
சாமிநாதனும்
சகுனமும்
ஒட்டிப் பிறக்காத
இரட்டைக்குழந்தைகள்.
ஒவ்வொரு அதிகாலையிலும்
நரிமுகத்தில்
முழிக்க நினைத்த
அவரின் கனவு நிறைவேறவேயில்லை.
போர்வையை விலக்கி கண்கள்
மூடியபடியே வந்து
மூத்த மகளின்
முகம் பார்த்த நாட்கள் அபசகுன கணக்கில் சேர்ந்தவை.
பிடித்த ஒருத்தனுடன் ஓடிப்போன
அடுத்த நாளிலிருந்து
அவளிருக்கும் திசையே
அபசகுனமாயிற்று.
சன்னல் வழி
ஊடுருவிப் பார்க்கும் சாமிநாதனின்
முதல் பார்வையில் விழும் முகத்தைப் பொறுத்து
முகம் மாறும்.
ஒரு நொடி முன்னரோ
பின்னரோ
திறந்திருக்கலாம்
விடிந்தும் விடியாமல்
விடியா மூஞ்சியிலா
முழிப்பது என முணுமுணுத்தபடியே
படுக்கையில் புரள்வார்.
மீண்டும்
சன்னல் திறக்க
பிடிக்கா முகமெனில்
போச்சு போச்சு
எல்லாம் போச்சு என
புலம்பித் திரிவார்.
ஒரு நாள்
வீட்டைக் கடந்து
தெருவில்
கால் பதித்த வேளை
கடந்த பூனையை
கடக்க முடியாது
திரும்பி நிற்கையில்
எதிர்வந்த வாகனம் மோதி பூனையின் பிணம் காலடியில் விழ
சாமிநாதனே
சகுனப் பிழையானார்.
–
அனிஷ்குமார் கவிதைகளில் இது என்னை மிகவும் கவர்ந்தது.