“மார்க் ஸுக்கர்பெர்க் நகர்”

பா சிவபாதசுந்தரம்
பிரகாஷை ஒரு குறும்பட பயிற்சி பட்டறையில்தான் அவன் சந்தித்தான். சிறுசேரியில் உள்ள ஒரு சாஃப்ட் வேர் கம்பெனியில் வேலை பார்ப்பதாக சொல்லியிருந்தான். இப்ப அவனை பார்க்கத்தான் போய்க் கொண்டிருக்கிறான். அம்பத்தூரிலிருந்து நேர் பஸ் கிடையாது. மத்திய கைலாஷ் வந்து வேறு பஸ்ஸுக்காக காத்திருக்க ஆரம்பித்தான்.
ராஜீவ் காந்தி சாலை இன்றைக்கு காலைலதான் பேக் பிரித்து எடுக்கப்பட்டது போல் ஒரு மெருகோடு இருந்தது. பார்க்கிற பக்கமெல்லாம், ஜீன்ஸ், லெக்கின் மற்றும் கவ்வி பிடித்திருக்கும் மேலாடைகளுடன் இளம்பெண்கள். அனேகமாக அனைவரது கழுத்திலும் கலர் கலரான பட்டைகளுடன் அடையாள அட்டை. தாலி மாதிரி.
இருபது வருடங்களுக்கு முன் தரமணியில் வேலை செய்கையில் இதே ரோடில் தினமும் பயணித்திருக்கிறான். அப்போதெல்லாம் கசங்கிய காக்கி உடைகளுடன் பாலிடெக்னிக் மாணவர்களும், மற்ற தொழிற்சாலை ஆட்களும், மிக சாதாரண அல்லது பழைய உடைகளுடன் வி.ஹெச்.ஸ் நோயாளிகளும், அவர்களின் பார்வையாளர்கள் மற்றும் உறவினர்களும் நடமாடுவதை பார்த்திருக்கிறான். ஹும், எல்லாம் மாறிப்போச்சு. சாலையின்
 அழகை சமதளமாக இடப்பட்ட தார் மட்டுமல்ல, அதில் நடமாடும் மனிதர்களின் நாகரிகமும், அழகும் சேர்ந்தே தீர்மானிக்கின்றது என நினைத்துக்கொண்டான்.
சிறுசேரிக்கு பஸ் ஏதும் இருக்கா என்று யாரையாவது விசாரிக்கலாம் என நினைத்தவன், தன்னை கடந்து நின்ற ஷேர் ஆட்டோவில் இரண்டு ஜீன்ஸ் ஏறுவதைப் பார்த்தவுடன், மனதை மாற்றிக் கொண்டு ஷேர் ஆட்டோவை நோக்கி ஓடினான். உள்ளே ஏற்கனவே ஒரு ஐடி இளைஞனும் ஓரு சுடிதாரும் இருந்தனர். ஆர்வமாக ஏறப் போனவனை தடுத்தது டிரைவரின் குரல், ‘முன்னாடி வா சார்’. சிலரை பார்த்ததும் பிடிக்காமல் போகும்,
 சிலருடன் பேசியவுடன் பிடிக்காது. அவனுக்கு டிரைவரை பார்க்காமலே பிடிக்காமல் போனது. கறுவிக் கொண்டே டிரைவவர் பக்கத்தில் அமர்ந்தான்.
இருக்கையின் பின்புறம் ஏதோ இடிப்பது போன்ற பாவனையுடன் நாசூக்காக பின் திரும்பி உட்கார்ந்திருந்தவர்களை நோட்டமிட்டான். அனைவர் காதுகளிலும் இயர்ஃபோன். உண்மையாகவே அவர்கள் இசை தான் கேட்கிறார்களா என அவனுக்கு சந்தேகம். ஏன்னெனறால் எல்லார் முகத்திலும் பக்கத்திலுள்ளவர்கள் ஏதேனும் பேசிவிடுவார்களோ என்ற பயம் மட்டுமே தெரிவதாக நினைத்துக் கொண்டான். முன்பெல்லாம்
 எலக்ட்ரிக் ட்ரெயினில் ஹிண்டு பேப்பரில் புதைத்துக் கொண்டவர்களுடன் பயணித்திருக்கிறான். முன்னர் புத்தகம் அல்லது பேப்பர், இப்போது செல்ஃபோன் மனிதர்களுக்கு திரையாகிவிட்டதை எண்ணி சிரித்துக் கொண்டான்.
ஷேர் ஆட்டோ மாறி மாறி வந்து, சிறுசேரியில் இறங்கி பிரகாஷுக்கு ஃபோன் செய்தான்.
‘பாஸ், வந்துடிங்களா? ஒரு மீட்டிங்க்ல மாட்டிக்கிட்டேன். கொஞ்ச நேரத்தல வந்துர்ரேன்’.
எவ்வளவு நேரம் ஆகும் பிரகாஷ்?
‘ஒன் அவர் தான் பாஸ்’
என்னது, ஒன் அவரா? இவன் கேட்பதற்குள் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சே, அம்பத்தூரிலிருந்து இங்கு வரவே ரெண்டு மணிநேரம் ஆயிருச்சு. இன்னும் ஒரு மணி நேரம் என்ற அலுப்பு வந்தது.
சாலையை பார்த்தான். பள பளப்பான கட்டிடங்கள் விரைந்து செல்லும் வெள்ளை நிற ஏசி பஸ்களும் சொகுசு கார்களும். வாகன தடுப்பு போட்டிருந்த ஒரு ஐடி கட்டிடத்தினுள் இளைஞர்கள் சிலர் எதையோ தொலைத்த முகபாவத்துடன் வெளிப்பட்டனர். நவநாகரிகமான இளம் பெண்கள் சோம்பேறித்தனமாக நடந்து போய்க் கொண்டிருந்தனர்.  ஐடி கமபெனிகளில் அழகான பெண்களத்தான் வேலைக்கு எடுப்பார்களா அல்லது
 வேலையில் சேர்ந்தபின் அழகாகி விடுகிறார்களா என்ற சந்தேகம் அவனுக்கு எப்பவுமே உண்டு.
வேடிக்கை பார்த்தபடியே சிறிது தூரம் நடந்தான்.லேசாக பசிப்பது போலிருந்தது. ஒரு டீ குடிக்கலாம் என்ற யோசனை வந்தது. கண்ணுக்கெட்டிய தூரம்வரை டீக்கடை ஏதும் இல்லை. சிறிது தொலைவில் ஒரு மரத்தடியில் நாலு சைக்கிள் சக்கரங்களுக்கு  மேல் ஒரு டப்பாவை பொறுத்தியது போலிருந்த தள்ளு வண்டி கடை இருந்து. அருகில் செனறான். மறுபுறமிருந்து பின்னப்படாத தலையுடன், சிகரெட் புகையை
 ஊதியவாறு வெளிப்பட்டாள் ஒரு இளம்பெண். கையிலிருந்த பேபப்ர் டம்பளரிலிருந்த கடைசி மடக்கு டீயை குடித்து விட்டு, அருகிலிருந்த பெரிய வாளிக்குள் டம்பளரை கசக்கி எறிந்தாள். முடிந்த சிகரெட்டை காலால் நசுக்கி விட்டு, அருகிலிருந்த கட்டிடத்தை நோக்கி அவசரமாக நடந்தாள்.
‘ஒரு டீ, சக்கரை கொஞ்சம் கம்மியா’ கடைகாரரிடம் சொல்லி விட்டு சாலையை நோக்கி பார்வையை வீசினான்.
சிறிது தூரத்தில் சில டெம்போ டிராவலர் வண்டிகள் நின்றிருந்தன. முதலாம் வண்டி அருகில் மெலிதான கூட்டம். வெள்ளை சீருடை அணிந்திருக்கும் டிரைவர்கள் சிலர் வண்டியின் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தவரை சுற்றி நின்றிருந்தனர். டீயை முடித்து காசு கொடுத்து விட்டு அவர்களை நோக்கி நடக்கலானான்.
உட்கார்ந்திருந்தவர் டி.ராஜேந்தர் மாதிரி முடியை கையால் ஒதுக்கியபடி பேசிக்கொண்டிருந்தார். ஏறக்குறைய உலகத்திலுள்ள எல்லா தலைப்புகளிலும் பேசிக் கொண்டிருந்தார். அவரின் சுவாரஸ்யமான பேச்சில் லயித்திருந்த அவனின் செல்ஃபோன் அடித்தது.
‘பாஸ், எங்க இருக்கிங்க?’
சொன்னான்.
சிறிது நேரத்தில் யமஹா வண்டியில், முதுகில் தொங்கும் மூட்டையுடன் பிரகாஷ் வந்தான்.
