எஸ். கௌரிசங்கர்
டெல்லியில் இருந்து பறந்து வந்து சென்னை விமான நிலையத்தில் காலையில் இறங்கியதும் நேரம் தாழ்த்தாமல் ஆனந்த் ஒரு வாடகைக் கார் அமர்த்திக் கொண்டு திருவண்ணாமலை நோக்கி பயணப்படத் தொடங்கினான். செஞ்சிக்கு அருகில் ஒரு கிராமம். இதுவரை போனதில்லை. கூகுளில் தேடி, வழியில் விசாரித்துக் கொண்டு செஞ்சிக்கு இருபது கி.மீ. தென் மேற்கே வந்து தான் தேடிய கருவேலங்குறிச்சிக்கு பத்து மணிக்கு வந்து சேர்ந்தான். ஊர் முழுவதும் விவசாய நிலங்களோ பச்சைத் தோட்டங்களோ எதுவுமில்லை. பெயருக்கு ஏற்றார் போல ஊர் முழுவதும் கருவேல மரங்களும் பாறைக் கற்களும் மட்டுமே விரவி இருந்தன. குடிசை வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கண்ணில் பட்டன. விசாரிப்பதற்குக் கூட ஆள் நடமாட்டம் ஒன்றுமில்லை. கடைசியில் ஓரிடத்தில் ஒரு ஆளில்லா டீக்கடை தென்பட்டது. காரிலிருந்து இறங்கி கடைக்காரரிடம் போய், “இங்கே தாயம்மா அப்படீங்கிறவங்க வீடு எங்கே இருக்கு?” என்று கேட்டான்.
கடைக்காரன் அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, “எந்தத் தாயம்மா? செல்வம் பொண்டாட்டி தாயம்மாவா?” என்று எதிர் கேள்வி கேட்டான். “தெரியாதுங்க. அவுங்க ரொம்ப வருஷத்துக்கு முன்னாலே டெல்லியிலே இருந்திருக்காங்க. அவ்வளவுதான் தெரியும்”
“ஓ! அப்ப நம்ம செல்லக்கண்ணு சம்சாரமா இருக்கும். அதாங்க நம்ம சந்திரனோட அக்கா!” என்று சொல்லிவிட்டு கடையை விட்டு வெளியே வந்து, “அதோ தெரியுது பாருங்க அந்தப் பெரிய பாறை. அதுக்குக் கீழே ஒரு குடிசை வீடு இருக்கு. அதிலே இருக்காங்க” என்று சொல்லித் தன் கை விரலை நீட்டி தூரத்தில் தெரிந்த ஒரு சிறு குன்றின் அடிவாரத்தைக் காண்பித்தான். ஆனந்த் அது எவ்வளவு தூரம் இருக்கும் என்று யோசிக்கையில், “இங்கிருந்து ஒரு முக்கா மைல் இருக்கும். பாதி தூரத்துக்கு மேலே பாதை கிடையாது. நடந்துதான் போகணும்” என்று சொல்லிவிட்டு, “சார் யாரு? அவுங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்டு முடித்தான் கடைக்காரன்.
“அவங்களுக்கு பிள்ளை……. மாதிரி” என்று பதில் சொல்லிவிட்டு ஆனந்த் மீண்டும் காரில் ஏறிக் கொள்ள கார் குன்றை நோக்கி நகர்ந்தது.
கடைக்காரர் சொன்ன மாதிரி, பாதி வழிக்கு மேல் பாதை ஒற்றை அடிப் பாதையாகப் போனது. ஆனந்த காரிலிருந்து இறங்கி, “நான் அங்கே போறேன். நீங்க வேணா கார்லேயே இருங்க” என்று டிரைவரிடம் சொல்லிவிட்டு தூரத்தில் தெரிந்த குடிசை வீட்டை நோக்கி நகர்ந்தான். நெருங்கி வந்ததும் குடிசையைச் சுற்றி ஒரு வேலி இருந்தது தெரிந்தது. உட்புறத்தில் ஐந்தாறு ஆடுகள் கட்டப்பட்டிருந்தன. சில கோழிகளும் ஒரு சேவலும் ஒரு மூலையில் குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தன. ஆனால் ஆள் அரவம் ஒன்றுமில்லை.
வேலிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போய், “வீட்டிலே யாருங்க?” என்றான். ஒரு பதிலும் இல்லை. சற்றுப் பொறுத்துப் பார்த்துவிட்டு கொஞ்சம் சத்தமாக “தாயம்மா இருக்காங்களா?” என்று கத்தினான். வீட்டின் பின்புறமிருந்து ஏதோ கொஞ்சம் சப்தம் கேட்டது. சில நிமிடங்கள் கழித்து, “யாரு?” என்று கேட்டுக் கொண்டே ஒரு பெண் உருவம் வீட்டின் வலப்புறமிருந்து வந்தது. சுமார் அறுபது வயதிருக்கலாம். சராசரிக்கு சற்று அதிகமான உயரம். அள்ளிச் சொருகியிருந்த தலைமுடியில் நரையை விட புழுதிதான் நிறைந்திருந்தது. ஒரு கிழிந்த சேலையை முழங்கால் வரையிலும் தூக்கிக் கட்டி மேலே ஒரு ஆண்கள் முழுக்கை சட்டை அணிந்திருந்தாள். முகம் தெரிந்த முகம் போல இருந்தது. ஆனால் தெளிவாக ஞாபகம் வரவில்லை.
ஆனந்த் அவளிடம், “தாயம்மாவா?”என்றான். “ஆமா….. “என்று சொல்லிவிட்டு சட்டென்று இடுப்பில் சொருகியிருந்த சேலையை கீழே தளர்த்தி விட்டுக் கொண்டே, “நீங்க யாரு?” என்றாள் வந்தவள்.
“என்னைத் தெரியலையா?” என்றவனைக் கூர்ந்து நோக்கினாள் தாயம்மா. அவளுக்குப் புரிந்த மாதிரி தெரியவில்லை.
“நாந்தாங்க ஆனந்த். டெல்லி திருமூர்த்தி சாரோட மகன். இந்திரபுரியிலே எங்க வீட்டிலே நீங்க வேலை செஞ்சீங்க. நீங்கதான் என்னை வளர்த்தீங்க…. ஞாபகம் இருக்கா?”
சட்டென்று மின்சாரம் பாய்ந்தது போல அதிர்ந்தாள் தாயம்மா. கண்கள் அகல விரிய முகத்தில் பரபரப்பு.
“ஆனந்தா? என்னோட ஆனந்தா?” ஓடி அருகில் வந்து இரு கைகளையும் விரித்து அவனைக் கட்டித் தழுவிக் கொள்ள வந்தவள் சட்டென்று அதைத் தவிர்த்து மெதுவாக அவன் கன்னங்களை கைகளால் வருடி, “பத்து வயசிலே பார்த்தது.. எப்படி வளர்ந்துட்டே!” தாயம்மாவின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஆனந்த் அவள் கைகளைப் பற்றிக் கொள்ள அவன் கண்களிலும் நீர்த்துளிகள் வெளியே தெரிந்தன.
“எப்படிப்பா இருக்கே? அப்பா எப்படி இருக்காங்க? அம்மா நல்லாயிட்டாங்களா? என்னை ஞாபகம் வைச்சிகிட்டு ஆயிரம் மைல் தாண்டி தேடி வந்து பார்க்கிறதுக்கு நான் எவ்வளவு கொடுத்து வைச்சிருக்கணும்? உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா? பொண்ணு எந்த ஊரு? குழந்தைங்க எத்தனை?” பரபரப்பில் மூச்சு விடாமல் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக் கொண்டே போனாள் தாயம்மா.
ஆனந்துக்குக் கொஞ்சம் சிரிப்பு வந்தது. “இருங்கம்மா…ஒவ்வொண்ணா சொல்றேன்” என்றான். தாயம்மாவுக்கும் கூட சற்று வெட்கமும் சிரிப்பும் வந்துவிட்டது.
“இரு! இரு!” என்று சொல்லிவிட்டு அவசரமாக வீட்டின் உள்ளே ஓடிப் போய் மர ஸ்டூல் ஒன்றை எடுத்து வந்து போட்டு, “இப்போ உக்கார்ந்துகிட்டு மெதுவாச் சொல்லு” என்றாள். அவன் உட்கார்ந்து பேச ஆரம்பித்தான்.
“எனக்குக் கல்யாணம் ஆயிடுச்சு. டெல்லி பொண்ணுதான். பத்து வயசிலே ஒரு பையன் இருக்கான்” என்று சொல்லிவிட்டு சிறிது நிறுத்திய ஆனந்த், “அம்மா என் பத்து வயசிலேயே இறந்து போயிட்டாங்க. அப்பா… ஒரு மாசம் முன்னாலே காலமாயிட்டாங்க” என்று மெல்லத் தயங்கிச் சொன்னான்.
“அய்யய்யோ…..” என்று கேவி அழ ஆரம்பித்தாள் தாயம்மா. “அவருக்கு வயசாயிடுச்சா என்ன?”
“அப்பாவுக்கு எழுபத்தஞ்சு வயசாயிடுச்சும்மா… கொஞ்ச நாளா உடம்பு சரியில்லை. அப்பா சாகறதுக்கு முன்னாலே உங்களைப் பத்தி எல்லா விவரமும் சொல்லிட்டு, உங்க ஊர் பேர் சொல்லி உங்களை எப்படியாவது கண்டுபுடிச்சு என்கூட அழைச்சுகிட்டுப் போயி டெல்லியிலே எங்க வீட்டிலே வைச்சுக் காப்பாத்தணும்னு என் கிட்டே உறுதி மொழி வாங்கிகிட்டாரு. அவரு வார்த்தையைக் காப்பாத்தறதுக்குத்தான் நான் இப்போ இங்கே வந்திருக்கேன்”
தாயம்மாவின் முகம் இறுகியது. பின்னர் தயங்கி மெதுவாக, “எல்லாம் சொல்லிட்டாரா உங்க அப்பா?” என்று கேட்டாள்.
ஆனந்தும் தயங்கி, “ஆமாம்மா…. எல்லாம் சொன்னாரு” என்று சொன்ன பதிலில் “எல்லாம்” சற்று அழுத்தமாகவே இருந்தது. தாயம்மா மௌனமானாள். ஏதோ சொல்ல நினைத்து வாயைத் திறந்து பின்னர் ஒன்றும் சொல்லாமல் தலையை ஆட்டிக் கொண்டு அப்படியே தரையில் உட்கார்ந்து கொண்டாள். அவள் பார்வை வேறு எங்கோ திரும்பி நின்றது.
தாயம்மா பத்தொன்பது வயதில் கல்யாணம் பண்ணிக் கொண்டு கணவன் செல்லக்கண்ணுவுடன் டெல்லி வந்து சேர்ந்தாள். உள்ளூரில் வேலை இல்லாமல் இருந்த செல்லக்கண்ணுவை அவன் சொந்தக்கார அண்ணன் ஒருவன் டெல்லிக்கு வரவழைத்து கூலி வேலையில் அமர்த்தி விட்டான். கமலா மார்க்கெட்டில் ட்ரங்க் பெட்டிகளை ஏற்றி இறக்கும் வேலை. தாயம்மாவின் குடும்பமும் பஞ்சத்தில் அடிபட்டது. அதனால் அந்தச் சிறு வயதில் நல்ல அழகான தாயம்மாவுக்கு செல்லக்கண்ணுவை விட வசதியான மாப்பிள்ளை கிடைக்கவில்லை. இந்திரபுரியில் ஜே.ஜே. காலனியில் குடிசை வீட்டில் வாசம். பக்கத்தில் பெரிய பங்களாக்களில் வேலை செய்வோர் பலர் அங்கேதான் குடியிருந்தனர். பக்கத்து வீட்டு சுலோசனா மூலம் திருமூர்த்தி வீட்டில் தாயம்மாவுக்கும் வேலை கிடைத்தது.
