ஞானக்கூத்தனும் விஷ்ணுபுரம் பரிசும்….

அழகியசிங்கர்
விஷ்ணுபுரம் விருது இந்த ஆண்டு ஞானக்கூத்தனுக்குக் கிடைத்துள்ளது.  முதலில் அவரை வாழ்த்துகிறேன்.  ஒரு விருது ஒருவருக்கு வழங்கினால், அதனுடைய எல்லாத் தகுதிகளும் அவருக்கு இருக்க வேண்டும்.  ஞானக்கூத்தனுக்கு அந்தத் தகுதி உண்டு.  கவிதை மட்டும் அவர் சிந்திப்பவர்.  விருட்சம் வெளியீடாக அவருடைய முழுத் தொகுப்பையும் நான் கொண்டு வந்துள்ளேன்.  ஞானக்கூத்தன் கவிதைகள் என்ற தொகுப்பு வெளிவரும்போது, ஞானக்கூத்தன் எழுதியும் பாதுகாக்காத கவிதைகள் பலவும் தீபம் பார்த்தசாரதியின் வீட்டிற்குச் சென்று (சிஐடி நகரில் உள்ள) பார்த்தசாரதியின் புதல்வரிடமிருந்து தீபம் இதழ்களைத் தேடி அதில் காணப்பட்ட ஞானக்கூத்தன் பல கவிதைகளை கையால் தாளில் எழுதி ஞானக்கூத்தன் கவிதைகள் தொகுதியில் சேர்த்தேன்.  அதன்பின் பென்சில் படங்கள் என்ற இன்னொரு தொகுதியை நானே கணினியில் அடித்துப் புத்தகமாகக் கொண்டு வந்துள்ளேன்.  மூன்றாவதாக நான் கொண்டு வந்த அவர் புத்தகம் கவிதைக்காக.  இது ஒரு கட்டுரைத் தொகுதி மொத்தம் 300 பிரதிகள்தான் அடித்து வைத்துள்ளேன்.  கவிதையைப் பற்றி அறிய வேண்டியவர்கள் இப் புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும்.  படித்தால்தான் தெரியும் கவிதை என்றால் என்ன என்று.  இது ஒரு அருமையான கட்டுரைத் தொகுதி. 
எப்போதும் படிப்பதற்கு எளிமையாக இருக்கும் ஞானக்கூத்தன் கவிதைகள்.  பின் அவர் கவிதைகளில் காணப்படும் அங்கத உணர்வு.  அவர் எந்தக் கவிதை எழுதினாலும் அங்கத உணர்வுடன் கூடிய பார்வையைத்தான் கவிதை மூலம் வெளிப்படுத்துவார்.  இன்று நம் உலகத்தை அப்படிப் பார்ப்பது மிக சிறந்த விஷயமாகத் தோன்றுகிறது.கடைசியில் இந்த உலகத்தில் அடையப் போவது ஒன்றுமில்லை.   எழுதுபவர் பலருக்கு இது வருவதில்லை.  கவிதை மூலம் கஷ்டங்களைச் சொல்வது, கவலையைத் தெரிவிப்பது, பிரச்சாரம் செய்வது, அபத்தமாக கருத்தைத் தெரிவிப்பது என்று பல முயற்சிகள் கவிதைகள் மூலம் நடந்து கொண்டிருக்கிறது.  இதில் வித்தியாசமானவர் ஞானக்கூத்தன்.  அதனால்தான் பாரதிக்குப் பின் முக்கியமான கவிஞராக ஞானக்கூத்தன் தென்படுகிறார்.  கவிதையில் இந்தச் சாதனையை நிகழ்த்திய ஞானக்கூத்தன் போல், உரைநடையில் அசோகமித்திரன் அந்தச் சாதனையை நிகழ்த்தி உள்ளார்.  இவர்கள் இருவரையும் தமிழ் நல்லுலகம் மறக்கக் கூடாது.  நான் அந்தக் காலத்தில் மாம்பலம் ரயில்வே நிலையத்திலிருந்து பீச் ரயில்நிலையம் வரை செல்லும்போது, பொதுவாக கவிதைகளைப் படித்துக்கொண்டு போவேன்.  அப்படித்தான்ü என்ன மாதிரி உலகம்ý என்ற ஞானக்கூத்தன் கவிதையைப் படித்துக்கொண்டு போனேன். இதோ அந்தக் கவிதை:
என்னை நோக்கி ஒருவர் வந்தார்
எதையோ கேட்கப் போவதுபோல
கடையா? வீடா? கூடமா? கோயிலா?
என்ன கேட்கப் போகிறாரென்று
எண்ணிக் கொண்டு நான் நின்றிருக்கையில்
அனேகமாய் வாயைத் திறந்தவர் என்னிடம்
ஒன்றும் கேளாமல் சென்றார்
என்ன மாதிரி உலகம் பார் இது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன