அலுப்பு

 
 A.தியாகராஜன்
 
 

சில சமயங்களில் மூச்சு விடுவது அலுப்பாக இருக்கிறது 

விடுவதை விட்டுவிடலாம் என்று சீரியசாகவே தோன்றுகிறது-

ஏன் வேலைக்குச் சென்றோம் என்று இருக்கிறது-  

கண்ட கழுதைகளின் கீதோபதேசங்களை 

பல சமயங்களில் இந்த கிருஷ்ணர்களை மனதில் சபித்துக் கொண்டு கேட்கையில்-

சில சமயங்களில் ஏதோ ஒருவன் சரி என்று தோன்றும் போது 

ஏன் நான் தெரியாதிருந்தேன் என்று என்னை நானே கரித்துக் கொட்டிக்கொண்டு- 

அலுப்பு –  
அது கோபம் இல்லை-

கோபம் மீண்டும் மீண்டும் வந்தால் அது அலுப்பாகி விடுகிறது-

அலுப்பு மீண்டும் மீண்டும் வந்தால் 

அது கோபமாகி மறுபடி 
ப்யூபா பூச்சி யாவது போல 

அலுப்பாகவே உரு மாறுகிறது –

நீ என்ன சாப்பிடுகிறாயோ அதுவே நீ , 

ஒன்றும் அவ்வளவு பெரிய ஆளில்லை- என்று கேட்கும்போது-
நான் ஜீன்களால்,படிப்பால், சூழலால் ஆடும் கைப்பொம்மை என்று உணர்கையில்- 
அன்பே சிவம் ஏன் சிவப்புக் கலராக இருக்க வேண்டும் என்று-

கோட் சூட் போட்டுக்கொள்ளும்போது-

ரோமில் இருக்கும் போது ரோமானியர்கள் செய்வதை செய் என்றவன் மீது-

வள்ளுவர் மீது உலகத்தோடு ஓட்ட ஒழுகச் சொன்னபோது-

வயிறு ஜிம் போகச் சொன்னபோது-

அசைக்க முடியாத கடவுள் நம்பிக்கை உள்ள அம்மாவைப் பார்த்து-

விட்டு விட சுதந்திரம் இருந்தும் விடாமல், நம்பிக்கை இல்லாத நிலையை நம்பாமல் பல காரியங்களைச் செய்யும் என்மீதும் –

கட்டாயம் வோட்டுப் போடும் அவசியத்தை எண்ணி-

நியாயமான கேள்விகளை கேட்க முடியாத போது-

தெருக்கோடி சாமி திருவிழாவுக்கு டொனேஷன் கேட்க வருபவர்களைப் பார்க்கும் போது-

டெட்ராய்ட் நகரம் திவாலா என்று படிக்கும் போது-

டி வி சிரிப்பு நிகழ்ச்சி களில் மீண்டும் மீண்டும் பார்தத தையே காட்டும் போது-

கிட்ட போகும்போது புஸ் வாணமானது வெடிக்கும் போது-

எனது வரவுகள் மட்டும் டாக்ஸப்ள் என்னும் போது-

நீங்கள் க்யூவில் என்று லக்ஷமாவது தடவை தொலைபேசியில் கேட்டும் யாரிடமும் கத்த வழியின்றி …-

நடக்க இடமில்லாத் வீதிகளில் –
அலுப்பு அலுப்பு அலுப்பு      


 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன