
தமிழ்நாட்டைச் சேர்ந்த அமெரிக்கப் பெண் பத்மலட்சுமியைத் திருமணம் செய்தபோது சல்மான் ருஸ்டி சென்னைக்கு வந்தார்.
கமல்ஹாசனைச் சந்திக்க விரும்பினார் ருஸ்டி. மனைவி மூலம் செய்தி அனுப்பினார். கமல்ஹாசனுக்கு முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட பயண ஏற்பாடுகள். தனக்கு ருஸ்டியைச் சந்திக்க விருப்பம் என்றும், முன்கூட்டிய பயண ஏற்பாடுகளால் பிறிதொரு தருணத்தில் சந்திப்போம் எனவும் கமல் சொல்கிறார்.
அதே கமல் கி.ராஜநாராயணனை தேடிச்சென்று சந்திக்கிறார். இ.பா, ஜெயகாந்தன், கலைஞர் இவர்களுடனும் கமலுக்கு நல்லுறவு உண்டு.
சரி. இதே கமல் கல்குதிரை இதழ்களைப் பார்த்துவிட்டு கோணங்கியைச் சந்திக்க விருப்பம் தெரிவிக்கிறார். இதிலேதும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. இது பற்றி ஒரு செய்தி எழுத்தாளன் பெருமிதம்-சுயமரியாதை என்பதோடு தொடர்புபடுத்தி ரொம்ப காலமாகத் தமிழில் ஓடுகிறது.
இது அபத்தம் மட்டுல்ல அகந்தை. ஒருவர் ஒரு அழைப்பை மறுக்கலாம். அது அவர் உரிமை. அதனை எதற்காக பொதுவெளியில் எழுத்தாளன் பெருமிதமாகப் பெனாத்தவேண்டும்?
கமல்ஹாசனுக்குத் தமிழ் இலக்கியம் தெரியும். அம்மா வந்தாளைத் திரைப்படமாக்கும் ஆசை அவருக்கு உண்டு. தமிழ் சினிமாவுக்கு பங்களித்தவர். டீசன்ட் பர்ஷன்.
அவரென்ன சமூக விரோதியா, அவரைச் சந்திக்க மறுத்ததை சாகசமாக நினைத்துத் தம்பட்டம் போட? தமிழ்ச் சூழலில் எழுத்தாளன் பெருமிதம் என்பது கேலமான நடைமுறையாக இருக்கிறது என்பதைச் சுட்டவே நீண்டநாள் மனதில் இருந்ததை இப்போது சொல்லவேண்டியிருக்கிறது
நல்ல பண்புகளைத் தமிழ்நாட்டில் அமலாக்குவது கடினம். குறிப்பாக சினிமாக்காரர்கள், எழுத்தாளர்கள், அரசியல் காரர்கள் ஆகியோரிடம். நாளுக்கு நாள் நிலைமை நம்பிக்கை அளிப்பதாக இல்லை. உங்களுக்குத் தெரியாத விஷயமா?