புஷ்பால ஜெயக்குமார்
நகரத்தின் நடுவே ஓடுகின்ற
ரயில்களின் நிலையத்தில்
நாகரீகம் உச்சம் தொட்டிருந்த
மனிதர்கள் குளிரூட்டப்பட்ட
பெட்டிகளில் தனிமையில் பயணம் செய்தார்கள்
புழக்கத்திலிருந்த புராதன சின்னமாகிய
ரயில் நிலையங்கள்
யாரும் மறந்து விடாதபடி
இன்னும் இக்காலத்திலும் இருந்தது
மனிதர்கள் ஏறுவதும்
இறங்குவதுமாக இருந்தார்கள்
அவர்கள் பிரிந்து போவதற்கு
அது தான் வழி என்பது போல்
ரயிலின் வாசலும் நடைமேடையும்
ஒரே இடத்திலிருந்து கொண்டு
அவர்களைக் கலைத்துப் போட்டது
ரயிலின் மெய்யான பிரம்மாண்டம்
ரயில் நிலையத்தில் தெரியும் போது
நான் சிறுவனாக இருந்தேன்
ஒரு ரயில்
ரயில் நிலையத்தில் வந்து நிற்பது
வீட்டுக்குள் வந்து நிற்பது போலத்தான்
ரயில்களற்ற ரயில் நிலையங்கள்
வெறிச்சோடி கிடந்த நேரத்தில்
கடவுச் சொல்லாக ரயில் வந்தது