‘ஏறுங்க பாஸ் போலாம்’ இவன் பின்னால் அமர வண்டிஒரு உறுமலுடன் கிளம்பியது.
‘பிரகாஷ்  நீங்க ஆஃபிஸ் பஸ்ல வர்ரதில்லையா? எப்படி இவ்ளோ தூரம் டூ வீலர்ல வர்ரிங்க?
இவ்ளோ தூரமா? இங்கதான், பக்கத்துல ஃப்ரண்ட்ஸ் நாலு பேரோட ஒரு வீடெடுத்து தங்கிருக்கோம்.
‘இப்ப வீட்டுக்கா பிரகாஷ்?’
இல்ல பாஸ். லைட்டா எதனாச்சும் ஃடிபன் சாப்பிடுவோம் முதல்ல. அப்புறம் வீட்டுக்குப் போய்ட்டு நாம ஷார்ட் ஃபிலிம் பத்தி பேசலாம்.
வண்டி ஒரு பெரிய ஷாப்பிங் மாலில் நின்றது.
‘கோரமணடல் பிளாஸா’ எழுத்துக்கூட்டி படித்தான்.
‘679 பொறியியல் கல்லூரி’ என எழுதியிருந்த மஞ்சள் நிற பஸ் வேகமாக சாலையில் சென்று கொண்டிருந்தது.
பெயர் வியப்பளிக்கவே, பிரகாஷிடம் கேட்டான்.
என்ன பண்றது, எல்லா பேர்லயும் இன்ஜினியரிங் காலஜ் இருக்கு. பேர் வச்சு கட்டுபடி ஆகலையாம். அதுனால இனிமே நம்பர்தானாம்.
சரி, வாங்க பாஸ் போகலாம், பிரகாஷ் விறு விறு வென முன் நடக்க பலஹீனமாக பின் தொடர்ந்தான் அவன்.
‘நூடுல்ஸ் கிங்’ வண்ண எழுத்துக்களில் மின்ன உள்ளே நுழைந்தான் பிரகாஷ்.  இரண்டொருவரைத் தவிர உள்ளே யாருமில்லை. ஒரு கணம் தயங்கிய இவன் பேண்டின் பின் பாக்கெட்டில் பர்ஸை தடவியவாறு பின்தொடர்ந்தான்.
பிரகாஷ் கவுண்டர் அருகே செல்ல
இவன் ஒரு சேரில் அமர்ந்தான்.
முன்னால் மூலையில் உட்கார்ந்திருந்த பெண் முடியை வைத்து எழுதிக் கொண்டிருந்தாள்.
‘பாஸ் ஆர்டர் பண்ணிட்டேன். அது வர்ரதுக்குள்ள ஒரு ஃபோன் பேசிட்டு வந்துர்ரேன்’ சொல்லி விட்டு ஃபோனை காதில் வைத்தவாறு ‘சொல்லுப்பா’ என்றவாறு கடைக்கு வெளியே சென்றான்.
மீண்டும் மூலையில் இருந்த சுடிதார் அணிந்த பெண்ணை பார்த்தான். மெல்லிய கறுப்பு நிறம். ‘பம்’ என அடங்க மறுக்கும் தலைமுடி.  சேரில் உட்கார்ந்திருந்த அவள், உடலை முன் நீட்டி டேபிளில் முழங்கையை ஊன்றி, பக்கவாட்டாக திரும்பி உட்கார்ந்து. . . இல்லை ஏறக்குறைய படுத்திருந்தாள்.  முன்னால் விழுந்திருந்த முடியை வலது கையில் பிடித்திருந்தது, எழுதுவது போன்றிருந்தது. எழுந்து
 நின்றால் முடியின் நீளம் இடுப்பைத் தாண்டும் என நினைத்துக் கொண்டான். நீளமான தலை முடியுள்ள பெண்களுக்கு உடலெங்கும் முரட்டு முடி இருக்கும் என்பது அவன் எண்ணம்.
அவள் கண்களை மூடியிருந்தாள். தூங்குவது போலிருந்தது. கூர்ந்து கவனித்தான். மூடிய இமைகளினுள் விழி வேகமாய் உருண்டு கொண்டிருந்தது. ஓ. . . கனவு காணுகிறாள் போலும்.
அவனுக்கு ஒரு பழக்கம், தன் கனவின் மூலம், பிறர் கனவிற்குள் நுழைந்து பார்ப்பது. அடுத்தவர்களின் அந்தரங்கம், அநேகமாக எல்லாருக்குமே சுவாரஸ்யமானதுதான். அவனுக்கு அது கூடுதல் சுவாரஸ்யம். சினிமா தியேட்டரில் சிறுநீர் கழிக்கும் போதுகூட பக்கத்தில் எட்டி பார்ப்பான்.
அவள் கனவிற்குள் நுழைந்தான். ஆடிக் கொண்டிருந்த ரஜினியை புறந்தள்ளி விட்டு, ‘அவள் வருவாளா’ என பாடிக் கொண்டிருக்கும் அஜித்தை ரசித்து மெய் மறந்திருந்தாள்.
புன்னகையுடன் அடுத்த டேபிளில் உட்கார்ந்திருந்தவனை பார்த்தான். பாதி அளவே இருந்த விரல்களுடன் அவன் தன் செல் ஃபோனில் எதையோ டைப் செய்து கொண்டிருந்தான். முடித்தவுடன் இவனைப் பார்த்து ‘வெற்றி’ என்பது போல் கட்டை விரலை உயர்த்தினான். கட்டை விரல் பாதி அளவு தான் இருந்தது. இவன் புரியாமல் பார்க்க, இன்றைக்கு போட்ட ஐம்பத்து மூன்றாவது ஸ்டேடஸ் என்றான். ‘ஆதி முதல் அடி முடி
 வரைக்கும் எல்லாம் நம்மளுக்கு தெரியும்லா’ என்றான் தனக்குள்.
‘என்ன பாஸ் டயர்டா’ என்ற குரல் கேட்டு விழித்தான். எதிரே இரண்டு தட்டுகளும் இரு கோப்பைகளில் நூடுல்ஸும் இருந்தன. கையிலிருந்த புத்தகத்தை டேபிளில் வைத்துவிட்டு உட்கார்ந்தான் பிரகாஷ்.
இவன் ஆவலுடன் புத்தகத்தை பிரித்துப் பார்த்தான்.
‘எப்படி இருந்துச்சு சாந்தி?’
‘இந்த நாலு வருஷத்துல இன்னைக்குதான் சூப்பர். சரி சரி சீக்கிரம் கிளம்பு, ஹஸ்பண்ட் வந்திருவார்’
புரட்டி வேறொரு பக்கத்தைப் பார்த்தான்.
‘அவன் வாஷ் பேஸினில் வெற்றிலை எச்சில் போல துப்பினான். அவள் அதை பார்த்து சிரிக்க, ‘நாயே, பீரியடஸ்னா சொல்லக்கூடாதா? என்றான்’
என்ன இது பிரகாஷ்?
குறுங்கதைகள்.
த்தூ… தற்கொலைதான் பண்ணிக்கணும் படிச்சிட்டு. கருமம்.
சரி விடுங்க பாஸ். சாப்பிடுங்க முதல்ல.
இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.
அப்பபோதுதான் மிக நெருக்கமாக நடந்து வந்த ஒரு இளம் பெண்ணும், ஒரு முதிர் இளைஞனும் வலது பக்க சேர்களில் அமர்ந்தனர். புடவையில் அந்தப் பெண் மிக அழகாகவே இருந்தாள், ஒரு சுமாரான நடிகை மாதிரி. கழுத்தில் பட்டையும், அடையாள அட்டையும். அவளை அவன் இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறான். அவசரமாக ஞாபக அடுக்குகளில் துழாவினான். மீண்டும் ஒரு முறை பார்த்தான். அமலாபால் மாதிரி
 இருந்தாள்.
‘என்னா பாஸ் பார்க்குறிங்க, அது அமலாபாலே தான்’
என்னது அமலா பாலா? இங்க ஐடில என்ன வேலை? ஆச்சரியம் கலந்த மென்குரலில் கேட்டான்.
அதையேன் கேக்கிறிங்க. மார்க்கெட் காலி. படம் ஒண்ணும் இல்ல. இங்க டி.சி.எஸ் ல தான் ஹெ.ஆர் ல இருக்காங்க.
கூட இருக்குறது யாரு?
வினய். காக்னிஸண்ட்ல இருக்காரு. நல்ல கவிதை, கதையெல்லாம் எழுதுவாரு. அமலாபாலை பத்தி ஃபேஸ் புக்குல எழுதி எழுதியே அவங்கள கமாத்திட்டார்னா பாத்துக்குங்களேன். சரியான மச்சம் பாஸ்.
கல்யாணம் ஆயிருச்சா?
அது தெரியல பாஸ்.
பேசிக்கொண்டிருக்கும் போது பிரகாஷின் செல் அழைத்தது. பேசியவனின் முகம் அதிர்ச்சியை காட்டியது.
என்ன ஆச்சு பிரகாஷ்?
ஒரு பேட் ந்யூஸ். எங்க மாட்யூல் மேனேஜர் சூசைட் பண்ணிக்கட்டார்.
ஐய்யய்யோ. ஸாரி பிரகாஷ். இவன் மனக்கண்ணில் ஒரு நாற்பத்தைந்து, ஐம்பது வயதுள்ள ஒரு ஆண் தூக்கில் தொங்கும் காட்சி வந்தது. மேற்கொண்டு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
நல்ல ஜாலியான மனுஷன். ரெண்டு பொம்பள பிள்ளைகள். போன மாசந்தான் இங்க அபார்ட்மெண்ட்ல எட்டாவது மாடில பெரிய வீடு வாங்கினார்.  பாவம் அவர் வைஃப் வேலைக்கு கூட போகலை. இனி அந்த குடும்பம் என்ன ஆகுமோ.
ச்சே.பாவம், கம்பெனி எதாவது உதவி செய்யுமா? என்றான் இவன்.
நீங்க வேற. இன்னைக்கு காலைலதான் அவரை வேலை விட்டு தூக்குனாங்க. வீட்டு பால்கனில இருந்து குதிச்சிட்டாராம். ஹெச். ஆர். ல கொஞ்சம் அனுசரிச்சு போயிருக்கலாம். நேர்மையா இருப்பேன், உண்மை இருப்பேன்னு பிடிவாதமா இருந்தார். இருபத்தெட்டே வயசு தான். எல்லாம் முடிஞ்சி போச்சு.
என்னது, இருபத்தெட்டு வயசா?
ம்.
ஏன் பிரகாஷ், உங்களுக்கு யூனியன், லேபர் போர்டெல்லாம் கிடையாதா?
பாஸ் நானே சோகமா இருக்கேன். ஜோக் அடிக்காதிங்க. எங்களுக்கு தெரிஞ்சது ஒண்ணே ஒண்ணுதான், ‘டார்கெட்’
சிறிது நேரம் இருவரும் மௌனமாக இருந்தனர். எதிரே ஆறிய நூடுல்ஸ் பாதி இருந்தது.
பிரகாஷ் எழுந்து கொண்டான். ‘ஸாரி பாஸ். நான் கிளம்பறேன், பில் பே பண்ணிட்டேன். இன்னோரு நாள் பார்க்கலாம்.
பிரகாஷ் சென்ற சில நிமிடங்களில் இவன் எழுந்து கொண்டான்.
கிளம்ப யத்தனித்தபடி அமலாபாலை ஒரு முறை பார்த்தான். அமலாபால் மெனு கார்டை கையில் பிடித்தபடி யாரிடமோ ஃபோனில் பேசிக் கொண்டிருக்க, எதிரில் அமர்ந்திருந்த விநய் , ‘இன்று அனுஷ்கா மாதிரி ஒரு பெண்ணை பார்த்தேன்’ என ஃபேஸ் புக்கில் பதிவிட்டுக் கொண்டிருந்தான்.
மால் ஐ விட்டு இவன் வெளியே வந்தான். இறுக்கி உடை அணிந்து, கழுத்தில் பட்டை தொங்க, பதின்ம வயதை தற்போதுதான் கடந்த, வருங்கால ஐடி அடிமைகளை சுமந்தபடி, மஞ்சள் நிற இஞ்சினியரிங் கல்லூரி பஸ் இவனை கடந்து விரைந்து கொண்டிருந்தது.
அடையாறுக்கு எந்த பஸ் போகும் என விசாரிக்க நடந்தான்.

““மார்க் ஸுக்கர்பெர்க் நகர்”” இல் 2 கருத்துகள் உள்ளன

  1. மென்பொருள் துறை ஊழியர்கள் குறித்து
    சற்று கற்பனை அதிகமாக இருந்தாலும்,
    வார்த்தைகள் மூலம் காட்சிகளைக் கொண்டு வர வைக்கிறது
    இந்தக் கதை, நன்றிகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன