கோவை எழிலன்
தன்னையே அரிந்தனள்

ஒரு நிகழ்ச்சி நடந்தால் அதைப் பற்றிப் பலரும் பல விதமாகப் பேசுவர். சிலருடைய பேச்சுகள் விந்தையாக இருக்கும். உதாரணமாக ஒருவரின் கடையில் தீ விபத்து நடந்தால் காப்பீடு பெறுவதற்காக அவரே தீ வைத்திருப்பார் என்று கூறுவர்.
இது போன்ற பேச்சுகள் இன்று நேற்றல்ல கம்பன் காலத்திலேயே இருந்திருக்கின்றன போலும்.
சூர்ப்பனகை மூக்கறுபட்டு இலங்கைக்கு வரும் போது பலரும் அதைப் பற்றிப் பலவாறு பேசுகின்றனர். அவர்களில் சிலர் “இராவணன் தங்கை என்று தெரிந்த பின் அன்னையே என்று காலில் விழாமல் இவ்வாறு இவளுக்கு தீங்கிழைக்கும் துணிவு யாருக்கேனும் இருக்கிறதா? இவள் தனக்குத் தானே இத்தீங்கை இழைத்துக் கொண்டிருக்க வேண்டும்” என்பதாகக் கம்பன் காட்டுகிறான்.
“என்னையே! “இராவணன்
தங்கை” என்றபின்,
“அன்னையே” என்று, அடி
வணங்கல் அன்றியே,
உன்னவே ஒண்ணுமோ,
ஒருவரால்? இவள்
தன்னையே அரிந்தனள்,
தான்’ என்றார் சிலர்”.