மரா மரா/தி சோ வேணுகோபாலன்

\

முச்சந்தி நடுவில்
முனகாமல்
நெடுங்காலம்
செய்கை அறியாத
சோம்பேறியாய்க்
கை நீட்டி
நின்றிருந்தேன் ;

உள்ளுக்குள் உளுத்தேன்
ஊர்ப்புழுதியில் பழுத்தேன் :

கண் திறந்து பார்த்தோர்
குறிபிசகாமல் போனார் !
கண்
மண்ணில்
விழுந்த பேர்
கடன்பட்டுத்
திரும்பிவந்தார் !
………..
ஒரு நாள்
செத்து விழுந்தேன்;
சொர்க்க வாசல்
கதவு திறந்தது!
சோற்றுக்கு
உடல்
விறகாய்ப் பிறந்தது !