிறான்.

            லாங்ஸ்டன் ஹியூஸ் ஒரு நீக்ரோ கவிஞர்.  இன்னும் அதிகமாக மொழிபெயர்ப்புக் கவிதைகளை எடுத்து ஆராய வேண்டும் என்று தோன்றுகிறது.

            ‘பிரமிள் படைப்புகள்’ என்ற புத்தகத்தில் கவிதைகள் என்ற தலைப்பில் அவருடைய கவிதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன.  அதில் எஸ்ரா பவுண்ட் கவிதைகளை மொழி பெயர்த்திருக்கிறார் பிரமிள்.  அதில் ஒரு கவிதை. 

சுருட்டுக்கடை

ஆண்டவனே! சுக்கிரபகவானே! 

நெடர்களைப் போஷிக்கும் புதனே! 

கெஞ்சிக் கேட்கிறேன்,

காலாகாலத்தில் 

எனக்கொரு

நட்டுக்கடை வைத்துக்கொடுங்கள் சாமி!

விதவிதமாகப் பதனிட்டு 

கண்ணாடி பீரோவினுள் 

அழகான பெட்டிகளில் 

அடுக்கப்பட்ட 

வெவ்வேறு வெட்பதட்பங்களின் 

சுருட்டுக்கள். 

கூடவே, எடைபோட 

எண்ணெய்ப் பிசுக்கு 

ரொம்பவும் இல்லாத ஒரு தராசு. 

இன்னும் ஒன்று – 

கலைந்த தலைமயிரைச் செப்பனிட்டு, 

சிறுவிஷமச் சொற்கள் பரிமாற 

அவ்வப்போது சில 

வேசிகளும் வரவேண்டும். 

ஆண்டவனே! சுக்கிரபகவானே! 

திருடர்களைப் போஷிக்கும் புதனே! 

எனக்கு ஒரு சுருட்டுக்கடை வேண்டும் சாமி! 

இல்லையானால் வேறு ஏதும் ஒரு தொழில் – 

நிரந்தரமும் மூளை தேவைப்படுகிற 

இந்த எழுத்துத் தொழில் தவிர.  

            இந்தக் கவிதையைப் படிக்கும்போது சிரிப்பு தாங்க முடியவில்லை.  கவிதையில் திருடர்களைப் போஷிக்கும் புதனே என்கிறார்.  கடவுளிடம் என்ன வேண்டிக்கொள்கிறார் தெரியுமா? சுருட்டுக் கடை வைத்துக்கொடுக்க அருள் புரிய வேண்டும் என்கிறார்.

      ஒரு கவிதையை எப்படியெல்லாம் கற்பனை செய்யலாம்  என்பதற்கு இது முன்மாதிரி.  எஸ்ரா பவுண்ட் என்ற கவிஞர் இதுமாதிரியெல்லாம் எழுதி உள்ளார்.

 கடைசியில் முடிக்கும்போது திருடர்களைப் போஷிக்கும் புதனே என்கிறார்.  ஏன் இப்படியெல்லாம் வேண்டிக்கொள்கிறார் என்றால் மூளை தேவைப்படுகிற எழுத்துத் தொழில் தவிர இதை அளிக்கச் சொல்கிறார்.

            இப்படி சிறுபத்திரிகைகளில் வரும் மொழிப்பெயர்ப்புக் கவிதைகளை இன்னும் பின்னால் ஆராய்ந்து பார்ப்போம்.

(08.12.2020 தேதியிட்ட திண்ணை இணைய வார பத்திரிகையில் பிரசுரமான கட்டுரை)

நவீன விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்

 

அழகியசிங்கர்  

ஜ்யோத்ஸனாமிலன் கவிதைகள்

1) மழைக்குப் பின் .. 

இந்த கணம்தான் 

உருவானதுபோல் எல்லாம் 


நான் பார்க்கப் பார்க்க

 முளைத்தன மரங்கள் 


படர்ந்து சென்றது வானம் 

எதிலும், எங்கும் 


காற்றில் பழுத்தன பறவைகள் 

மனிதர்களும் 

இப்போது தான் தோன்றியது போல் 

எங்கெல்லாமோ … எப்படியெல்லாமோ 


மண்ணில்தான் எத்தனை இதமும் பதமும் 

விதைத்துவிடு  

மனதில் தோன்றியதை 

ஆகாயத்தைக் கூட 


சிருஷ்டித்துக் கொள் 

விரும்பியவற்றை 

மரம், பறவை, வீடு 

ஏன் மனிதனையும் கூடத்தான்

ஹிந்தி மூலம் : ஜ்யோத்ஸ்னாமிலன்


தமிழில் : திலீப்குமார்


(நவீன விருட்சம் இதழ் :7 ஜனவரி – மார்ச்சு 1990)

விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்

மார்ஸிலிஜஸ்மார்டினைடிஸ்

நித்தியம்

அதிகாலை விழித்த கிழவன பார்வையில்
வாசல் முன் அன்றைய சுமை.

