புதியமாதவி
“நிலம் , தீ, நீர், வளி, விசும்போடு ஐந்தும்
நிலம்
பூமி ஏன் உருண்டையா இருக்கு?
இது தட்டையா இருந்தா நல்லா இருந்திருக்குமே. மீண்டும் மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே இறங்கி நிக்கற அவஸ்தையாவது இல்லாம இருந்திருக்குமே.எனக்கு இது பிடிக்கலைடா.
சுற்றி சுற்றி வட்டமிடும் வாழ்க்கை.
இந்தப் பந்து மாதிரி இருக்கிற பூமியில ஓட்டப்போட்டு தட்டையாக்கி பிளந்திட்டா என்ன!? சொல்லேண்டா.
என்னவாகும்..?
“தூங்கும்மா.. இந்த மாத்திரையைப் போட்டுக்கோ. வாயத் திறம்மா..ப்ளீஸ்”
“ஏன் டா செல்லம், எனக்கு எதுக்கு மாத்திரை? ஏன் நீங்க எல்லாரும் தூங்கு தூங்குனு கண்ணை மூடச்சொல்லி கட்டாயப்படுத்தறீங்க.. நான் முழிச்சிருக்கறது அவ்வளவு கஷ்டமா இருக்கா?”
“ந்னோ மா. யு நீட் ரெஸ்ட். “
“வொய்? நான் தான் இப்போ எந்த வேலையும் செய்யலையே. கம்ப்ளீட் ரெஸ்டுலதானே இருக்கேன்”
“நிறைய ஓடி ஓடி வேலைப் பார்த்திட்டேம்மா. இப்போ உனக்குத் தேவை ரெஸ்ட் அண்ட் மன அமைதி. சரியா..”
மெல்ல மெல்ல அம்மாவின் தலைமுடியைக் கோதிவிட்டு தடவிக்கொண்டிருந்தாள். சற்று நேரம் கண்மூடிப் படுத்திருந்த அம்மா இன்னும் சற்று நேரத்தில் அம்மா தூங்கிவிடுவாள் . வர்ஷா மனசில் நினைத்ததை அப்படியே தெரிந்து கொண்டவள் மாதிரி அம்மா மகள் வர்ஷாவின் கைகளைப் பிடித்து தள்ளிவிட்டாள். என் தலையைத் தொடாதேங்கற மாதிரி வர்ஷாவை ஒரு பார்வைப் பார்த்தாள்.
அதன் பின் அம்மாவின் பார்வை நிலை கொள்ளாமல் அங்குமிங்குமாக மிரண்டு தவிப்பதைப் பார்க்க முடியாமல் வர்ஷாவுக்கு அழுகை வந்தது. அம்மா முன்னால் அழக்கூடாது. அவள் அழுதாள் அம்மாவும் அழுதிடுவாளா என்ன ? தெரியாது. ஆனா எல்லாத்தையும் தாங்கிக்கொண்டு நிக்கிற அப்பா உடைஞ்சிப் போயிடுவாரு. அப்பா அழுது அவள் பார்த்ததில்லை. பார்க்கவும் அவளுக்குத் தைரியமில்ல. அவள் அழக்கூடாது.
வர்ஷா அழுதிட்டானா தாங்கிக்க மாட்டாரு.
மலங்க மலங்க விழித்துக்கொண்டு கட்டில் படுக்கையில் புரண்டுப் புரண்டு தலைமுடியை இறுகப்பற்றிக்கொண்டு தன்னிடமிருந்து தன்னைப் பிய்த்து எடுக்கும் வெறியில் அவள் படும் வேதனை.. அம்மாவிடமிருந்த தன்னை விலக்கிக்கொள்ள முடியாமல் வர்ஷா அவஸ்தைப் பட்டாள். அம்மா அவள் உடலை வளைத்து வளைத்து வில்லாக்கி உயர்வதும் பொத்தென்று படுக்கையில் சரிவதுமாக இருந்தாள். சரியும் போதெல்லாம் அவள் கண்களில் கொழுந்து விட்டெரியும் நெருப்பின் சூடு அந்த அறை எங்கும் பரவி மனசுக்குள் புகை மூட்டமாகி வர்ஷாவின் கண்களுக்குள் புகுந்தது.
வர்ஷா தன் விரல்களால் கண்களைக் கசக்கிப் பிழிந்து காயவைக்க முடியாமல் துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டாள்.
“அம்மாவை உனக்குப் பிடிக்கலதானே செல்லம்”
அம்மாவின் குரல், அந்தப் பழைய குரல் .. முகமும் விழிகளும் தெளிவாகி அதிலிருந்து அவள் கேட்கும் கேள்வி.. “அம்மாவைப் பிடிக்கல தானே!”
என்ன சொல்ல, அம்மா கேட்கிற இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்ல. அவள் மகளாக பதில் சொல்லவா… அவளைப் போலவே ஒரு பெண்ணா இருந்து அம்மாவைப் புரிந்துக் கொள்ளவா? இப்போ அம்மாவுக்கு என்ன வேணும்? அவள் மகளா.. மகளில் இருக்கும் அவளா..?
அம்மா வர்ஷாவின் கைகளிரண்டையும் இறுகப் பற்றிக் கொண்டாள். அம்மாவின் பிடி இறுகியது. விரல்கள் வலிக்கிறமாதிரி இறுக்கி இறுக்கி முறுக்கிப் பிடிக்க ஆரம்பித்தாள்.
‘”எனக்கு எப்பவும் உன்னை ரொம்பவும் பிடிக்கும்மா. என்னால உன்ன வெறுக்கவே முடியாதும்மா. ஏம்மா எதையாவது தேவையில்லாம நினைச்சி மனசையும் உடம்பையும் கஷ்டப்படுத்திக்கிற”
அம்மா தன் கைப்பிடியைத் தளர்த்தினாள். மீண்டும் அவள் பார்வைய் வெறுமையை நோக்கிச் சென்றது. அவள் எங்கேயோ தூரத்தில் பயணித்துக் கொண்டிருந்தாள். அவள் விழிகளில் காட்சிகள் விரிந்து கொண்டிருந்தன. அவள் முகத்தில் பளிச்சென்று மின்னல் வெளிச்சத்தை யாரோ எடுத்து தெளித்துவிட்டுப் போனார்கள். கண்களின் கருவளையம் திடீரென காணாமல் போய்விட்டது.
அவள் விழிகளுக்கு மை தீட்டி புருவங்கள் சிரிக்க தலையை அசைத்துக் கொண்டிருந்தாள். தன் விரல்களால் இரட்டைப் பின்னலை தோள்பக்கமாக இழுத்துவிட்டுக் கொண்டாள். கால்களை மடக்கி வைத்துக்கொண்டு முகத்தை முழங்கால்களுக்கு நடுவில் புதைத்து வைத்துக்கொண்டு விக்கி விக்கி அழ ஆரம்பித்திருந்தாள்.
நிலத்திலிருந்தப் பாறைகள் அவள் விம்மல் சத்தம் கேட்டு மெல்ல அசைய ஆரம்பித்தன. பாறை இடுக்குகளில் முளைவிட்டிருந்தச் செடியின் வேர் மெல்ல அசைந்தப் பாறையைப் பிளந்து வேகமாக தரையில் உருட்டியது. பாறை யுகம் யுகமாக இருந்த இடத்திலிருந்து பிடி மண்ணை எடுத்துக்கொண்டு மண்ணில் புரண்டு கீழிறங்கி களத்தில் அவளோடு நின்றது. பெரும்பாறையின் அதிர்வுகள் மலைகளிலும் குன்றுகளிலும் எதிரொலித்தன, பாறைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் நிலச்சரிவு நடந்துவிட்டதாக சமவெளிகள் செய்தி வாசித்தன.
பயணங்கள் ஸ்தம்பித்து நின்றுவிட்டன.முன்னும் பின்னும் நகர முடியாமல் வாகனங்கள் பெருமூச்சுவிட்டன.அதிலிருந்த மனிதர்கள் பொறுமை இழந்துக் கதவைத் திறந்துக் கொண்டு வெளியில் வந்தார்கள். பறவைகள் எப்போதும் போல சரிவுகளைத் தாண்டி ஆகாயத்தில் பறந்துக் கொண்டிருந்தன.
தீ
பனிக்காடு பற்றி எரிய ஆரம்பித்தது. அதை எதைக் கொண்டு அணைப்பது என்று தெரியாமல் எரிமலைகள் மெளனமாயின.
பனிக்காடு பற்றி எரிகிறது.
தீயின் நாக்குகள் சிவந்து வெடித்து பிளந்து துண்டு துண்டுகளாக கங்குகளை உதிர்க்கின்றன. ரோஜாப்பூவின் இதழ்களை மாலைகள் உதிர்க்கின்றன. காற்று கங்குகளை அணையவிடாமல் தொட்டில் கட்டி தாலாட்டுகிறது.