திருமூர்த்தி டெல்லியில் பெரிய பிளாஸ்டிக் தொழிற்சாலை வைத்திருந்தார். அவர் மனைவி தனலட்சுமி மதுரையைச் சேர்ந்த பெரிய பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்தவள். ஒரே குழந்தை ஆனந்த் பிறந்த சில நாட்களுக்கெல்லாம் தனலட்சுமிக்கு காச நோய் பிடித்துக் கொண்டது. எப்போதும் படுக்கை; விடாத இருமல். பத்து மாதக் குழந்தை ஆனந்தைத் தூக்கி வளர்க்க ஒரு பெண் தேவைப்பட்டது. தாயம்மா அந்த வேலைக்கு வந்தாள். குழந்தையும் முதலில் இருந்தே அவளிடம் ஒட்டிக் கொண்டு விட்டது. சாப்பிடுவது, தூங்குவது, விளையாடுவது எல்லாம் தாயம்மாவோடுதான். இருமுவதற்கும் ஆஸ்பத்திரி போவதற்கும் மருந்து சாப்பிடுவதற்கும் மட்டும்தான் தனலட்சுமியால் முடிந்தது. திருமூர்த்திக்கு தொழிற்சாலையிலேயே நேரம் கழிந்தது. தாயம்மாவுக்கும் குழந்தை பிறக்கவில்லை. அதனால் ஆனந்தைத் தன் குழந்தையாகவே வளர்த்தாள் அவள்.
ஐந்து வருடம் கழிந்த பிறகு தாயம்மாவின் வாழ்க்கையில் ஒரு விபரீதம் ஏற்பட்டது. ஒருநாள் குடித்து விட்டு செல்லக்கண்ணு சக தொழிலாளிகளுடன் சண்டை போட அது வலுப்பட்டுக் கைகலப்பாகி கத்திக்குத்தில் போய் முடிந்தது. செல்லக்கண்ணு இறந்து போனான். நிர்கதியான தாயம்மா ஊருக்குத் திரும்பிப் போக நினைத்தாள். ஆனால் தனலட்சுமியின் நோய் நிலைமை தீவிரமாகிப் போனதால், ஆனந்தைப் பார்த்துக் கொள்வதற்கு வசதியாக தாயம்மாவைத் தன் வீட்டிலேயே வந்து தங்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார் திருமூர்த்தி. குழந்தை மேல் உள்ள பாசம் கட்டி இழுக்க தாயம்மாவும் அப்படியே செய்தாள். இப்போது சமையல் முதற்கொண்டு வீட்டையே நிர்வகிக்கும் பொறுப்பு அவளிடம் வந்தது.
சில மாதங்கள் பழக்கத்திற்குப் பின்னர் ஒரு நாள் திருமூர்த்தி அவளை வேறு விதமாக நெருங்கினார். வேறு வழியில்லாமல் தாயம்மாவும் பயந்து இடம் கொடுக்க வேண்டியதாயிற்று. இந்த ரகசிய உறவு அவர் மனைவிக்குத் தெரியாமல் சில வருடங்கள் தொடர்ந்தது. கடைசியில் ஒரு நாள் வெளிச்சத்திற்கு வந்தது. துரதிருஷ்டமாக கருவுற்ற தாயம்மா அவரிடம் நிலைமையை விளக்கிச் சொன்னபோது அவர் மருந்து ஏதோ கொடுத்து அதைக் கலைப்பதற்கு ஏற்பாடு செய்தார். அதுவும் விபரீதமாகப் போய் அவளை ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டியதாயிற்று. இப்போது விஷயம் அவள் குடும்பத்தார்க்கும் அந்தக் காலனி முழுவதற்கும் தெரிந்து போனது. தாயம்மாவின் மைத்துனன் ஒரு படையை அழைத்துக் கொண்டு வந்து திருமூர்த்தியிடம் சண்டை பிடித்தான். திருமூர்த்தியின் மனைவிக்கு விஷயம் தெரிந்ததும் அவள் பத்ரகாளி ஆனாள். விவாகரத்து வரை போகப் போவதாகக் கூச்சலிட்டாள். இறுதியில் பேச்சு வார்த்தை நடத்தி தாயம்மாவிற்கு இழப்பீடாக திருமூர்த்தி ஒரு லட்சம் கொடுப்பதென்றும் அவள் டெல்லியை விட்டு தன் சொந்த ஊருக்குப் போய்விட வேண்டுமென்றும் தாயம்மாவைத் தவிர மற்ற எல்லோரும் சேர்ந்து முடிவு கட்டினார்கள். அவளும் வேறு வழியில்லாமல் ஊருக்குத் திரும்பினாள். தாயம்மா போன சில மாதங்களுக்குப் பின் தனலட்சுமியும் நோய்க்கு இரையானாள். ஆனந்துக்கு அப்போது வயது பத்து.
உட்கார்ந்து கொண்டிருந்த தாயம்மா ஏதோ நினைவு வந்தவளாய் சட்டென்று எழுந்து, “வந்த புள்ளைக்கு ஒரு காபி, டீ கூட கொடுக்கலை. இங்கேயே இரு வரேன். டீக்கடைக்குப் போய் ஒரு டீ வாங்கிகிட்டு வந்திடறேன்” என்று வெளியே நடக்கத் தொடங்கினாள். ஆனந்த் அவசரமாக எழுந்து “அதெல்லாம் ஒண்ணும் வேணாம். வாங்க” என்று சொல்லிக் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்துவிட்டு, “மதியம் நாம சேர்ந்து சாப்பிடலாம்” என்றான். தாயம்மாவுக்கு என்னவோ போல் இருந்தது. “தம்பி! அரிசி சாப்பாட்டுக்கெல்லாம் எனக்கு வழியில்லை. ஏதோ நான் சோளக் கஞ்சி குடிச்சிட்டு கேவரகு களி சாப்பிடறவ. உங்களை அதெல்லாம் சாப்பிட வைக்க மாட்டேன்” என்றாள்.
“எதுவா இருந்தாலும் எனக்குப் போதும் தாயம்மா” என்றவனை மறித்து, “ஊஹும்! அதெல்லாம் நீங்க சாப்பிடக் கூடாது” என்றாள் தாயம்மா.
“சரி! அரிசி சாப்பாடே இன்னிக்கு சாப்பிடலாம்.” என்று சொல்லிவிட்டு ஆனந்த் கார் அருகே வந்து பின் சீட்டில் தூங்கிக் கொண்டிருந்த டிரைவரை எழுப்பி டவுனுக்குப் போய் அவனும் சாப்பிட்டு விட்டு இரண்டு சாப்பாடு பார்சல் வாங்கிக்கொண்டு வர பணம் கொடுத்துவிட்டுத் திரும்பினான்.
மதியம் இரண்டு மணிக்கு ஆனந்தும் தாயம்மாவும் சாப்பிட்டார்கள். “அரிசி சோறு சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு” என்று சொல்லிக் கொண்டே தாயம்மா ஆசையோடு சாப்பிட்டாள். இருவரும் சாப்பிட்டு முடிந்ததும், அவன் அவளிடம், “நீங்க ஏன் இப்படி தனியா எங்கோ ஒரு காட்டிலே இருக்கிற மாதிரி இருக்கீங்க? உங்க சொந்தக்காரங்க யாரும் இல்லையா?” என்று கேட்டான்.
“எல்லாம் இருக்காங்க. என் கூடப் பொறந்தத் தம்பி இதோ இந்த ஊர்லேதான் இருக்கான். கெட்டுப் போன அக்காவை வைச்சிக்க அவனுக்குப் பிடிக்கலை. என்கிட்டே இருந்த பணத்தை எல்லாம் புடிங்கிகிட்டு இதோ இந்தப் பொறம் போக்கு நெலத்திலே ஒரு குடிசை போட்டு “நீ இங்கேயே இரு” அப்படீன்னு சொல்லிட்டுப் போயிட்டான். இந்தக் குடிசையையும் எந்த கவர்மெண்ட் ஆள் வந்து புடுங்கிப் போடப் போறானோ தெரியாது. இதோ இந்த ஆடும் கோழியும்தான் இப்போ எனக்குச் சொந்தக்காரங்க”
“பணத்தைப் புடுங்கிகிட்டாங்களா?”
“ஆமாம். உங்க அப்பா எனக்காக ஒரு லட்சம் கொடுத்தாங்களாம். அதிலே பாதியை என் டெல்லி மச்சினன் எடுத்துகிட்டான். என் தம்பியைக் கூப்பிட்டு என்னை அழைச்சிகிட்டுப் போகச் சொல்லிட்டான். இவன் மீதிப் பணத்தை பொண்ணு கல்யாணத்துக்கு வேணும்னு அவனே எடுத்துகிட்டான்.”
“அப்போ சாப்பாட்டுக்கு?”
“ஏதாவது கூலி வேலைக்குப் போவேன். ஏரி வெட்டறது, காவாய் வெட்டறது, சித்தாள் வேலைன்னு கூப்பிடுவாங்க. ஏதோ கூலி கிடைக்கும். கிடைச்சா ஏதாவது சாப்பிடுவேன். இல்லைன்னா வெறும் தண்ணியைக் குடிச்சிட்டு படுத்துக்குவேன்”
ஆனந்துக்கு இதையெல்லாம் கேட்கக் கேட்க மனதை என்னவோ செய்தது.
“நான் சொல்றேன். இப்பவே என் கூடக் கிளம்புங்க. டெல்லிக்குப் போகலாம். என் கூடவே என் வீட்டிலே இருங்க. உங்களைக் கடைசி வரைக்கும் வைச்சு நான் காப்பாத்தறேன்”
தாயம்மா சிறிது நேரம் அவனையே பார்த்துக் கொண்டு ஒன்றும் பேசாமலிருந்தாள்.
“என்ன பேசாம இருக்கீங்க? நான் நெசமாத்தான் சொல்றேன். வாங்க போகலாம் கிளம்புங்க”
மீண்டும் தாயம்மாவிடமிருந்து பதிலில்லை.
“இங்கே பாருங்க! என் தாய் என்னைப் பெத்தாங்களேத் தவிர நான் பொறந்ததிலிருந்து பத்து வயசு வரைக்கும் என்னை வளர்த்த அம்மா நீங்கதான். அதுக்கு ஒரு நன்றிக் கடனாகவாவது நான் உங்களை உங்க கடைசி காலத்திலே காப்பாத்தணும். அது என் கடமை, விருப்பம். அது மட்டுமில்லை அது என் அப்பாவோட கட்டளை”
இதற்கும் தாய்ம்மா ஒன்றும் பதில் சொல்லவில்லை. மௌனம் காத்தாள்.
“எங்க அப்பா உங்களுக்குச் செஞ்ச கொடுமையை நினைச்சு நீங்க இப்பவும் கோவமா இருக்கீங்கன்னு தோணுது. அதை நினைச்சு அவர் ரொம்ப காலம் வருத்தப்பட்டிருக்காரு. “என் கிட்டே ஆதரவு தேடி வந்த பொண்ணை என் ஆசைக்கு அடிமைப் படுத்தினது எவ்வளவு கேவலம்”ன்னு என் கிட்டேயே உருகியிருக்காரு. “ஒரு புள்ளையையும் கொடுத்து அதை அவளைக் கலைக்கச் சொல்லி அவமானப்படுத்தினது எவ்வளவு பெரிய கொடுமை”ன்னு என் கிட்டே அழுதே இருக்காரு. அவரை நீங்க மன்னிச்சுடணும்னு உங்க கிட்டே என்னை கேட்கச் சொன்னாரு. இதோ அவருக்காக நான் மன்னிப்புக் கேட்கறேன் தாயம்மா”
ஆனந்தின் கண்களில் வழிந்த கண்ணீரை தாயம்மா தன் சேலைத் தலைப்பால் துடைத்தாள். பிறகு அவள் சற்று நிதானித்து, “என் நிலமையை வைச்சு என்னை அவரு ஆசைக்குப் பயன் படுத்திகிட்டாருங்கிறது நெசந்தான். ஆனா தப்பு அவரு மேலே மட்டும் இல்லை. அந்தத் தப்பிலே எனக்கும் பாதி பங்கு உண்டு.”என்றாள்.
வியப்புடன் அவளை நோக்கிய ஆனந்தை ஒரு முறை பார்த்துவிட்டு, “நான் வெட்கத்தை விட்டுச் சொல்றேன் தம்பி. எனக்கு அப்போ இருபத்தஞ்சு வயசு. கட்டின புருஷன் உசிரோட இல்லை. நானும் சாதாரண பொம்பளைதானே? அந்த வயசிலே எனக்கும் அந்த சுகம் தேவையாயிருந்துச்சு. கூட இருந்த மச்சினனுக்கு எப்பவும் என் மேலே ஒரு கண்ணு. எப்போ என்னை என்ன பண்ணுவானோன்னு பயம். எனக்கு ஒரு பாதுகாப்பு வேண்டியிருந்துச்சு. உங்க அப்பா கொடுத்த அந்த ஆதரவு எனக்கு தைரியத்தைக் கொடுத்திச்சு. அதை நான் சந்தோஷமாத்தான் ஏத்துகிட்டேன். அதனாலே தப்புக்கு நானும்தான் காரணம்”
தாயம்மாவின் இந்த வார்த்தைகள் ஆனந்துக்கு அதிர்ச்சியாகவே இருந்தன. சற்று நிதானப் படுத்திக் கொண்டு, “போனது போகட்டும் தாயம்மா. இது உங்களுக்கும் எங்க அப்பாவுக்கும் இடையே நடந்த விவகாரம். எனக்கு இதிலே சம்பந்தமில்லை. முப்பது வருஷத்துக்குப் பின்னாலே எனக்கு அதைப் பத்தி இப்போ கவலையும் இல்லை. என் அம்மாங்கிற இடத்திலே நீங்க என் கூட வந்து இருக்கணும்னு நான் ஆசைப்படறேன். அவ்வளவுதான்” என்றான்.
“இல்லை ஆனந்த் தம்பி! இந்த விஷயத்திலே உங்களுக்கு சம்பந்தம் இல்லையே தவிர இன்னொருத்தருக்கு சம்பந்தம் இருக்கு. அது….. உன்னைப் பெத்த அம்மா. அவுங்க வீட்டிலே அவுங்களுக்குத் தெரியாம அவுங்க சொத்தை நான் அனுபவிச்சது தப்பு. அந்த துரோகத்துக்கு எந்த சமாதானமும் கிடையாது. நான் இப்போ வாழற வாழ்க்கையை அந்த துரோகத்துக்குத் தண்டனையாகத்தான் அனுபவிச்சிகிட்டு இருக்கேன். இப்போ நான் உங்க கூட வந்து உங்க வீட்டிலே நுழைஞ்சா அந்தத் துரோகம் என்னை மறுபடியும் வாட்டும். உங்க அம்மா படத்தைப் பார்த்தாலோ அவுங்க நினைப்பு வந்தாலோ அதுவே என்னை கொஞ்சம் கொஞ்சமா கொன்னு போட்டுடும். அதனாலே நான் அங்கே வரலை. நீங்க எங்க இருந்தாலும் கடைசி வரையிலே என்னை நினைச்சிகிட்டு இருங்க. அது போதும்.”
அவள் கண்களில் வழிந்த கண்ணீரை இப்போது ஆனந்த் துடைத்து விட்டான்.