நெருப்பு வளர்த்தல், கட்டளையிடல்,
வாளிகளின் ஒலி கிழவனின் பெருமூச்சு
அனைத்துமே அடக்கம் அச்சுமையில்

அவிழ்க்கப்பட்ட சுமையில்
ஆற்றவேண்டிய காரியங்களால்
நிறைந்து போனது முற்றம் முழுதும்.
கதவின் கீச்சொலி

வைக்கோலின் குசுகுசுப்பு
ஜன்னலின் பளிச்சிடல்
கால்நடைகளின் பெருமூச்சு
பறவைகளின் இன்னிசை
மனிதர்களின் பேச்சரவம்
சக்கரங்களின் சடசடப்பு

அந்தியும் வந்தது
இன்பமயமான நீண்ட அந்திமாலை.

மூலம் : லிதுவேனியக் கவிதை

ஆங்கில வழி தமிழில் : நஞ்சுண்டேஸ்வரன்.

(நவீன விருட்சம் ஜøலை – செப்டம்பர் 1989)

விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்

எம். கோவிந்தன்

நானும் சைத்தானும்

தேவனுக்குரியதை தேவனுக்கும்
தேசத்திற்குரியதை அதற்கும்
தர நான் முன் வந்த போது
யாரோ என் முன் வந்து சொன்னான்
‘எனக்குரியதை கொடு’
‘யார் நீ’ என்றேன்
‘தெரியாதோ சைத்தானை’ என்றான்
‘கேட்டுக் கொள்
என்னுடையவை எல்லாமே எனக்குத்தான்
என்பதே இன்றுமுதல் என்வேதம்’ என்றேன்
சைத்தான் உரக்க சிரித்தான்
என்னை சிக்கென்று கட்டிப் பிடித்தான்
செவியில் மெல்ல சொன்னான்
‘எனக்கு வேண்டியதைத்தான்
தந்தாய் நன்றி’

(சமீபத்தில் காலமான மலையாள அறிஞர், கவிஞர் எம். என். ராயின் பிரதான மாணவராக அறிவுத்துறை யிலும் மலையாள மொழியின் திராவிட மயமாக்குதலை தொடங்கி வைத்தவர் என்ற நிலையில் இலக்கியத்திலும் முன்னோடியாக திகழ்ந்தவர்)

மொழிபெயர்ப்பு : ஜெயமோகன்
(நவீன விருட்சம் ஜøலை – செப்டம்பர் 1989)

விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்

சுக்வீர் கவிதைகள்

2. வண்ணங்கள்

வண்ணங்கள் சாவதில்லை
அவை கரைந்து விடுகின்றன
அல்லது அடித்துக் கொண்டு போகப்படுகின்றன
அல்லது பூமியின் அந்தகாரத்தில்
விதைக்கப்படுகின்றன.
வண்ணங்கள் மலர்களாக மாறுகின்றன,
மேகங்களின் ஒளிர்ந்து
உதடுகளில் புன்னகை பூக்கின்றன,
கண்ணீரைப் பெருக்கி
ஒளியை ஈன்றெடுக்கின்றன.

வண்ணங்களாகிய நாம்;
வண்ணங்கள் உருவாக்கும் நாம்
வாழ்க்கையை
நம் முதுகுகளில் சுமந்து கொண்டோ
நம் பின்னால் இழுத்துக் கொண்டோ
நம் சிறகுகளில் அலைத்துக்கொண்டோ
இங்கு வந்து சேர
நூற்றாண்டுகளைத் தாண்டியிருக்கிறோம்,

இருள் முதல் ஒளிவரை உள்ள
எல்லா வண்ணங்களுமான நாம்
பல தடவைகளில்
அடித்துக்கொண்டுபோகப்பட்டு
மறுபடியும் பிறந்திருக்கிறோம்.
இன்றும்
காலத்திரையை வண்ணங்கொண்டு தீட்டுகிறோம்

அனாதிகாலத்தொட்டுப் பிறந்து வரும் நாம்
வாழ்க்கையின் அமுதைக் குடித்ததால்
இன்றும்
நஞ்சுடன் கலந்த வாழ்க்கையமுதைச்
சுவைக்கிறோம்
கனவுகளை உருவாக்குகிறோம்

மூலம் : பஞ்சாபி தமிழில் : மேலூர்

சுக்வீர் (1925) நாவல், சிறுகதை, கவிதை இத்துறைகளில் பஞ்சாபி மொழியில் சிறந்து விளங்குகிறார். நான்கு கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. நாற்பத்தைந்து நூல் களுக்கு மேலாக பஞ்சாபியில் மொழி பெயர்த்திருக்கிறார். அவரது கவிதைகளும் கதைகளும் ஆங்கிலத்திலும் வேறுபல இந்திய, அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.

(நவீன விருட்சம் ஜøலை – செப்டம்பர் 1989)

சுக்வீர் கவிதைகள்

1. நடத்தல்

நான் நடக்கிறேன்
என் கால்களால் அல்ல
கண்களால் –
சாலைகளையும் தெருக்களையும்
இதயத் தொகுதிகளையும்
இரவின் இருளையும்
கடந்து செல்கிறேன்
சுற்றிலும்
மக்களின் காடு.
என் கண்களின் துணையோடு
அதைக் கடந்து செல்கிறேன்
கண்களுக்கே
அதனூடு செல்லும் திறன் உண்டு.

என் கால்கள் களைத்துவிட்டன
மிகவும் களைத்துவிட்டன.
ஆனால்
நான் நடந்துகொண்டேயிருக்கிறேன்
மக்கள் கூட்டங்களில் சிக்குண்டு
நான் முன்னேறிப் போகிறேன்.
என்றாலும்
இதயங்களின் வலி என்னும்
எல்லையைக் கடக்க
என்னால் இயலவில்லை.

நான் நடக்கிறேன்
என் கால்களால் அல்ல
கண்களால் –
ஒரு நீண்ட பயணம்
(நவீன விருட்சம் ஜøலை – செப்டம்பர் 1989)

கேரளக் கன்னிக்கு

உன் பாதங்கள் உன் கைகளைப்போல
மென்மையானவை. உன் இடை மிக அழகிய
வெள்ளைக்காரப் பெண்ணையும் பொறாமையுறச் செய்யும்
சிந்தனை மிக்க கலைஞனை உன் சரீரம் வசீகரிக்கும்.
வெல்வெட்டுப் போன்ற உன் கண்கள்
உன் மேனியை விடக் கரியவை
நீலமேகங்களும் புழுக்கமும் நிறைந்த
உன் தாய் நாட்டில் உன் முதலாளியின்
புகைபிடிக்கும் குழாயைப் பற்ற வைத்து
பாத்திரங்களில் நீரை நிரப்பி
வாசனைத் திரவியங்கள் கலந்து,
தொல்லை தரும் கொசுக் கூட்டங்களைப்
படுக்கையினின்றும் விரட்டியடித்து,
புலர்ந்து புலராப் பொழுதில்
அத்திமர இலைகளின் வழி
காற்று இசை எழுப்பும் போது
அங்காடியில் அனாசிப் பழமும்
நேத்திர வாழைப்பழமும் வாங்குகிறாய்.
நாள் முழுவதும் நீ விரும்புகிற இடத்துக்கெல்லாம்
வெறுங்காலுடன் சென்று
மறந்துபோன பழம் பாடல்களை
மனதுக்குள்ளேயே முணுமுணுக்கிறாய்.
மேற்கே, சூரியன் தன் சிகப்புச் சட்டையோடு
சாயும்போது கோரைப்பாயில் நீயும்
மெதுவாகத் தலை சாய்க்கிறாய்.
மிதக்கும் உன் கனவுகளில்
குருவிகள் கீச்சிடும், வண்ணப்பூக்கள் மலர்ந்து வழியும்.
களித்துத் திரியும் கன்னியே,
கடலோடிகளின் வன் கரங்களில்
உன் வாழ்க்கையை ஒப்படைத்து,
உனக்குப் பிடிக்கும் புளிய மரங்களிடம்
இறுதி விடை பெற்று,
கும்பல் மிகுந்து அல்லலுறும் எங்கள் நாட்டை
ஃபிரான்ûஸ, நீ ஏன் பார்க்க விரும்புகிறாய்?
மென்துகிலை இடைவரை உடுத்து. இங்கு
நீ வெண்பனியிலும் ஆலங்காட்டி மழையிலும்
குளிரால் நடுங்குவாய் மிகவும் இறுகிய
முலைக்கச்சை அணிந்து.
உன் அரிய வனப்பின் மணமனைத்தையும் விற்று.
எங்கள் ஒழுக்கக்கேடுகளில்
உன் வயிறைக்ட கழுவநேர்ந்தால்
உன் இனிய, எளிய, அமைதியான வாழ்வை
எண்ணி எண்ணி எவ்வாறு நீ ஏங்குவாய்?
எங்கள் நாட்டுக் கனத்த மூடுபனியூடே
மறைந்து போகும் உன் நாட்டுத்
தென்னை மரங்களின் பொய்த்தோற்றங்களை
எப்படித்தேடுவாய்?

மூலம் : பிரெஞ்சு

ஆங்கிலம் வழி தமிழில் : அமுதன்

சார்லஸ் போதலேர் (1821-1867) ஃபிரென்சு நாட்டுக் கவிஞர்களில் சிறந்த ஒருவர். வறுமை, பிணி, மனக் கசப்பு எல்லாம் அவர் வாழ்க்கையைப் பாழடித்தன. அவரது கவிதைத் தொகுதி தீயது எனத் தீர்ப்புக்கூறப்பட்டது. ஆனால் அவரைக் குற்றமற்றவர்கள் என்றார்கள். 1946-ல் ஒரு பிரத்யேகச் சட்டத்தை இயற்றி, அவரது கவிதைகள் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சென்ற நூற்றாண்டு மத்தியில் போதலேர் இந்தியாவுக்கு வந்தார். அப்போது இக் கவிதை எழுதப்பட்டிருக்கலாம்.

(நவீன விருட்சம் ஏப்ரல் – ஜ÷ன் 1989)