எல்லா இரவுகளும் பசித்திருப்பதில்லை, இரவுகள் விரதங்களை வெறுக்கின்றன. நெருப்பில் விழுந்து விழுந்து எரிந்துப் போகவே உடல்களை வளர்க்கின்றன. உயிருடன் வாழ்கின்றன. எரிவதற்காகவே வளர்ந்த உடல்கள் உயிர்களை எரிக்காமல் விடுவதில்லை.
சிக்கிமுக்கி கற்கள் உரசினால் நெருப்பு வரும். நெருப்பு பற்றிக்கொண்டாலும் சிக்கிமுக்கி கல்லை எரிப்பதில்லை. உரசும் போது மட்டுமே ஜனிக்கின்றன தீயின் நாக்குகள். கருக்குழியில் வீழ்ந்த நெருப்புமலர்கள் அவள் உடலை எரிக்கும் கொள்ளிக்கட்டையுடன் சுடுகாட்டில் காத்திருக்கின்றன.
அவள் எரிகிறாள்.
பிணமெரிகிறது.
அவளைப் போர்த்தியிருந்த ஆடைகள் எரிய ஆரம்பிக்கின்றன. அதுவரை எரிந்துச் சாம்பலாகிப்போன உயிர்கள் அவளை அழைத்துச் செல்ல கையில் மாலையுடன் வருகின்றன.
நெருப்புமாலைகள் அவள் தோள்களில் . அவள் மாலையும் கழுத்துமாக போட்டோவில் சிரிக்கிறாள்.
கடைசியாக அது நடக்கிறது.
நெருப்பை அணைத்துவிட்டதாக எண்ணி நீர் குளிர்ந்துப் போகிறது. நீரை ஆவியாக்கி குடித்துவிட்டதாக நெருப்பு மகிழ்ச்சியில் ஆடுகிறது. இருவருக்கும் நடுவில் கடல். அவர்கள் நீந்திக் கடக்க முடியாதக் கடல். அலைகளுடன் ஆர்ப்பரிக்கும் கடல், ஆகாயத்தை தொட்டுவிட துடிக்கும் கடல், மலையடிவாரத்தில் மவுனத்தில் படுத்திருக்கும் கடல்,
ஆகாயத்தை தொட்டுவிடும் கனவுகளில் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறது. பனிக்காடு பற்றி எரியும்போது’ கிளிஞ்சல்களுக்கு நடுவில் கடற்கரை மணலில் ஒதுங்குகின்றன சங்குகள். சங்குகளின் ஈரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது நெருப்பு அணைக்காத அவன் எச்சில் முத்தம்.
அவள் தேகம் சூடாகி வாய்ப்பிதற்றுகிறாள்.
நெருப்பு கங்குகள் தெறிக்கின்றன.
அவளைச் சுற்றி இருக்கும் உலகம்
அவளை எழுதியக் காகிதங்கள்
ஒவ்வொன்றாக எரிய ஆரம்பிக்கின்றன.
அவளுக்குள் இருந்த அவனும் எரிகிறான்.
அவள் கண்களை மூடிக்கொள்கிறாள்.
‘அம்மா’ கண்ணைத்திறம்மா’ வர்ஷாவின் கதறல்
அவள் காதில் விழவில்லை.
நீர்
அவள் அவனுடம் ஒரே குடையில் நடந்துக் கொண்டிருந்தாள். அவன் ஏன் மழை நேரத்தில் குடைப்பிடிப்பதில்லை என்று அவள் அவனிடம் கேட்டதில்லை. அவனோடு குடைப்பிடித்து மழையில் நனைவது எவ்வளவு சுகமானது.
மவுனம் கூட துளித்துளியாக முகத்தில் படும்போது அந்த ஒவ்வொரு மழைத்துளியிலும் ஒரு பிறவியின் நினைவுகள் வந்து அவளை நனைத்து ஈரமாக்கி அந்த ஈரத்தில் அவள் எரியும் சுகம். பனிக்காட்டின் நெருப்பாக அவர்கள் இருவரும் மாறும் மாயஜாலத்தை மழைதானே தர முடியும்!
அவள் புடவை முழுக்க ஈரமாகிவிட்டது. அவனும் அந்த ஈரத்தில் நீந்திக் கொண்டிருந்தான். குடை இருவருக்கும் நடுவில் விரிந்திருப்பது இருவர் முகத்தையும் மற்றவர்கள் பார்வையிலிருந்து மறைத்து அவர்களுக்கான சின்ன உலகத்தை குடைக்குள் விரித்து வைத்திருந்தது. அவன் மூச்சுக்காற்று அவள் முகத்தருகே படும்போது அதில் அவன் இதுவரைக் கொடுக்காத முத்தங்களின் வாசனை அவளைக் கிறக்கியது.
கடல் நீரும் மழை நீரும் ஒன்றையொன்று எதிர்கொள்ள முடியாமல் முட்டி மோதி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தன. நீரில் மிதக்கும் காகிதக் கப்பலாய் ஜனக்கூட்டம். அவர்கள் இருவரும் முழுவதுமாக நனைந்து விட்டார்கள். அவள் உடல் குளிரில் நடுங்கியதை அவன் தன் கரங்களால் மெல்ல அணைத்து அணைத்து வலிக்காமல் இறுகத் தழுவி இறுகத் தழுவி .. நீர்வழிப்படூவும்.
அவனிடம் அவளும் அவளிடம் அவனும் உயிர்ப்புடன் இருக்கும் உயிரின் விதைகளை விதைத்துக் கொண்டார்கள். மழையை வெறியூட்டி போதைக்குள் தள்ளியது காற்று. குடையின் கம்பிகள் உடைந்து காற்றில் பறந்தன. வெள்ளத்தில் மிதக்கும் குடைகளை இனி எவராலும் நிமிர்த்தி பிடித்துவிட முடியாது. வெள்ளம் வடிந்தப் பிறகு… இந்த குடைகளின் துணிகள் மண்ணில் மக்கிவிடாமல் மண்ணைக் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சூட்டி
அமிர்தத்தை விஷமாக்கும். குடையின் கம்பிகள் உடைந்து சிதைந்து மண்ணில் புதைந்து விடும். ஒவ்வொரு மழைக்காலத்திலும் மண்ணை அரித்துக் கொண்டு வெளியில் எட்டிப்பார்க்கும். குடைப்பிடித்து நடக்கும் பாதங்களை வெறிக்கொண்டு கிழித்து ரத்தம் குடிக்கும். ஓராண்டின் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும்/ மண்ணில் புதைந்துவிட்ட கனவுகளை மீட்டெடுக்க முடியாமல் குடைகளின் கம்பிகள் துருப்பிடித்து பலி தீர்த்துக்கொள்ளும்.
பத்திரமாக குடைப்பிடித்து தனியாக நடந்துக் கொண்டிருந்தவளைத் தேடி வந்து கடலிருக்கும் திசை நோக்கி கைகாட்டியது மழை வெள்ளம்.. ஒவ்வொரு மழைக்காலத்திலும் விரிவதும் காற்றில் பறப்பதும் கம்பிகளை இழப்பதும் அவள் கனவுகளின் விதிவழிப்படூம் .
காற்றுக்கு வெறிப்பிடித்த அந்த நள்ளிரவில் மழைவெள்ளத்தில் அவள் மிதக்க ஆரம்பித்தாள். அவள் உடல் கனமின்றி லேசாகி ஒரு பறவையின் உதிர்ந்த றெக்கையைப் போல இருந்தது. வெள்ளத்தில் மிதப்பது சுகமானது. என்றாலும் வெள்ளம் வடிந்தப்பின், பிண நாற்றம் சகிக்க முடியாததாக இருக்கும்.. அதற்குள் எப்படியும் கடல் நீருடன் கலந்து கடல் அலைகளுடன் சங்கமம் ஆகிவிட்டால் பிறவிப்பெருங்கடல் அவள் பிரசவவேதனைக்கு மருந்தாகும்.
மழைக்காட்டில் முளைத்தவள்
வெள்ளத்தில் மிதந்தவள்
பிறவிப்பெருங்கடலாய்
கரையில் மோதுகிறாள்.
அவள் நினைவு அலைகள் கடற்கரை எங்கும் காதலை விதைக்கின்றன. விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை. முளைப்பதெல்லாம் சொந்தமில்லை. மண்ணில் முளைக்கும் விதைகளும்
மண்ணில் அழுகிப்போன விதைகளும் மண்ணின் தலைவிதியை எழுதிக்கொண்டிருக்கின்றன. யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இடி மின்னலுடன் விடைபெறுகிறது மழைக்காலம்.
‘ஜன்னலைத் திறங்களேன், எனக்கு மழைப் பார்க்கனும்”
படுத்திருக்கும் அவளை மெல்லத் தூக்கி உட்கார வைக்கிறான். அவள் சாய்ந்து உட்கார கட்டிலில் கைப்பிடியைச் சுழட்டி சரி செய்கிறான். தாழ்வாக இருந்தக் கட்டில் உயரமாகிறது. படுத்துக்கொண்டே ஜன்னல் வழியாக அவள் மழைப் பார்க்க வசதியாக அவள் தலைவைத்திருக்கும் பகுதியைச் சாய்வாக்கி கட்டிலைச் சரி செய்து அவளை மழைக்காட்டுக்கு
அழைத்துச் செல்கிறான். பெரு நகரத்து அடுக்குமாடிகள் மழையில் நனைந்து கொண்டு
வரிசையாக நின்று கோரஸ் பாடுகின்றன. மழையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவள் கணவனின் தோள்களை தன் நடுங்கும் கைகளால் இறுகப் பற்றிக்கொள்கிறாள்.
‘என்னம்மா’ என்று அவன் அவள் முகம் பார்க்கும் போது அவன் கண்களைப் பார்க்காமல் அவள் பார்வை ஜன்னலைத் தாண்டி மழை வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.
“மழை வரும்போதெல்லாம் என்னை நீங்க நினைப்பீங்கதானே!”
“எப்பவும் நினைப்பேன் டா, எப்பவும் நீ என்னோட தான் இருப்பே டா” அவர் குரல் கம்மியது.
அவள் எதுவும் சொல்லாமல் கண்களை மூடிக்கொண்டாள். அவர் தோளில் சாய்ந்திருந்தாள். ஆனால் அவள் அவரோடு இல்லை.. ஒரு மழையின் வெள்ளம்.. அவள் மிதக்கிறாள். தூரத்தில் அந்தக் குடை விரிந்து அவளுக்காக காத்திருக்கிறது.
வளி
உதிர்ந்த இலைகள் பறந்துவிட துடிக்கின்றன. மரத்திற்கும் இலைகளுக்குமான உறவு முடிந்துவிட்டது. இனி எதைக் கொண்டும் அந்த இலைகளில் பச்சையத்தை எழுதிவிட முடியாது. மரத்தடியில் வீழ்ந்து கிடப்பது மரண அவஸ்தை. பூக்களின் வாசனையை விட்டு விலகிவிட வேண்டும். பூக்கள் ஏன் கடைசிவரை கூடவே வருகின்றன?
மலர் வளையத்தை அவர்கள் சுமந்து வருகிறார்கள்.
அவன் காவலுடன் அருகில் வருகிறான்.
அலைமோதும் கூட்டத்தில்
அவன் வருகையின் பரபரப்பு.
அவள் அமைதியாக படுத்திருக்கிறாள்.
காற்று இருவருக்கும் நடுவில்
சாட்சியாக நிற்கிறது.
காற்று இல்லை என்றால் மண் இல்லை
மரமில்லை நீரில்லை நீ இல்லை அவளில்லை
அவனுமில்லை.
இடைவெளிகள் வெற்றிடமில்லை. காற்று நிரம்பி இருக்கிறது.
நீ காற்றாக இரேன்.
உயிர்த்துளிகள் சுவாசிக்கும் காற்றாக
ஏன் இல்லை நீ?
நீ என் கனவா?
என் கனவுகளுக்கு கொஞ்சம் காற்றடைத்து பறக்கவிடேன். வறண்ட கனவுகளின் உதடுகளில்
உன் முத்தங்களின் உயிர்த்துளீயைத் தொட்டு வை.
கனவுகளுக்கு உயிர்க்கொடு.
அவள் மூச்சுவிட முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறாள். மருத்துவர்கள்
செயற்கை சுவாசத்தை பொருத்திப் பார்க்கிறார்கள்.
அவள் கனவுகள் அதைத் தூக்கி வீசுகின்றன.
அவளுக்கு காற்றின் உயிர்ப்பிச்சை அவசியமில்லை, அவளே காற்றாக மாறி கரையும் தருணமிது.
அவள் வாழ்ந்த நினைவுகள்
வெற்றிடமாகிவிடாமல் கனவுகளால் நிரம்பி இருக்கிறது.
அவளைக் கடந்துச் சென்றவர்கள்
அவள் வாழும் போது அருகில் வந்து
அணைக்காத கரங்கள்
அவள் கனவுகளை விலக்கி வைக்க முடியாத
காலத்தில் அதற்கும் புதுப்புது வியாக்கியானங்கள்
எழுதுவார்கள். கனவுகள் அதையும் சகித்துக் கொள்ளுமோ தற்கொலை செய்து சாபமிடுமோ..
காற்று காத்திருக்கிறது..
அவளருகில் மிக நெருக்கமாக காற்று தன் கடைசி மூச்சுக்காக காத்திருக்கிறது. அவளைத் தின்ற கனவுகள் உயிர்த்தெழும் கனவுகளில் அவளைச் சுற்றி சுற்றி வருகின்றன.
காற்றே…
என்னைத் தீண்டிய காற்றெ
நீ ஏன் அரூபமாகவே இருந்துவிட்டாய்!
உன் நிழலாக இருக்க நினைத்தவளை
நீ கொண்டாட வேண்டாம்.
அவள் மூச்சுக்காற்று விடைபெறும் தருணத்தில்
ஒரு முத்தமிடு.
அவளுக்குள் இருந்த அந்த உயிர்த்துளியின்
அசைவை.. நீ எடுத்துக் கொள்வதற்குள்
மறந்துவிடாதே
ஈரமான முத்தங்கள்
மரண அவஸ்தைக்கு மருந்தாக இருக்கட்டும்.
அவள் உடலை குளிரச்செய்யும்
ஈரமான முத்தங்கள்..
காற்றே..மறந்துவிடாதே..
காற்றே காற்றே
அவளுக்கு விடை கொடு.
அவளை எரிக்கும்போது அமைதியாக இரு.
அவள் சிதையின் சாம்பலைத் தீண்டிவிடாதே.
அதைக் கடலிலும் வயலிலும் கரைப்பதற்கும் தெளிப்பதற்கும் அவள் வாரிசுகள் காத்திருக்கிறார்கள்.
விசும்பு
அவள் முகம் பிரகாசமாகிறது. அவள் கண்களில் பேரன்பின் அமுதக்கலசம் கண்ணீராய்க் கசிகிறது.
மகள் வர்ஷா அம்மாவின் கண்ணீரைத் துடைக்கிறாள். வர்ஷாவின் கன்னத்தில் அம்மாவின் கண்ணீர் ..
நதி ஒன்று திரும்பிச் செல்ல முடியாமல் வெகுதூரம்
ஓடிவிட்டது. கடலின் பிரமாண்டம் அவள் கண்முன்னே.
அவர் அவள் நெற்றியில் முத்தமிடுகிறார்.
அவள் கண்களை மூடிக்கொள்கிறாள்.
மேகங்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றன.
அவள் எதையோ சொல்ல வருகிறாள்.
இதுவரை அவரிடம் அவள் சொல்லாமலேயே இருந்துவிட்ட எதையோ சொல்லிவிட துடிக்கிறாள்.
தொண்டைக்குழிக்குள் சிக்கிக்கொள்கிறது சொற்கள்.
காற்று மட்டும் வெளியில் வருகிறது.
அவளுக்கு மூச்சுத்திணறல்.
அவர் “வேண்டாம்மா.. கஷ்டப்படாதே.. “ னு அவள் மெல்லிய கைகளை ஆதரவாகப்பிடித்து கொண்டு தடவி விடுகிறார். மொழியற்ற குரலற்ற மூச்சுக்காற்று.. அவள் எப்படியும் அதைச் சொல்லிவிட வேண்டுமென துடிக்கும் போது
குரல்வளையை நெறிக்கிறது. அவள் கண்கள்
மேல் நோக்கி பார்க்கின்றன. விழிகளின் படபடப்பு அடங்கி ஆகாயத்தை நோக்கி குவிகின்றன.
வானத்தில் மேகம் கருத்து கருக்கொண்டு கனமாகி
அசைவற்று.. அவளைப் பார்க்கிறது.
காற்று வீசுகிறது.
நெருப்பு கொழுந்துவிட்டு எரிகிறது.
மழை வருவதற்குள் அவளைக் கரைத்துவிட வேண்டும். நிலத்தில் அதிர்வுகள். விசும்பின் துளிகளில் அவள் மீண்டும்.. மண்ணில்.
திரை விலகியது…
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்..
மின்னல் வெளிச்சத்தில்
சிதம்பர ரகசியம்
தரிசனம்.
விதைப்பதெல்லாம் முளைப்பதில்லை. முளைப்பதெல்லாம் சொந்தமில்லை.
இதை
உணர்ந்தாலே போதும்
உலகம் புனிதமாகும்.
-தாரா.