எதையாவது சொல்லட்டுமா…….88

அழகியசிங்கர்


கவிஞர் ஆத்மாநாம் சில அற்புதமான கவிதைகளை எழுதி உள்ளார்.  ஆனால் அவரைப் பற்றி அவர் இருக்கும்போது யாரும் சொல்லவில்லை.  இப்படித்தான் நாம் நம் படைப்பாளிகளைக் கொண்டாடுவதில்லை.  அவர்கள் எழுத்தை அலட்சியப்படுத்துகிறோம்.  ஆத்மாநாம் ஒருமுறை ழ என்ற பத்திரிகையை வைத்துக்கொண்டு ஒரு இலக்கியக் கூட்டத்தில் எல்லோரிடமும் நீட்டிக்கொண்டிருந்தார்.  அவரிடமிருந்து பத்திரிகையை வாங்கியவர்கள் யாரும் அந்தப் பத்திரிகைக்கு உரிய தொகையைக் கொடுக்கவில்லை. ஆத்மாநாம் யார்? அவர் எப்படியெல்லாம் கவிதை எழுதுகிறார் என்பதையெல்லாம் யாரும் மதிப்பிடவில்லை.  பங்களூரில் அவர் தங்கியிருந்தபோது, க.நா.சுவைப் போய் சந்தித்திருக்கிறார்.  தான் எழுதிய கவிதைகளைக் காட்டியிருக்கிறார்.  க.நா.சு அவர் கவிதைகளைப் பற்றி எதுவும் எழுதவில்லை.  உண்மையில் க.நா.சு எல்லாவற்றையும் படித்துவிட்டு உடனே அதைப் பற்றி அபிப்பிராயம் சொல்லக்கூடியவர்.  ஏன் அவருடைய கடைசிக் கால கட்டத்தில் விக்கிரமாதித்யன் கவிதைகளைப் பற்றி கூட தினமணியில் எழுதியிருக்கிறார். ஆத்மாநாம் கவிதைகளைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டார்.  
ஆத்மாநாம் அவசரப்பட்டுவிட்டார்.  அவர் இப்போது இருந்திருந்தால் பெரிய அளவில் வாசகர் வட்டம் இருந்திருக்கும்.  ஏன் அவர் சினிமாவில் பாடல்கள் எழுத ஆரம்பித்திருந்தால், பேசப்படக் கூடிய சினிமா பாடலாசிரியராக மாறியிருப்பார்.  1978 இறுதியில் அவர் எழுதிய பல கவிதைகள் இன்னும்கூட கவிதையை ரசிப்பவர்களின் ஞாபகத்தில் இருக்கிறது. இந்தக் கட்டுரை முடியும் தறுவாயில் அவருடைய கவிதை ஒன்றிலிருந்து ஒருசில வரிகளைக் குறிப்பிட நினைக்கிறேன்.  நான் எழுத வந்தது வேறு. ஏன் ஆத்மாநாம் கவிதை ஞாபகம் வருகிறது என்பதை சொல்ல வருகிறேன்.
நான் சீர்காழியில் உள்ள அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, மயிலாடுதுறையிலிருந்து பஸ்ஸில் பயணம் செய்வேன்.  நான் குடியிருந்த தெருவிற்கு எதிரிலுள்ள பஸ் நிறுத்தத்தில் சிதம்பரம் போகும் பல பஸ்கள் போய் வந்தவண்ணம் இருக்கும்.  
அதில் தொற்றிக்கொண்டு போவேன்.  பஸ் ஒரே கூட்டமாக இருக்கும். நான் எப்போதும் ஏறும் பஸ் கிடைத்தால் அதில் பயணம் செய்யும் ஒருவர் எனக்கு உட்கார இடம் அளிப்பார்.  பஸ் குறிப்பிட்ட நேரத்திற்குக் கிளம்பி குறிப்பிட்ட இடத்திற்குப் போய்விடும்.  நான் பத்துமணி அலுவலகத்திற்கு 9 மணிக்கே கிளம்பி விடுவேன்.  நடுவழியில் பஸ்ஸில் போகும் அனுபவம் அற்புதமானது.  இரண்டு பக்கங்களிலும் வயல்கள், மரங்கள் என்று பிரமாதமான தோற்றத்தில் இருக்கும்.  இப்போதெல்லாம் அந்த இடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கான்கிரீட் கட்டடங்களாக மாறிக்கொண்டு வந்தாலும், இன்னும்கூட சென்னையில் பஸ்ஸில் போகும் மோசமான அனுபவம் அங்கில்லை.  பஸ் வளைந்து வளைந்து போகும் பாதை அற்புதமானது. 
ஒவ்வொருமுறை அலுவலகம் போகும்போது நினைத்துக்கொள்வேன்.இதுமாதிரி அனுபவம் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டுமென்று.  ஆனால் அலுவலகம் போனால் ஏன் மாட்டிக்கொண்டோம் என்று தோன்றும். பிழிய பிழிய வேலை. மூச்சு விடக்கூட முடியாது.
  வங்கியில் காலை நேரத்தில் கூட்டம் அப்பிக்கொள்ளும்.  ஊழியர்கள் எண்ணிக்கை குறைவு.  ஆனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகம்.  நான் அமெரிக்காவிற்கு சென்றபோது  ஒரு வங்கி எப்படி இயங்குகிறது என்று பார்க்கச் சென்றேன்.  அங்குள்ள ஊழியர் ஒருவர் என்னைப் பார்த்தவுடன் புன்னகையுடன் உள்ளே அழைத்துச் சென்றார்.  பின் ஒரு இருக்கையில் அமரச் சொன்னார்.  அங்கு வருகிற வாடிக்கையாளர்களுக்கு காப்பி கிடைக்கும்.  அவர்களே போய் வேண்டுமென்றால் எடுத்துக் குடிக்கலாம். ஊழியர் ஒருவர் வாடிக்கையாளருக்கு சாக்லெட் கொடுப்பார். வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் வங்கிக்குள் நுழைவதில்லை. ஆனால் இந்தியாவில் உள்ள வங்கிகளின் நிலைமை வேறுவிதம்.  வாடிக்கையாளர் கூட்டத்தைப் பார்த்ததும் ஊழியர்கள் அரண்டு போய் விடுகிறார்கள்.  ஒருவழியாக கூட்டத்தைச் சமாளித்து அனுப்புவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும்.  எல்லாக் கூட்டமும் ஒரு குறிப்பிட்ட  நேரத்தில் போய்விடும்.  அதன்பின்னும் அலுவலகத்தில் உட்கார்ந்து அன்றைய பணியை முடிக்க வேண்டும்.
வீடு திரும்பும்போது ஒவ்வொருமுறையும் இரவு ஒன்பது மணி ஆகிவிடும்.  பணியை முடித்தாலும் அவ்வளவு எளிதில் கிளை மேலாளர் வீட்டிற்குப் போக அனுமதிக்க மாட்டார்.  கிளை மேலாளர், நான், இன்னொரு அலுவலர் மூவரும் இரவு 9 மணிக்குமேல் சீர்காழியிலிருந்து பஸ் பிடித்து வீட்டிற்கு வரும்போது கிட்டத்தட்ட 10 மணிமேல் ஆகிவிடும்.கிளை மேலாளர் பஸ்ஸில் ஏறியவுடன் தூங்க ஆரம்பித்து விடுவார்.  நானும் இன்னொரு அலுவலர் மட்டும் பேசிக்கொண்டே வருவோம். சோர்வின் எல்லைக்கு எங்கள் முகங்கள போய்விடும்.  அந்த நீண்ட பாதை வழியாக பஸ் செல்லும்போது இரவு நேரம் வேறுவிதமான தோற்றத்தைக் காட்டிக்கொண்டிருக்கும்.  
ஒருமுறை நாங்கள் அப்படி பஸ்ஸில் வந்துகொண்டிருக்கும்போது ஒரு பெரியவர் நிற்க முடியாமல் அவதிப் பட்டார்.  கிட்டத்தட்ட 80 வயதிருக்கும்.  என் பக்கத்தில் உள்ள இருக்கையில் அவரை உட்காரும்படி சொன்னேன்.  பஸ் டிக்கட் கொடுக்க அவர் சில்லரைகளைத் தேடித் தேடி கொடுத்தார்.  அப்போதுதான் அவரை உற்றுக் கவனித்தேன்.  தொளதொளவென்று பேன்ட் அணிந்திருந்தார்.  சட்டை தாறுமாறாகப் போட்டுக் கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்து, ”எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டேன்.
“மயிலாடுதுறைக்கு..”
“அங்கே யார் இருக்காங்க.”
“யாரும் இல்லை?”
“யாரும் இல்லையா?  மனைவி.”
“செத்துப்போயிடுத்து.”
“உங்களைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லையா?”
“ஒரு பையன் இருக்கான்.  அவன் என்னைப் பார்த்துக்கொள்ள மாட்டான்…என்னைத் துரத்தி விட்டான்..”
அவரைச் சற்று உற்றுப் பார்த்தேன். “நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?”
“பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறேன்.”
அவர் சொன்னதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  
        “ஏன் சீர்காழி வந்தீர்கள்?”
“நான் மயிலாடுதுறை பஸ் நிலையம் பக்கத்தில்தான் பிச்சை எடுப்பேன்.  ஒரு மாறுதலுக்காக சீர்காழி வந்தேன்…”
“எதாவது கிடைத்ததா?”
“ஒண்ணும் சரியாய் கிடைக்கலை…ஒருத்தன் என்னை அடிச்சிட்டான்…”
சீர்காழியில் யாரிடமோ அடியை வாங்கிக் கொண்டு என் பக்கத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் பிச்சைக்காரரைப் பார்த்து எனக்கு வருத்தமாக இருந்தது.
நான் குடியிருந்தது வள்ளலார் கோயில் தெரு.  ஒவ்வொரு வியாழக்கிழமை குரு ஸ்தலம் என்பதால் கூட்டம் கூடியிருக்கும்.  அங்கு எப்போதும் காலை நேரத்தில் ஏழெட்டுப் பேர்கள் கையில் ஓடை வைத்துக்கொண்டு வரிசையாக உட்கார்ந்து இருப்பார்கள்.  எல்லோரும் பார்க்க பளிச்சென்று இருப்பார்கள்.  காவி உடை அணிந்திருப்பார்கள்.அவர்களைப் பார்க்கும்போது சிவனடியார்கள் இப்படித்தான் இருப்பார்களா என்று நினைத்துக்கொள்வேன்.  எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருக்கும்.  எல்லோருக்கும் சரிசமமாக பிச்சை கிடைக்குமா என்ற சந்தேகம்தான்.  ஒருவரைப் பார்த்துக் கேட்டேன்.  “உங்கள் எல்லோருக்கும் சரிசமமாகப் பிச்சைக் கிடைக்குமா?” என்று.  
அவர்களில் ஒருவர் சொன்னார்.  “எங்களுக்குக் கிடைப்பதை நாங்கள் சமமாகப் பிரித்துக்கொள்வோம்” எல்லோரும் குடும்பத்தை விட்டு வந்தவர்கள்.  எந்த நோயும் அவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை.  எப்போதும் நடிகர் நடிகைகளையே பேட்டி காணும் இந்த டிவிக்காரர்கள், இவர்களைப் போன்றவர்களை ஏன் பேட்டி காண்பதில்லை என்று தோன்றும்.
எனக்கு அடிக்கடி மனதில் ஒலித்துக்கொண்டிருக்கும் ஆத்மாநாமின் பிச்சை என்ற கவிதை.  அதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
நீ ஒரு பிச்சைக்காரனாய்ப் போ
பிச்சை பிச்சை என்று கத்து
உன் கூக்குரல் தெருமுனைவரை இல்லை
எல்லையற்ற பெருவெளியைக் கடக்கணும்
உன் பசிக்காக உணவு
சில அரிசி மணிகளில் இல்லை
உன்னிடம் ஒன்றுமே இல்லை
சில சதுரச் செங்கற்கள் தவிர
உனக்குப் பிச்சையிடவும் ஒருவருமில்லை
உன்னைத் தவிர.
                …………………………………….
பஸ்ஸில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த பிச்சைக்காரருக்கு நானும் அலுவலக நண்பரும் கொஞ்சம் பணம் கொடுத்தோம்.  
“இனிமேல் மயிலாடுதுறையை விட்டு சீர்காழிக்கு பிச்சை எடுக்க இதுமாதிரி வராதீர்கள்,” என்று அறிவுரை கூறினேன். 
       (அம்ருதா செப்டம்பர் 2013 இதழில் பிரசுரமானது)

“எதையாவது சொல்லட்டுமா…….88” இல் ஒரு கருத்து உள்ளது

  1. நிதர்சனத்தில் யாருக்கும் எதுவும் சொந்தமில்லை… உலகில் அனைவரும் பிச்சைக்காரர்கள்தான்… ஆனால் எல்லோருக்கும் சமமாக எதுவும் கிடைக்கவில்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன