பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு

 
அழகியசிங்கர்
 

13
 
பந்தநல்லூர் என்ற கிராமத்திற்குச் செல்லும்போது எனக்கு அசிக்காடுதான் ஞாபகத்திற்கு வரும்.  அசிக்காடு போகும் வழியில் உள்ள பாதை குறுகலானது  மறையூர் அல்லது மல்லியம் வழியாக அசிக்காடு போகலாம்.  அந்தக் காலத்தில் ரோடு சரியாக இருக்காது.  மாட்டு வண்டியில்தான் போக வேண்டும்.  பலமுறை நான அசிக்காடு கிராமத்திற்குச் சென்றிருக்கிறோம்.  ஆனால் ஒருமுறை நான், என் தம்பி, என் பெரியப்பா பிள்ளைகளுடன் போனதை மறக்க முடியாது.  அந்த முறை என் நெருங்கிய உறவினர் இறந்துவிட அசிக்காட்டில் உள்ள என் பெரிய பெரியப்பா குடும்பம் அசிக்காடு கிராமத்தை விட்டே சென்றுவிட்டார்கள்.  அந்த இரண்டு மூன்று நாட்கள் சாப்பிடுவதற்கே நாங்கள் சிரமப் பட்டோம்.  ஒரு வீட்டில் திவசம் நடந்துகொண்டிருந்தது.  அவர்கள் வீட்டில் சாப்பிடக் கூப்பிட்டார்கள்.  நாங்கள் மதியம் 2 மணிவரை ஒன்றும் சாப்பிடாமல் காத்திருந்தோம். 

ஆனால் பந்தநல்லூர் இன்னும் பெரிய கிராமம்.  அடிக்கடி பஸ்கள் போய்க்கொண்டிருக்கும்.  நான் திரும்பவும் மயிலாடுதுறைக்கு வந்துவிட்டதால், அசிக்காடு என்ற கிராமத்திற்கும், பந்தநல்லூர் கிராமத்திற்கும் அடிக்கடி சென்று கொண்டிருப்பேன். 

அகலமான பாதையில் பந்தநல்லூர் சென்று வருவது ஒரு இனிமையான அனுபவம்.  இருபக்ககம் வழியில் தென்படும் பசுமை நிறைந்த வயல்கள்.  உயரம் உயரமான பனை மரங்கள். பறவைகளின் கீச் கீச் சப்தம். டூவீலரில் வந்து கொண்டிருக்கும்போது நடு நடுவே பாம்புகள் ஓடும்.  சில சமயம் பாம்பை மிதித்துவிட்டு பரக்க பரக்க ஓடுவேன்.  வண்டியில் பாம்பு சுருண்டு விடுமா என்று பயந்திருக்கிறேன்.  ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. 
நெருக்கடியான சென்னை வாழ்க்கையை விட்டு விட்டு இப்படி வந்ததுதான் பெரிய மாற்றம் என்று தோன்றுகிறது. 

 அழகியசிங்கரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ‘உன் அனுபவம்தான் என் அனுபவம்,’ என்றார். 
 
 ‘எப்படிச் சொல்கிறீர்கள்?’ என்றேன்.
 ‘பொதுவாக அனுபவம் என்பதை எப்படிச் சொல்கிறோம்?’
 ‘நமக்கு ஒன்று ஏற்படுவதை அனுபவமாகக் கொள்கிறோம்.’
 ‘அனுபவம் என்ற ஒன்று தனியாக நிகழ்வதில்லை.  24மணி நேரமும் நம்மிடம் நிகழும் எதுவும் ஒரு அனுபவம்தான்.’
 அழகியசிங்கரிடம் பேசிக்கொண்டிருந்தபோதுதான் ஒன்று ஞாபகம் வந்தது.  ஒருமுறை அசிக்காட்டில் நான் இருந்தபோது, வாசல் திண்ணையில் போய் அமர்ந்துகொண்டேன்.  வெறுமே சாய்ந்து படுத்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் என்னைச் சுற்றிலும் உள்ளவற்றை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தேன்.  காலை பொழுது மெதுவாக மதியம் பொழுதாக மாறியது.  பின் மாலைப் பொழுது இருட்டு என்று முடியத் தொடங்கியது.  நான் இருந்த பகுதி.  அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி. நான் அதை உணர்ந்தேன்.  என்னால் அப்படிப்பட்ட ஒரு அமைதியைக் கலைக்க முடியாது.  எனக்கு பொழுது போவது ஒரு பொருட்டாக தோன்றவில்லை.
 ‘அந்தப் பேரமைதிகூட ஒரு அனுபவம்,’ என்றால் அழகியசிங்கர்.
 ‘ஆனால் அந்த அனுபவத்தை எப்படி கதையாகக் கொண்டு வருவது?’
 ‘நாம் பார்ப்பது, படிப்பது, நமக்கு ஏதோ ஒன்று நிகழ்வது எல்லாம் அனுபவம்தான். இந்த அனுபம் நம் மனதில் குவியும்போது கதையாக மாறுகிறது.’
 ‘நமக்கு நிகழாத ஒன்று கதையாகக் கொண்டு வர முடியுமா?’
 ‘எதை வேண்டுமானாலும் கதையாக எழுதலாம்.  முழுக்க முழுக்க கற்பனையைக் கூட கதையாக எழுதலாம்.  ஆனால் கதையில் நம்பகத்தன்மை வேண்டும்.’
 ‘ஒரு எழுத்தாளர் குறிப்பிட்டிருக்கிறார்.  அவர் வாழ்க்கையில் நடப்பதையே கதையாக எழுதுவது இல்லையாம்.’
 ‘நாம் அப்படி நினைப்பது இல்லை.  நம் வாழ்க்கையில் நடப்பது, இன்னொருவர் வாழ்க்கையில் நடப்பது என்று. பொதுவாக அனுபவம் என்ற ஒன்று எல்லோருக்கும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.  எதை நம்பும்படியாகச் சொல்கிறோமோ அதுதான் கதையாக நிற்கிறது.’
                                                                                                                               (இன்னும் வரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன