மரணம் தரும் பாடம்

அழகியசிங்கர்



நம் வாழ்க்கையில் மரணம் என்பதை யாராலும் தவிர்க்க முடியாதது.  ஆனால் நமக்கு இந்த எண்ணம் எப்போதும் ஏற்படுவதில்லை.  அதனால்தான் நாம் மற்றவர்களைப் பார்த்துப் பொறாமைப் படுகிறோம்.  நமக்குப் புகழ் கிடைக்கவில்லையே என்று ஏங்குகிறோம். பயப்படுகிறோம். அவஸ்தைப் படுகிறோம். சந்தோஷமாக இருக்கத் தெரியாமல் இருக்கிறோம். மரணத்தை நேரிடையாக உணரும்போது நமக்கு திகைப்பும் பய உணர்ச்சியும் உண்டாகுகிறது.  நம்முடன் பழகிக்கொண்டிருந்த நண்பர்கள், உறவினர்களின் மரணங்கள் நம்மை ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்துகிறது.  சிறிது நேரம் வரை நம் மனது அமைதி அடையாமல் தவிக்கிறது.  பின் சாதாரண நிலைக்கு நாம் வந்து விடுகிறோம்.
திமுக தலைவர், முதலமைச்சர் அண்ணாதுரை இறந்தபோது அவரைக் குறித்து ரேடியோவில் கலைஞர் இரங்கல் கவிதை வாசித்தார்.  உருக்கமாக இருக்கும்.  அதைக் கேட்டு நானும் உருக்கமாக இருந்தேன்.  அப்போது நான் பள்ளியில் படிக்கும் சிறுவன்.  என் பள்ளியில் உள்ள பல மாணவர்கள் சேர்ந்து அண்ணா சமாதியைப் பார்க்கச் சென்றோம். நான் தங்கச்சாலையில் இருந்தேன்.  நடந்தே அங்கு சென்றதாக தோன்றுகிறது.  என் பள்ளி மாணவர்களுடன் அண்ணா சமாதியைப் பார்த்துவிட்டு, சிறுவர்களின் குறும்புடன் கடற்கரையில் உள்ள அலையில் நனைந்தோம்.  அப்போது என் சட்டையில் மண் ஒட்டிக்கொண்டிருந்தது என்று கழட்டினேன்.  நீரில் அலசலாம் என்ற எண்ணத்தில்.  அந்தச் சட்டை ஒரு குறும்புக்கார மாணவன் கையில் கிடைத்து, அதை பந்துபோல் தூக்கிப் போட்டு விளையாடினார்கள்.  சட்டை கடலில் போய்விட்டது.  அண்ணா சமாதியைப் பார்த்தத் துக்கத்தோடு என் சட்டைப் போன துக்கமும் சேர்ந்து கொண்டது.  வீட்டிற்குப் போனால் அம்மா கண்டு பிடித்துத் திட்டுவாள் என்ற பயம்.  ஏன்எனில் வீட்டிற்குத் தெரியாமல்தான் அண்ணா சமாதியைப் பார்க்க வந்திருந்தேன். 
ஒரு பிரபலமான அரசியல்வாதி இறந்து போனால், அவருடன் தொண்டர்கள் சிலரும் இறந்து விடுவார்கள்.  பலர் அதிர்ச்சியில் இறந்து விடுவார்கள்.  இப்போதெல்லாம் டிவியில் ஒளி பரப்புகிறார்கள்.  நேரிடையான காட்சியாக நாம் தொலைகாட்சியில் பார்க்கிறோம்.  நாம் பார்க்க பார்க்க துக்கம் நம்மிடம் பொங்கி வழியும். பின் அமைதி ஆகிவிடுவோம்.  மேலும் நமக்கு அந்தக் காட்சியைப் பார்க்கும்போது, சில தொண்டர்கள் தலையில் அடித்துக்கொண்டு அழுவதைப் பார்க்கும் போது, கண்கலங்கும் காட்சியாக நமக்குத் தோன்றும்.
சமீபத்தில் நான் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு மரணம், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மரணம்.  அரசியல் தலைவர்களை நாம் நேரில் பார்க்கும் சந்தர்ப்பம்  அமையாவிட்டாலும், அவர்களைப் பற்றி தெரிந்து கொள்கிற சந்தர்ப்பங்கள் நமக்கு அதிகம் உண்டு.  அவர் இனி இல்லை, இனிமேல் எப்படி இருக்கும் என்ற அச்சம் நம்மில் இருக்கும்.  
முதல்வர் ஜெயலலிதாவின் மரணமும் அப்படித்தான்.  அவர் அப்பாலோ மருத்துவமனையில் சேர்ந்து பட்ட அவஸ்தைகளை எப்படி வார்த்தைகளால் விவரிக்க முடியும்.  ஒரு நாடே துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிற துக்கம்தான் இது.  ஒரு குடும்பத்தில் ஒரு மரணம் நடந்தால், குடும்பத்தில் உள்ள நபர்களுடன்தான் அதைப் பகிர்ந்துகொள்ள முடியும்.  சமீபத்தில் என் நண்பர் ஒருவர் வரிசையாக அவருடைய உறவினர்கள் ஒவ்வொருவராக இறந்ததை பட்டியல் இட்டுக்கொண்டிருந்தார்.  இறந்தவர்கள் பெரும்பாலோர் வயதானவர்கள்.  அவர்கள் ஒவ்வொருவரும் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு போனதுபோல் தோன்றியது அவர் விவரித்த விதம்.
மரணம் நம்மை சஞ்சலப்படுத்தத் தவறுவதில்லை.  சில மரணங்கள் நமக்கு முன்னால் மரணம் நிகழப் போவதைத் தெரியப்படுத்துகின்றன.  இதை ரொம்பவும் கூர்ந்து கவனித்தால் மட்டும் தெரியும் என்று தோன்றுகிறது.  என் பெரியப்பா ஒருவர் ஒரு வலது பக்கம் பக்கவாதநோய் வந்து பல மாதங்களாய் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்.   அவர் மரணம் அடைந்த சமயம் ஒரு நாள் காலையில் அவர் வாய்க்கு வாய்கரிசி போடுவதுபோல் ஒரு கனவு.  திகைத்து நான் கண் விழிக்கிறேன்.  அன்று அவர் இறந்து விட்டதாக பெரியப்பா வீட்டிலிருந்து செய்தி. 
இன்னொரு மரணம் ஜே கிருஷ்ணமூர்த்தியின் மரணம்.    மரணம் அடைவதற்கு முன்பு கடைசியாக சென்னையில் கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தார்.  அந்த முறை வழக்கத்திற்கு மாறாக அவர் குறைவான கூட்டங்களில் பேசினார்.  அந்தக் கூட்டதிற்கு வந்தவர்களுக்கு அவர் மரணம் அடையப் போகிறார் என்பது தெரிந்திருந்தது.  கூட்டத்திற்கு வந்தவர்களில் அழகான வயதான பெண்கள் பலர் ஒரு பக்கம் கண்கலங்கி அழுது கொண்டிருந்ததைப் பார்த்தேன். கிருஷ்ணமூர்த்தியால் அன்று சரியாகப் பேச முடியவில்லை. கூட்டத்தில் ஒருவர் அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.  கிருஷ்ணமூர்த்தி உடனே ஏன் என்னை உற்றுப் பார்க்கிறீர் என்று கோபமாக சொன்னதுபோல் தோன்றியது. 
ஜே கிருஷ்ணமூர்த்தி மரணம் அடையும் முன் அவர் ஒரு காரிலிருந்து இறங்கி வருவதைப் போலவும், அவரைப் பார்த்து யாரோ சுடுவதுபோல் கனவு கண்டேன்.  இது என்ன பேத்தலாக இருக்கிறது என்று யோசித்தேன்.  ஆனால் நான் கனவு கண்ட சில தினங்களில்  அவர் மரணம் அடைந்ததை கேள்விப்பட்டேன்.  மரணம் என்பதைப் பகிர்ந்து கொள்வதாக நினைக்கிறேன்.  ஜே கிருஷ்ணமூர்த்தியின் மரணத்தை அவருடைய கூட்டத்தைக் கேட்க வருகிற நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிந்தது. ஒரு அரசியல்தலைவரின் மரணத்தை எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள முடிகிறது.  அலுவலகத்தில் யாராவது இறந்தால், அலுவலக நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது.  அதேபோல் உறவினர் யாராவது இறந்தால் உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது.  சமீபத்தில் என் நண்பர் ஒருவர் அவருக்கு நெருக்கமான நண்பர் ஒரு அயல் நாட்டில் காரல் பயணம் செய்துகொண்டிருந்தபோது விபத்தில் இறந்து போய்விட்டார்.  அதை நண்பரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.  ஒரு துக்க நிகழ்ச்சிக்கு பேச அவர் வந்தபோது, எல்லோர் முன்னும் கண்கலங்க வெளிப்படுத்தி விட்டார். அன்று அவர் பேசியது கண்கலங்கும்படி இருந்தது.  
பகிர்ந்துகொள்ள முடியாத மரணங்கள் நமக்கு படப்படப்பை ஏற்படுத்துவதாக தோன்றுகிறது.  பிரமிள் மரணம் அடைந்ததை என்னால் மறக்க முடியாது.  என் விட்டில் உள்ளவர்களிடம் அதைத் தெரியப்படுத்தினால், அது பகிர்ந்துகொள்ளும் துக்கமாக தெரியவில்லை. வேலூர் அருகில் உள்ள  கரடிக்குடியில் பிரமிளின் பூத உடலைப் பார்க்கச் செல்லவேண்டும். அப்போது நான் அடைந்த படப்படப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.  ஆனால் என்னுடன் வெளி ரங்கராஜனனும் வந்திருந்ததால் என் படபடப்பை கொஞ்சம் சரி செய்ய முடிந்தது.  தனியாக நான் போயிருக்க மாட்டேன். அதனால்தான் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் இறந்தவர்கள் வீட்டிற்கு துக்கம் விஜாரிக்கப் போக மாட்டார் என்பதை அறிந்திருக்கிறேன். 
மரணம் அடைந்தபிறகு கூட கனவில் சிலசமயம் மரணம் அடைந்தவர்கள் வருவார்கள்.  என் உறவினரன் புதல்வர் ஒருவர் நீச்சல் குளத்தில் எதிர்பாராதவிதமாய் மரணம் அடைந்து விட்டார்.  அது எனக்குத் தந்த திகைப்பை என்னால் சாதாரணமாக விளக்க முடியாது.  உறவினரைப் பார்க்கச் சென்றபோது அவர் துக்கத்தோடு இருந்தார்.  ஆனால் அழவில்லை.  அப்போது அவர் சொன்னது இப்போதும் ஞாபகம் வருகிறது. üüநீ வருத்தப்படாதே,ýý என்றுதான் அவர் சொன்னார். ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப் பின் அவருடைய பையன் என் கனவில் வந்தான்.  ஆனால் ஒன்றும் பேசவில்லை.  ஒரு சமயம் ஸ்டெல்லா புரூஸ் என் கனவில் அவர் மனைவியுடன் வந்தார்.  
 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன