மஹ்ஹான் காந்தீ மஹ்ஹான்


கசடதபற டிசம்பர் 1970 – 3வது இதழ்

ஞானக்கூத்தன்

எழுந்ததும் கனைத்தார்; மெல்ல
சொற்பொழிவாற்றலானார்-

வழுக்கையைச் சொறிந்தவாறு
‘வாழ்கநீ எம்மான்’ என்றார்;

மேசையின் விரிப்பைச் சுண்டி
‘வையத்து நாட்டில்’ என்றார்
வேட்டியை இறுக்கிக் கொண்டு
‘விடுதலை தவறி’ என்றார்

பெண்களை நோட்டம் விட்டு
‘பாழ்பட்டு நின்ற’ என்றார்

புறப்பட்டு நான் போகச்சே
‘பாரத தேசம்’ என்றார்;

‘வாழ்விக்க வந்த’

என்னும்
எஞ்சிய பாட்டை தூக்கி
ஜன்னலின் வழியாய்ப் போட்டார்
தெருவிலே பொறுக்கிக் கொள்ள,

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன