மனதுக்குப் பிடித்த கவிதைகள் – 32

கண்ணன் – என் காதலன்   

 

சி சுப்பிரமணிய பாரதி 

ஆசை முகமறந்து போச்சே – இதை
ஆரிடம் சொல்வேனடி தோழி?
நேச மறக்கவில்லை நெஞ்சம் – எனில்
நினைவு முகமறக்க லாமோ?

கண்ணில் தெரியுதொரு தேற்றம் – அதில்
கண்ண னழகுமுழு தில்லை
நண்ணு முகவடிவு காணில் – அந்த
நல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம்.

ஓய்வு மொழிதலுமில் லாமல் – அவன்
உறவை நினைத்திருக்க முள்ளம்
வாயு முரைப்பதுண்டு கண்டாய் – அந்த
மாயன் புகழினையெப் போதும்

கண்கள் புரிந்துவிட்ட பாலம் – உயிர்க்
கண்ண னுருமறக்க லாச்சு.
பெண்க ளினத்தி லிதுபோலே – ஒரு
பேதையை முன்புகண்ட துண்டோ?

தேனை மறந்திருக்க வண்டும் – ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் – இந்த
வைய முழுதுமில்லை தோழி.

கண்ணன் முகமறந்து போனால் – இந்தக்
கண்க ளிருந்துபய னுண்டோ?
வண்ணப் படமுமில்லை கண்டாய் – இனி
வாழும் வழியென்னடி தோழி?

நன்றி : பாரதி பாடல்கள் – ஆய்வுப் பதிப்பு – தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர் – விலை ரூ.80 – தமிழ்நாட்டரசின் பாரதி நூற்றாண்டு விழாத் திட்ட உதவியில் வெளியாகும் புதிய பதிப்பு – இரண்டாம் பதிப்பு : 1989 


          

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன