பந்தநல்லூரில் கிடைத்த பதவி உயர்வு
அழகியசிங்கர்
6.

நாம் எதைப் பெறுவதாக இருந்தாலும் அதற்குக் கூலி கொடுத்தாக வேண்டும்.  பந்தநல்லூர் பதவிக்கு நான் நன்றாகவே கூலி கொடுத்துவிட்டேன்.   இன்னும் யோசிக்கப்போனால் இதைப்பற்றி ஏன் இப்படி தீவிரமாக யோசிக்க வேண்டுமென்று தோன்றியது.  அழகியசிங்கரிடம் சொன்னபோது, ”ஒருவிதத்தில் சரி, இன்னொரு விதத்தில் சரியில்லை,” என்றார்.
கும்பகோணம் செல்லும் அரசாங்கப் பஸ்ஸில் ஏறிக்கொண்டேன்.  கையில் ஒரு புத்தகம் வைத்திருந்தேன்.  அந்தப் புத்தகத்தின் பெயர்.  கொத்தமங்கலம் சுப்பு எழுதிய பந்தநல்லூரில் பாமா.  என்னால் அந்தப் புத்தகத்தை எடுத்து சில பக்கங்கள்கூட படிக்க முடியவில்லை.  ஏன் என்று தெரியவில்லை.  எல்லோரையும் விட்டுவிட்டு வந்துவிட்டேன்.    
புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்கு அழகியசிங்கர் மூலம்தான் ஏற்பட்டது. அவர்தான் எங்கே புத்தகம் கிடைத்தாலும் விலைக்கு வாங்கி பத்திரப்படுத்துவார். அசோகமித்திரன், ஜானகிராமன் என்று வித்தியாசமான எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படிக்கக் கொடுப்பார். ஆனால் அதெல்லாம் ஆரம்பத்தில்தான். எனக்கும் அழகியசிங்கருக்கும் நட்பு என்பது 35 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது.  
ஆரம்பத்தில் நாங்கள் புத்தகங்கள் படிப்பதைப் பற்றிதான் பேசிக்கொண்டிருப்போம். என்னை வைத்து அவர் எழுதும் எழுத்துக்களையும் நான் படிப்பேன்.  என் நிழல் நீதான் என்பார் அழகியசிங்கர். உன் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக்கொண்டு வருகிறேன்.  அதை வைத்துத்தான் நான் எழுத முடிகிறது என்பார். நான் வெறுமனே புத்தகம் படிப்பவன்.  சிலசமயம் அழகியசிங்கர் படைப்புகளைப் படித்து என் அபிபப்பிராயத்தைச் சொல்லாமல் இருக்க மாட்டேன்.  
புத்தகம் படிப்பதுதான் உலகம் என்று நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம். நம்மைச் சுற்றிலும் புத்தகம் படிக்காதவர்களே இருக்கிறார்கள்.  யாரிடம் புத்தகம் படிப்பது பற்றி பேசுவது. அதேபோல் நானும் அழகியசிங்கரும் சந்தித்தால் புத்தகங்கள் பற்றி எழுத்தாளர்களைப் பற்றி பேசிக்கொண்டே இருப்போம்.  யாராவது எங்கள் பக்கம் வந்தால் போரடித்து ஓடிப்போய் விடுவார்கள்.  
நான் பந்தநல்லூருக்குப் போவது அழகியசிங்கருக்கு கை ஒடிந்தாற்போல் ஆகிவிடும்.  யாரும் அவரிடம் புத்தகங்களைப் பற்றி இலக்கியக் கூட்டங்களைப் பற்றி பேச மாட்டார்கள்.  
                                                                                                                                (இன்னும் வரும்)   

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன